Tamilnadu

மெரினா கடற்கரையில் காதல் ஜோடிகளிடம் தகராறு செய்த ரவுடிகள்.. தனியாகத் துணிச்சலுடன் தடுத்த பெண் காவலர்!

நேற்று பொது விடுமுறை என்பதால் சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அதிகம் வந்த வண்ணம் இருந்துள்ளனர். அப்போது காதல் ஜோடி ஒன்று இருசக்கர வாகனத்தில் கடற்கரைக்கு வந்தனர். தங்களது வாகனங்களை நிறுத்தும்போது, இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவர்களது வாகனத்தை வேண்டும் என்றே இடித்து தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது, இளம் பெண்ணை தாக்கி செல்போனையும் பறித்துள்ளனர். பிறகு அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் கலா, வேண்டும் என்றே தகராறு செய்த வாலிபர்களை மடக்கித் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்.

இதையடுத்து அந்த வாலிபர்கள் காவலர் கலாவையும் தகாத வார்த்தையில் திட்டியுள்ளனர். பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். உடனே இது குறித்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார்.

பிறகு போலிஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அவர்கள் யார் என்பத குறித்து விசாரணை நடத்தினர். இதில், காதல் ஜோடிகளிடம் கதராறு செய்துவிட்டு செல்போனை பறித்து சென்று தடுக்க காவலரிடமும் அநாகரிகமாக நடந்து கொண்டது கொலை உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய வால் டாக்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த உதயகுமார், தமிழரசன் வசந்தகுமார், சோமசுந்தரம் ஆகிய நான்கு பேரை என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலிஸார் ரவுடிகள் நான்கு பேரையும் கைது செய்தனர். சென்னை மெரினா கடற்கரையில் காதல் ஜோடிகளிடம் தாறுமாறாகச் செய்த ரவுடிகளை தனி நபராக இருந்து தட்டிக் கேட்டு குற்றவாளிகளை பிடித்த பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Also Read: சூட்கேஸில் தலை இல்லாமல் இருந்த பெண்ணின் சடலம்.. விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி.. மும்பையில் பயங்கரம் !