Tamilnadu

”அவ்வளவுதான் உயிர் போயிடுச்சினு நினைச்சோம்.. ஒடிசா ரயில் விபத்தில் உயிர் தப்பியவர்கள் சொன்ன அதிர்ச்சி!

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இதனால் ரயிலின் சில பெட்டிகள் அடுத்த தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது அந்த தண்டவாளத்தின் வழியாக வந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு கிடந்த ரயில் வெட்டிகள் மீது மோதியது. அதேபோல் அடுத்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயிலும் தடம்புரண்டு இருந்த ரயில் வெட்டிகள் மீது மோதியது.

நேற்றிலிருந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒடிசா, மேற்குவங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளும் மற்றும் ஒன்றிய அரசுகளும் ஒத்துழைப்புடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த கோர விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் 1000க்கு மேல் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேலும் தவறான சிக்னல் கொடுத்தால் இந்த விபத்து நடந்துள்ளது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே விபத்துக்குள்ளான ரயில் வழித்தடத்தில் ரயில் விபத்துகளைத் தவிர்க்க ‘Kavach’ என்று அழைக்கப்படும் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு (ATP Automatic Train Protection) அமைக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து உயிர் தப்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பயணிகள் புவனேஸ்வரிலிருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்துள்ளனர்.

பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், "கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சரியான சிக்னல் கிடைக்காததால் சரக்கு ரயில் மீது மோதியது. ரயில் ஓட்டுநர் உடனே பிரேக் பிடித்து வண்டியை நிறுத்தியதால்தான் நாங்கள் இப்போது உயிரோடு இருக்கிறோம். இல்லை என்றால் சரக்கு ரயில் மீது வேகமாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியிருக்கும்.

அதிகமான இளைஞர்கள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். அனைவரும் வேலைக்குச் சென்றவர்கள். நான் பயணித்த பெட்டியும் விபத்தில் சிக்கியது. அப்போது அவ்வளவுதான் வாழ்க்கை முடிந்தது என்று நினைத்தேன். ஆனால் இப்போது அதிர்ஷ்டவசமாக உயிரோடு இருக்கிறேன்.

ஒவ்வொரு பெட்டியும் தனித்தனியே சிதறிக் கிடந்தது. எங்கள் கண் முன்னாடி பலரின் சடங்கள் இருந்தது. விபத்து நடந்த 10,20 நிமிடத்திற்கு பிறகுதான் மீட்புப் பணிகள் நடக்கத் தொடங்கியது. பலர் ரத்த காயங்களுடன் இருந்தனர்" என தெரிவித்துள்ளனர்.

Also Read: ஒடிசா கோர விபத்திற்கு யார் பொறுப்பு?.. ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பதவி விலக வேண்டும்: கே.எஸ்.அழகிரி!