Tamilnadu
“சிங்கப்பூர், ஜப்பான் சென்றார்; வென்றார்; வந்தார்..”: முதலமைச்சருக்கு புகழாரம் சூட்டிய தினத்தந்தி நாளேடு!
“சிங்கப்பூர், ஜப்பான் சென்றார், வென்றார். "தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டு, முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து திரும்பி வந்தார்'' என்ற பெருமைமிகு வாழ்த்துகளை முதல்-அமைச்சருக்கு தமிழ்நாடு தெரிவிக்கிறது” என தினத்தந்தி நாளேடு தலையங்கம் தீட்டி புகழாரம் சூட்டியுள்ளது.
இதுதொடர்பாக தினத்தந்தி நாளேடு தீட்டியுள்ள தலையங்கத்தில், “முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு 9 நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றுவிட்டு நேற்றிரவு சென்னை திரும்பினார். இந்த இரு நாடுகளிலும் பார்க்க வேண்டிய இடங்கள் எவ்வளவோ இருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் பார்க்காமல், அங்குள்ள தொழில் அதிபர்களை சந்திப்பதற்கே தனது பயணத் திட்டத்தை வகுத்துக்கொண்டார்.
எந்தவொரு செயலுக்கும் ஒரு இலக்கு நிர்ணயித்தால்தான் அதை அடைய எடுக்கப்படும் முயற்சிகளில் ஒரு வேகம் இருக்கும். அந்த வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடனேயே 2030-ம் ஆண்டில் தமிழ்நாட்டு பொருளாதாரத்தை ரூ.75 லட்சம் கோடியாக்குவதே தனது இலக்கு, குறிக்கோள், லட்சியம் என்று பிரகடனப்படுத்தினார். இந்தாண்டு தமிழ்நாட்டின் பொருளாதாரம் ரூ.23.5 லட்சம் கோடியாக இருக்கும்.
இது 2030-ம் ஆண்டுக்குள் ரூ.75 லட்சம் கோடியாக வேண்டுமென்றால், இன்னும் 3 மடங்கு வளர்ச்சியைக் காண வேண்டும். அதை அடைய தொழில் வளம், வேலைவாய்ப்புகள் பெருக வேண்டும், உற்பத்தி அதிகரிக்க வேண்டும். எனவே அவர், ஆட்சி பொறுப்பை ஏற்றவுடனேயே தொழில் வளர்ச்சி பெருக, புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டு பல முயற்சிகளை முனைப்புடன் எடுத்துக்கொண்டார்.
தமிழ்நாட்டு தொழில் அதிபர்கள், பிற மாநில தொழில் அதிபர்கள், வெளிநாட்டு நிறுவன தொழில் முதலீடுகள் என்று அவர் எடுத்துக் கொண்ட முயற்சியின் விளைவாக கடந்த இரு ஆண்டுகளில் ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்து 339 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதம் அவரது துபாய் பயணத்தின்போது ரூ.6 ஆயிரத்து 100 கோடி முதலீடுகளை ஈர்க்கும் 6 நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில் சில திட்டப்பணிகள் தொடங்கி விட்டன. வெளிநாட்டு பயணத்துக்கு முன்னதாக ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளில் உள்ள 'மிட்சுபிஷி' நிறுவனம் சார்பில் ரூ.1,891 கோடி முதலீட்டில் திருவள்ளூர் மாவட்டம் பெருவாயல் கிராமத்தில் ஆலை அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இப்போது சிங்கப்பூர் சென்ற அடுத்த நாளே முன்னணி நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுடன் தனித்தனியாக சந்திப்பை மேற்கொண்ட அவர், அடுத்த ஆண்டு சென்னையில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். அங்குள்ள மந்திரிகளையும் சந்தித்தார். 5 நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஒரு நிறுவனம் ரூ.312 கோடி முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அடுத்து ஜப்பான் நாட்டில் ஒசாகா நகருக்கும், டோக்கியோ மாநகருக்கும் சென்று தொழில் அதிபர்களை தனித்தனியாகவும், கலந்துரையாடலாகவும் கொண்ட கூட்டங்களை நடத்தி சென்னையில் அடுத்த ஆண்டு நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார். ஒசாகாவில் இருந்து டோக்கியோவுக்கு 'புல்லட்' ரெயிலில் பயணம் செய்தார். ஜப்பானில் மட்டும் 7 நிறுவனங்களோடு ரூ.1,029 கோடியே 90 லட்சத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குறிப்பாக ரத்தஅழுத்த மானிட்டர் போன்ற மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் ஒம்ரான் நிறுவனம் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில்தான் தொழிற்சாலை அமைக்க இருக்கிறது. சிங்கப்பூர், ஜப்பான் சென்றார், வென்றார். "தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டு, முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து திரும்பி வந்தார்'' என்ற பெருமைமிகு வாழ்த்துகளை முதல்-அமைச்சருக்கு தமிழ்நாடு தெரிவிக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!