Tamilnadu
”ஒன்றிய அரசின் அவசரச் சட்டத்தை திமுக எதிர்க்கும்”: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (01.06.2023) முகாம் அலுவலகத்தில் தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-
தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் - பஞ்சாப் மாநிலத்தினுடைய முதலமைச்சர் பகவந்த் மான் அவர்களும் இன்று என்னை சந்தித்திருக்கிறார்கள்.
கெஜ்ரிவால் அவர்களைப் பொறுத்தவரையில், நான் தில்லிக்கு செல்லுகிற போதெல்லாம் அடிக்கடி அவரை சந்திக்கிற வாய்ப்பைப் பெறுவது உண்டு. தில்லியில், மாடல் ஸ்கூல், மாடல் கிளாஸ் ரூம்ஸ் என்ற ஒரு அற்புதமான திட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதை அறிந்து, அதுபோல் தமிழ்நாட்டிலும் ஏற்படுத்த வேண்டும் என்று கருதி அந்த மாடல் பள்ளிகளை, மாடல் கிளாஸ் ரூம்களையெல்லாம் நானும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களும் நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தினோம்.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது, அதுவும் பெண்களுக்காக பல திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது என்று உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். அந்த திட்டத்தில் ஒன்றாக மாணவியர்கள், பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குள் நுழைகிறபோது, அவர்களது கல்விக்கு உதவி செய்ய வேண்டும், நிதி உதவி வழங்கிட வேண்டும் என்று முடிவெடுத்து, ‘புதுமைப்பெண்’ என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி அதன் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு வழங்கக்கூடிய ஒரு திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறோம்.
அந்தத் திட்டத்தை தில்லி முதலமைச்சர் அவர்கள் நேரடியாக வந்து சிறப்பிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரும் ஒப்புதல் தந்து, வருகை தந்து அதை சிறப்பித்தார்கள். அப்படி வந்த நேரத்தில், கோட்டூர்புரத்தில் அமைந்திருக்கக்கூடிய அண்ணா நூற்றாண்டு நூலகத்தையும் பார்வையிட்டு பாராட்டி மகிழ்ந்தார்கள்.
தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பொறுத்தவரை ஒரு நல்ல நண்பராக என்னோடு பழகிக் கொண்டிருக்கக்கூடியவர். நானும் அவரிடத்திலே நல்ல நண்பராக பழகிக் கொண்டிருக்கிறேன்.
தில்லி முதலமைச்சருக்கு அதேபோல் அவர் சார்ந்திருக்கக்கூடிய அவர் தலைவராக இருக்கக்கூடிய ஆம் ஆத்மி கட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து, . மோடி தலைமையில் இருக்கக்கூடிய பிஜேபி ஆட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக்கூடிய ஆட்சியை சுதந்திரமாக செயல்படவிடாமல் பல்வேறு நெருக்கடிகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் தில்லி துணைநிலை ஆளுநர் மூலமாகத் பல்வேறு தொல்லைகளெல்லாம் தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. "பணியாளர்கள்" தொடர்பாக 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் தில்லி அரசுக்கு சாதகமான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஆனால் அது நிறைவேறக்கூடாது என்ற ஒரு எண்ணத்தோடு பா.ஜ.க ஆட்சி, அதை எதிர்த்து ஒன்றிய அரசு இன்றைக்கு ஒரு அவசரச் சட்டத்தை பிறப்பித்து இருக்கிறது.
இந்த அவசரச் சட்டத்தை நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்க்கும், அதில் எந்த மாற்றமும் கிடையாது. எனவே, இதுகுறித்து இரு முதலமைச்சர்களும் இன்று எங்களோடு கலந்து பேசி, மற்ற மாநிலத்தில் இருக்கக்கூடிய முதலமைச்சர்களும் பல்வேறு கட்சியினுடைய தலைவர்களும் என்னென்ன நிலையில் இருக்கிறார்கள் என்ற அந்த சூழ்நிலையைப் குறித்து நாங்கள் கலந்து பேசினோம். ஆகவே, அந்த வகையில் இந்தக் கூட்டம் நடந்திருக்கிறது. நிச்சயமாக, எல்லா மாநிலத்தினுடைய முதலமைச்சர்களும் அகில இந்திய அளவிலுள்ள கட்சியின் தலைவர்களும் இதற்கு ஆதரவு தரவேண்டும் என்று நான் இந்த நிகழ்ச்சியின் மூலமாக அவர்களையெல்லாம் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த சந்திப்பு என்பது கடந்த வாரமே நடந்திருக்க வேண்டும். சென்ற வாரம் தில்லியினுடைய முதலமைச்சர் கெஜ்ரிவால் அவர்கள் என்னோடு தொடர்பு கொண்டு நேரம் கேட்ட நேரத்தில் அப்போது நான் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்லுகிறேன், வந்தவுடன் தேதி தருகிறேன் என்று சொன்னேன். நேற்று இரவு தான் நான் சென்னைக்கு வந்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். வந்தவுடனே அவரை சந்திக்க நேரம் கொடுத்து, அந்த வகையில்தான் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. மிக ஆரோக்கியமாக, நாட்டிலே ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அந்த உணர்வோடு இந்தக் கூட்டம் நடந்திருப்பது உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது. ஆகவே இது தொடர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
கேள்வி: 12ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டம் பற்றி பேசியிருக்கிறீர்களா?
முதலமைச்சர் பதில்: அது பற்றியும் பேசியிருக்கிறோம். அது சூழ்நிலை வருகிறபோது சொல்கிறோம். 12-ஆம் தேதி நிதிஷ்குமார் கூட்டத்தைக் கூட்டுவதாக முடிவு செய்திருக்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியும் அதில் கலந்துகொள்ள முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. காரணம் ராகுல் காந்தி வெளிநாட்டிற்கு சென்றிருக்கிற காரணத்தால். அதேபோல் 12 ஆம் தேதி என்னைப் பொறுத்தவரையில், நானும் கலந்துகொள்ள முடியாத நிலை. காரணம், ஒவ்வொரு வருடமும் மேட்டூர் அணையை திறந்துவைக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. ஆகவே, தேதியை மாற்றி வையுங்கள் என்று நானும் சொல்லியிருக்கிறேன், கார்கே அவர்களும் சொல்லியிருக்கிறார். இப்போது கெஜ்ரிவால் அவர்களிடத்தில் நாங்கள் சொல்லியிருக்கிறோம். அவரும் தேதி மாற்றுவதற்கான முயற்சியில் நான் ஈடுபடுகிறேன், கட்டாயமாக மாற்றி வைக்கப்படும் என்ற உறுதியை தந்திருக்கிறார்.
கேள்வி: ஒன்றிய அரசு, மாநில அரசினுடைய அதிகாரங்களை தொடர்ந்து பறித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இப்படியான ஒரு ஒன்றிணைப்பு என்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
முதலமைச்சர் பதில்: ஜனநாயகத்தைக் காப்பதற்கு இப்படிப்பட்ட ஒருங்கிணைப்பு அவசியம் தேவை. இது தொடர வேண்டும். இது நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டுமல்ல, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இது தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம், அது தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!