Tamilnadu

“எனது வாழ்நாளில் மறக்க முடியாது.. ஜப்பான் புத்துணர்ச்சியை உருவாக்கி இருக்கிறது”: முதலமைச்சர் நெகிழ்ச்சி!

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். 23.5.2023 அன்று சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர், தனது இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது ஜப்பானில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, இன்று (29.5.2023) டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (Japan External Trade Organization – JETRO) இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு, ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடு செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் கேட்டு அழைப்பு விடுத்தார். இம்மாநாட்டில் சுமார் 200 ஜப்பானிய நிறுவனங்களின் மூத்த மேலாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :-

“எங்களுடைய ஜப்பான் பயணத்தில் இன்று தலைநகரான டோக்கியோவுக்கு வந்துள்ளோம். டோக்கியோவில் நிலநடுக்கம் ஏற்பட்ட செய்தியறிந்து, அதிர்ச்சியாகப் பலரும் என்னிடம் நிலைமை என்ன என்று கேட்டார்கள். ‘’டோக்கியோவைப் பொறுத்தவரை இது சாதாரணச் செய்தி! இங்கே நிலநடுக்கம் - எரிமலை வெடிப்புகள் என்பவை அடிக்கடி நடப்பவை, அதற்கிடையேதான் துணிச்சலோடு மக்கள் வாழ்கிறார்கள், செயல்படுகிறார்கள், வெற்றியும் பெற்றுக் காட்டுகிறார்கள்’’ என்றேன்.

இயற்கை நெருக்கடியாக இருந்தாலும் - செயற்கை நெருக்கடிகளாக இருந்தாலும் அதனை வென்று காட்டுபவர்கள் ஜப்பானியர்கள்!

இரண்டு நாட்கள் சிங்கப்பூரிலும் - மூன்று நாட்களாக ஜப்பானிலும் இருக்கிறேன். இங்கு பார்க்கும் நிறுவனங்களின் அதிபர்கள் - தலைவர்கள் - பணியாளர்கள் - அலுவலர்கள் ஆகியோர் முகத்தில் நான் பார்க்கும் உற்சாகம் என்பது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் உருவாக்கி இருக்கிறது.

ஜப்பான் நாட்டின் தலைநகராக - உலகின் மிகப்பெரிய பொருளாதார நகரங்களில் ஒன்றாக - உலகப் புகழ்பெற்ற 500 நிறுவனங்களில் 51 நிறுவனங்களின் தலைமையகங்கள் இயங்கும் நகராக டோக்கியோ விளங்குகிறது.

இரண்டாம் உலகப் போரில் தாக்குதலுக்கு உள்ளானாலும், உழைப்பும் செயல்திறனும் கொண்டு உயர்ந்து நிற்கும் டோக்கியோ நகருக்கு வந்திருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்.

* நாடு தழுவிய போக்குவரத்து,

* பெரும் கடைகள் மற்றும் உணவகங்கள்,

* உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள்,

* புத்துணர்ச்சி ஊட்டும் இயற்கை இடங்கள்

* வரலாற்று நினைவுச் சின்னங்கள்,

* உயரமான வானளாவிய கட்டடங்கள்,

* தனித்துவமான அருங்காட்சியங்கள் - என அமைந்து ஒரு நகரம் எப்படி அமைய வேண்டும் என்பதை டோக்கியோ எடுத்துக் காட்டுகிறது.

நகரத்தின் அனைத்து எரிசக்தித் தேவைகளும், ஹைட்ரஜன், காற்றாலை மின்சாரம் மற்றும் சூரியஒளி எரிசக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தியால் பூர்த்தி செய்யப்படுவதை கண்டு நான் வியந்து போகிறேன். இது எனது கனவுகளின் அகலத்தை பெரிதாக்குகிறது. எங்கள் தமிழ்நாட்டை எப்படி உருவாக்க நினைக்கிறோமோ - அந்தக் கனவுப் பரப்பை நான் இங்கு பார்க்கும் காட்சிகள் அதிகப்படுத்தி இருக்கிறது. இதனை எனது வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாது.

2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நாங்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை மிகப் பெரிய அளவில் தமிழ்நாட்டில் - சென்னையில் நடத்திட திட்டமிட்டு இருக்கிறோம். உங்களை அந்த மாநாட்டிற்கு வரவேற்றிடவும், முதலீடுகளை பெருமளவில் எங்கள் மாநிலத்திற்கு அளித்திடவும் உங்களை கேட்டுக் கொள்ளும் விதமாக, இன்று நான் உரையாற்றுகிறேன்.

இந்தியாவும் ஜப்பானும் ஆசியாவின் இரண்டு பெரிய மற்றும் பழம்பெரும் ஜனநாயக நாடுகள். குறிப்பாக சொல்லப்போனால், ஜப்பான் நாட்டின் அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவியை (Official Development Assistance – ODA) அதிகம் பெறும் நாடு இந்தியாதான்.

இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகள், சமீப காலங்களில் மிகப்பெரும் எழுச்சி கண்டுள்ளது. இந்திய சந்தைக்குள் நுழையும் ஜப்பானிய நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவுக்குள், தமிழ்நாடுதான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த முன்னணி மாநிலமாக விளங்குகிறது. தெற்காசியாவிலேயே, முதலீடுகளை ஈர்த்திடஉகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திட நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

நிசான், தோஷிபா, யமஹா, கோமாட்ஸூ, ஹிட்டாச்சி போன்ற மிகப்பெரும் நிறுவனங்கள், தங்கள் உற்பத்தித் திட்டங்களைத் தமிழ்நாட்டில் அமைத்துள்ளது.

அது மட்டுமல்ல. ஜப்பான் - இந்தியா முதலீடு மேம்பாட்டுக் கூட்டாண்மை திட்டத்தின்கீழ் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 தொழில் நகரியங்களில், 3 நகரியங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.

தமிழ்நாடு அரசைப் பொறுத்த வரையில், எப்போதுமே, ஜப்பான் நாட்டின் உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு முயற்சிகள் தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. பொருளாதார, வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்துடன் (METI) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம், JETRO நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், ஜப்பான் வணிக மற்றும் தொழில் பேரவை (JCCI) ஆகிய நிறுவன ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு அல்லாமல், கனகாவா, ஹிரோஷிமா மாகாணங்களுடன் பொருளாதார புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் மிகப் பெரும் வங்கிகளான, பேங்க் ஆஃப் டோக்கியோ – மிட்சுமிஷி, மிசுஹோ வங்கி போன்ற வங்கிகளுடன் புரிந்துணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பல மாகாணங்களுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைத்திடுவதில் முக்கிய பங்கு ஆற்றிடும் விதமாக, 2030-2031 நிதியாண்டிற்குள், 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான ஒரு இலட்சிய இலக்கினை நிர்ணயித்து, அந்தப் பாதையில் பயணித்து வருகிறோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், பல்வேறு துறை சார்ந்த முதலீட்டு ஊக்குவிப்பு நிகழ்வுகளை நடத்தி, இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. 2 லட்சத்து 95 ஆயிரத்து 339 கோடி ரூபாய் என்ற அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே 5,596 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4,244 நபர்களுக்குவேலை வாய்ப்பு என்ற வகையில், 5 ஜப்பானிய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

ஜப்பானிய நிறுவனங்களுக்கு என்னுடைய சில கோரிக்கைகளை வைக்க விரும்புகிறேன்...

❖ ஜப்பானிய நிறுவனங்கள் பெரும்பாலும் உற்பத்தி சார்ந்த துறைகளில் மட்டுமே முதலீடுகளை மேற்கொள்கின்றன. இந்நிலையை சற்றே விரிவுபடுத்தி, உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டங்களிலும் முதலீடு மேற்கொள்ள வருமாறு, இந்தத் தருணத்தில் உங்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.

❖ உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது என்பது உங்களது உற்பத்தித் திட்டங்களை மேம்படுத்தவும் உதவிகரமாக அமையும்.

❖ புதிய தொழில் பூங்காக்களை நாங்கள் அமைத்து வருகிறோம். அதிலும் உங்களது மேலான முதலீடுகளை வரவேற்கிறோம்.

❖ உங்களது தொழிற்சாலைகளை - எங்கள் மாநிலத்தில் அமைக்கும்போது அதுதொடர்பான தலைமை அலுவலகத்தையும் எங்கள் மாநிலத்திலேயே அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் இளைய சக்தியை வளமிக்கதாக நாங்கள் மாற்றிக் கொண்டிருக்கிறோம். 'நான் முதல்வன்' என்ற எனது கனவுத் திட்டத்தின் மூலமாக மாணவர்கள், இளைஞர்கள் அனைவரையும் பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பல்துறை வல்லுநர்களாக வளர்த்து வருகிறோம். பெண்களை தொழில்நுட்ப வல்லுநர்களாக உயர்த்தி வருகிறோம். எனவே, உங்களது நிறுவனங்களுக்கு மிகச்சிறந்த திறமைசாலிகள் அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

தமிழ்நாடு அரசும், திறந்த மனத்தோடு அனைத்து தொழில் நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் அரசாக இருக்கிறது. நிர்வாக உதவி - மனித ஆற்றல் ஆகிய இரண்டும் இணைந்து கிடைக்கும் மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டை ஜப்பானிய நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2024 ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் சென்னையில் நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாபெரும் நிகழ்வுக்கு நீங்கள் அனைவரும் வர வேண்டும் என்று அன்போடு கேட்டு விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!" எனத் தெரிவித்துள்ளார்.

முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து, ஜப்பான் நாட்டின் முக்கிய நிறுவனங்களின் தலைவர்களுடனான மதிய உணவு சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டு உரையாடினார்.

Also Read: “அன்னிய முதலீட்டை ஈர்க்க வலுவான அடித்தளம் அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : சிறப்புக் கட்டுரை!