Tamilnadu
“அன்னிய முதலீட்டை ஈர்க்க வலுவான அடித்தளம் அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : சிறப்புக் கட்டுரை!
அன்னிய முதலீட்டை ஈர்க்க வலுவான அடித்தளம்…
இலக்கை நிர்ணயிப்பது மட்டுமல்ல, அந்த இலக்கை எட்டுவதற்கான செயல்பாடுகளில் முழுவதுமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு செயலாற்றும் குணம் கொண்டவர் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்.
ஆட்சிப் பொறுப்பேற்றபோது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்தார். தமிழகத்தின் தற்போதைய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 354 பில்லியன் டாலராக அதாவது ரூ. 28.3 லட்சம் கோடியாக உள்ளது.
வளர்ச்சி விகிதம் கடந்த நிதி ஆண்டில் 14.6 சதவீதமாக இருந்தது. வளர்ச்சி விகிதம் 17 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை உயர வேண்டும். அப்போதுதான் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு சாத்தியமாகும். இதற்காக தொழில் முதலீடுகள் பெருக வேண்டும். வெளிநாடுகளிலிருந்து தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் தொடங்கச் செய்யும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2021 ஜூலை முதல் இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ரூ. 2.95 இலட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்ய நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதன் மூலம் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ரூ.6,100 கோடி அளவுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இந்நிலையில், பெருமளவில் அன்னிய முதலீட்டை ஈர்க்கும் வகையில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை தமிழக அரசு நடத்த உள்ளது. இந்த முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்குமாறும், தமிழத்தில் தொழில் தொடங்குமாறும் கோரிக்கைகள் பல நாடுகளுக்கு விடுக்கப்பட உள்ளன.
நேரடியாக சில நாடுகளுக்குச் சென்று அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு கோரிக்கை விடுக்க முதல்வர் முடிவு செய்துள்ளார். இதன் ஒரு பகுதியாக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), ஃபேம்டிஎன், டான்சிம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (டிஎன்எஸ்டிசி) ஆகியவை சிங்கப்பூர் பல்கலைக் கழகம் (எஸ்யுடிடி), சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அமைப்பு (எஸ்ஐபிஓ), சிங்கப்பூர் இந்தியா தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன.
தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூரைச் சேர்ந்த ஹை-பி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே ரூ. 312 கோடி முதலீடு மற்றும் 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மின்னணு பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு டெமாசெக், செம்கார்ப், கேபிடாலாண்டு ஆகிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளை சந்தித்து பேச்சு நடத்தினார். டெமாசெக் நிறுவன தலைமைச் செயல் அலுவலர் தில்ஹான் பிள்ளை சந்திரசேகராவை சந்தித்து தமிழகத்தில் கடல் சார்ந்த காற்றாலை நிறுவும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
மரபுசாரா எரிசக்தியில் முன்னிலை வகிக்கும் செம்ப்கார்ப் நிறுவனம் தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அதன் தலைமைச் செயல் அலுவலகை கிம்யின் வாங்கை முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். கேப்பிடாலாண்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் சஞ்சீவ் தாஸ் குப்தாவை சந்தித்த முதல்வர், சிங்கப்பூரில் கேப்பிட்டா லேண்ட் நிறுவனம் வடிவமைத்துள்ள சிங்கப்பூர் அறிவியல் பூங்காவைப் போன்று பல்வேறு வகையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கட்டமைப்புகளை உருவாக்க தமிழகம் ஆர்வமாக உள்ளதைத் தெரிவித்தார்.
சிங்கப்பூர் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று தமிழகம் தொழில் நிறுவனங்களுக்கு உகந்த மாநிலமாக விளங்குவதாகக் குறிப்பிட்டார்.
அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டம்
``வேர்களைத் தேடி’’ என்ற பெயரிலான புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களை தாய் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணமும், தமிழ் கலை பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை அயரகத் தமிழர்களிடையே பரிமாற்றம் செய்யும் வகையில் ஆண்டுதோறும் 200 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்துவந்து பண்டைய தமிழர்களின் கட்டிடம், சிற்பக்கலை, நீர் மேலாண்மை, ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், கலை இலக்கிய பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிஞர்கள் மற்றும் சான்றோர்களுடன் கலந்துரையாடல் என்ற பண்பாட்டுப் பரிமாற்ற சுற்றுலாத் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்காகத் தேர்வு செய்யப்பட்ட 10 இளைஞர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.
மேலும் சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இரு நாடுகளிடையே வலுவான பிணைப்பை உருவாக்கி தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்த்திட இந்தப் பயணம் நிச்சயம் உதவும் என்பதில் சந்தேகமில்லை. தொழில் நிறுவனங்களிடம் நம்பிக்கை அளிக்கும் விதமாக முதல்வரின் இந்தப் பயணம் அமைந்துள்ளது அவர்கள் காட்டிய ஈடுபாட்டிலிருந்தே புரிந்துகொள்ள முடியும்.
தொழில்நுட்ப பரிவர்த்தனைக்காக நிறுவனங்களிடையிலான புரிந்துணர்வு இந்தப் பயணத்தில் மேற்கொள்ளப்பட்டாலும், தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்த்தது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடக்க உள்ள முதலீட்டாளர் மாநாட்டில்தான் வெளிப்படும். அப்போது பெருமளவில் இவ்விரு நாடுகளிலிருந்து நிறுவனங்கள் முதலீடு செய்யும்போது, அதற்கு உதவியாக இருந்தது முதல்வரின் இப்போதைய பயணம்தான் என்பது நிதர்சனமாகும்.
வலுவான அடித்தளம் இருந்தால் மட்டுமே உறுதியான கட்டிடம் சாத்தியம். அந்த வகையில் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்க்கவேண்டும் என்ற நோக்கில் முதல்வரின் பயணம் அமைந்துள்ளது. முதலீடுகள் குவியும், வேலை வாய்ப்பும் பெருகும் என்று நிச்சயம் நம்பலாம்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!