Tamilnadu
“கடையை கேட்டு மிரட்டுகிறார்..” - அண்ணாமலை மீது பரபர புகார் கொடுத்த பாஜக முன்னாள் நிர்வாகி !
கோவை சாய்பாபா காலனி ராமலிங்கம் நகர் பகுதி சேர்ந்தவர் அண்ணாதுரை. 47 வயதாகும் இவர் பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராக பணியாற்றி வந்தார். அதுமட்டுமின்றி இவர் 'பழைய சோறு டாட் காம்' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் உணவகங்களுக்கு மூலிகை பொருட்கள் சப்ளை செய்து வருகிறார்.
இந்த சூழலில் சாய்பாபா காலனி ராமலிங்கம் நகர் பகுதியில் பழனிசாமி என்பவரின் கட்டடத்தில் வாடகையில் இந்த கடையை நடத்தி வருகிறார். முறையாக எழுத்து பூர்வமாக வாடகை ஒப்பந்தம் போடப்பட்டதை அடுத்து, சுமார் 4 லட்சம் வரை செலவு செய்து கடையை சீரமைத்துள்ளார். ஆனால் இவரது கடையை காலி செய்ய வேண்டுமென்று பாஜகவினர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
அதற்கு இவர் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே பழனிசாமியின் மகள் பிருந்தா என்பவர் இவரது கடை மற்றும் அலுவலகத்திற்கு வந்து விடாமல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனிடையே கடந்த 21-ம் தேதி கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதாக கூறி, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராக இருந்த ஐஎஸ்ஓ அண்ணாதுரையை பாஜக நீக்கம் செய்தது.
இருப்பினும் அந்த கடையை காலி செய்ய விடாமல் தொல்லை கொடுத்து வருவதால் இதுகுறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று அண்ணாதுரை புகார் அளித்தார். அவர் அளித்த புகார் மனுவில், தனது கடையை காலி செய்ய வேண்டும் என்று பாஜகவினர் விடாமல் தொல்லை கொடுத்து வருவதாகவும், இவர்களால் தனக்கு ரூ.15 லட்சம் நஷ்டம் என்றும், தான் பயன்படுத்தி வரும் அலுவலகத்தை பாரதிய ஜனதா சேவா மையமாக மாற்ற திட்டமிட்டு அவர்கள் இது போன்ற செயல்களை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் தூண்டுதலின் பேரில் மாவட்ட பாஜக தலைவர் உத்தமராமசாமி மாவட்ட பொது செயலாளர் செந்தில் ஆகியோர் தலைமையில் 20க்கும் மேற்பட்டவர்கள் தனது கடைக்கு வந்து கதவு பூட்டுகளை உடைத்து சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள பல்வேறு பொருட்களை எடுத்து சென்று விட்டதாகவும், இது தொடர்பாக தான் கேட்டபோது எனக்கு மிரட்டல் விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி தனக்கும் இந்த இடத்துக்கும் சம்பந்தமில்லை என்றும், வேறு எதாவது என்றால் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் பேசிக் கொள் என்றும் மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தான் தற்போது புகார் அளித்திருப்பதால் அண்ணாமலை தரப்பினர் இது போன்ற தன்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
தனது கடையை பாஜக அலுவலகமாக மாற்ற அண்ணாமலை தூண்டுதலின் பேரில், பாஜகவினர் தனக்கு தொல்லை கொடுப்பதாக பாஜகவின் முன்னாள் நிர்வாகி புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !