Tamilnadu
நடிகர் சரத்பாபு மறைவு : பிரதமர்.. ஆளுநர்.. முதலமைச்சர்.. - நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் இரங்கல்!
தமிழில் 90-களில் பிரபல நடிகராக இருந்தவர் தான் சரத் பாபு. ஆந்திராவை சேர்ந்த இவர், 1973-ல் வெளியான 'இராம இராஜ்ஜியம்' என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். தொடர்ந்து 1977-ல் 'பட்டின பிரவேசம்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு தொடர்ச்சியாக தமிழில் வாய்ப்பு கிடைக்கவே நிழல் நிஜமாகிறது, வட்டத்துக்குள் சதுரம், உயிருள்ளவரை என படங்களில் நடித்து வந்தார்.
குறிப்பாக ரஜினியுடன் முள்ளும் மலரும், முத்து, வேலைக்காரன், அண்ணாமலை, கமலுடன் நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினியும் இவரும் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இவர் ரஜினியுடன் நடித்த அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது. அதிலும் அண்ணாமலை, முத்து போன்ற படங்கள் இன்றளவும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
துணை நடிகராக, கதாநாயகனாக, நண்பனாக, வில்லனாக என நடித்து வந்த இவர், வயது மூப்பின் காரணமாக சில ஆண்டுகளுக்கு பிறகு வந்த ஏனைய படங்களில் தந்தையாக, துணை கதாபாத்திரமாக நடித்து வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த இவர், அதிகமாக தமிழ் மற்றும் தெலுங்கில்தான் நடித்துள்ளார்.
பாபி சிம்ஹா நடிப்பில் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியான 'வசந்த முல்லை' படத்தில் நடித்துள்ளார். தற்போது 71 வயதாகும் இவர் நடிப்பில் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையில் அவ்வப்போது சிறு சிறு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சூழலில் இவருக்கு அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முதலமைச்சர் முதல் பிரதமர், ஆளுநர் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தென்னிந்தியத் திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து வலம் வந்த நடிகர் சரத்பாபு மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், திரையுலகினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, “நடிகர் சரத்பாபு படைப்பாற்றல் மிக்கவர். அவரது நீண்ட திரைப்பட வாழ்க்கையில் பல மொழிகளில் பல பிரபலமான படைப்புகளுக்காக அவர் நினைவுகூறப்படுகிறார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள்” என்று குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, “பழம்பெரும் நடிகர் சரத்பாபுவின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது திறமையும், திரைத்துறைக்கான பங்களிப்பும் என்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்து இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தி கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன், “சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என் அஞ்சலி. ” என்று குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், “இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” என்று குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கவிபேரரசு வைரமுத்து, “சரத்பாபு ஒரு கண்ணியக் கலைஞர். பண்பாட்டு மதிப்பீடுகள் மிக்க பாத்திரங்களுக்குத் தன் நடிப்பால் தங்கமுலாம் பூசியவர்; நான் வசனம் பாடல்கள் எழுதிய ‘அன்றுபெய்த மழையில்’ படத்தின் நெருக்கமான பழக்கம் பொறுக்க முடியாத துயரம் தருகிறது. சரத்பாபுவின் புன்னகை மரணத்தை மறக்கச் செய்கிறது ” என்று குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, “'தெலுங்கு திரையுலகில் தனி அங்கீகாரம் பெற்ற மாபெரும் நடிகர்' கதாநாயகன், வில்லன், துணை நடிகர் என அனைத்து விதமான வேடங்களிலும் நடித்து தெலுங்கு திரையுலகில் தனி அங்கீகாரம் பெற்ற மாபெரும் நடிகர் சரத்பாபு அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்திருப்பது வருத்தமளிக்கிறது; சரத்பாபுவின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், “பிரபல தென்னிந்திய நடிகர் சரத் பாபுவின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். அமிர்தவர்ஷினி படத்தில் அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களின் வலியில் நானும் பங்கு கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!