Tamilnadu
“கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டத்தில் சிறை..” : ஆய்வு கூட்டத்தில் அதிரடி உத்தரவிட்ட முதலமைச்சர் !
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நிகழ்ந்த கள்ளச்சாராய இறப்புகள் குறித்தும், தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், காவல் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் இன்று (17-5-2023) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, முதலமைச்சர், மாநில அளவில் மதுவிலக்கு தொடர்பாக தகவல் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 பயன்பாட்டில் உள்ளதை, மக்களிடையே பிரபலப்படுத்தி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆகியோரின் whatsapp எண்களை அறிவித்து, அதன்மூலம் பெறப்படும் புகார்களை கூடுதல் காவல் துறை இயக்குநர் (மதுவிலக்கு அமலாக்கம்) கண்காணித்து உடனுக்குடன் எடுக்கும் தொடர் நடவடிக்கையை உறுதி செய்திட வேண்டுமென்றும், இது தொடர்பான அறிக்கையை, ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை அன்று உள்துறைச் செயலாளரின் மூலம் முதலமைச்சரின் அலுவலகத்திற்கு அனுப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்கள் தடுப்பு சம்பந்தமாக, மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், மாவட்ட அளவில் ஒவ்வொரு திங்கட்கிழமையும், மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் காவல் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மாவட்ட மேலாளர் ஆகியோரைக் கொண்டு நடத்திட வேண்டுமென்றும், இதுதொடர்பாக, தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தக்க அறிவுரைகளை வழங்கிட வேண்டுமென்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.
பொதுமக்களிடையே கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டுமென்றும், இதனை பள்ளிகள், கல்லூரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுயஉதவிக்குழு மகளிரைக் கொண்டு நடத்திட வேண்டுமென்றும்; தொழிற்சாலைகளில்.
எரிசாராயம் மற்றும் மெத்தனால் பயன்பாட்டைக் கண்காணித்து, அது விஷச் சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை, காவல் துறை மற்றும் உதவி ஆணையர் (கலால்) கண்காணித்திட வேண்டுமென்றும், அதோடு, மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில், கடலோர மற்றும் மலைப்பகுதி மாவட்டங்களில், மாவட்ட அளவிலான மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் சிறப்பாகச் செயல்படும் உயரதிகாரிகளை நியமிக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்கள்.
மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அந்தத் தொழிலிலிருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட அரசின் பல்வேறு வாழ்வாதாரத் திட்டங்கள் மூலம் பயன்பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்றும், இதனை உள்துறைச் செயலாளர் கண்காணித்திட வேண்டுமென்றும் ஆணையிட்டுள்ளார்கள்.
அதோடு, கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள்களை தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்து ஒவ்வொரு மாதமும், உள்துறைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைமை இயக்குநர் அவர்களின் தலைமையில் காவல் கண்காணிப்பாளர்களின் மாதாந்திரக் கூட்டம் நடத்தப்பட்டு, காவல் துறையின் செயல்பாடுகளைக் கண்காணித்து, முதலமைச்சர் அலுவலகத்திற்கு அறிக்கை அளித்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்கள்.
காவல் துறை அலுவலர்கள், தங்களது முழு திறமையையும், நீண்ட அனுபவத்தையும் பயன்படுத்தி, தமிழ்நாட்டு மக்களின் நன்மதிப்பினை பெறும்வகையில் சிறப்பாகச் செயல்பட வேண்டுமென்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்கள்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!