Tamilnadu
“சிங்கப்பூராக சென்னை மாறி வருகிறது” : ஆகாய நடைபாதையில் பயணம் செய்த மக்கள் நெகிழ்ச்சி - சிறப்புச் செய்தி!
சென்னையில் மிகவும் பரபரப்பான வணிக தளங்கள் அமைந்துள்ள பகுதி தியாகராய நகர். சென்னை மட்டுமல்லாது சென்னை நகரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு பொருட்களை வாங்க பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
அதுமட்டுமல்லாது சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து தியாகராய நகரை சுற்றியுள்ள பகுதிகளுக்கு, வேலைக்குச் செல்வோரும், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியரும் அதிகளவில் வந்து செல்வதால் எப்போதும் பரபரப்பிற்கு பஞ்சமில்லாத பகுதியாக தியாகராயநகர் விளக்குகிறது.
மாம்பலம் இரயில் நிலையத்தில் இறங்கி, தியாகராயநகர் பேருந்து பணிமனைக்கோ அல்லது பணிமனையிலிருந்து இரயில் நிலையத்திற்கோ செல்வது என்பது தற்போதைய சூழலில் அவ்வளவு எளிதல்ல. ரெங்கநாதன் தெரு, பனகல் பார்க், பாண்டியபஜார், சத்யா பஜார், உஸ்மான் சாலை என பரபரப்பான வணிகபகுதிக்கு வருவோரும் இவ்வழியாக தான் செல்ல வேண்டும்.
பல கோடிகளுக்கு வணிகம் நடைபெறும் பகுதியாக இப்பகுதி விளங்குகிறது. குறிப்பாக விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் இப்பொழுதியை கடந்து செல்வதற்கு ஒரு வழி ஆகி விடும் என்றே சொல்லலாம். தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை மாநகரை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தங்குதடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கிலும் வருங்கால போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையிலும் மாநகரின் முக்கிய மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் பகுதிகளில் பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், தியாகராயநகர் பகுதியில் நெரிசலை கணக்கில் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட தியாகராயநகர் பேருந்து நிலையத்திலிருந்து மாம்பலம் இரயில் நிலையத்திற்கு போக்குவரத்து நெரிசலின்றி மக்கள் பயனிக்க ரூ.28கோடி நிதி ஒதுக்கீட்டில் ஆகாய நடைமேம்பாலம் (SKY WALK) அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக நேற்றைய தினம் திறக்கப்பட்டது.
மாம்பலம் இரயில் நிலைய நடைமேம்பாலத்திலிருந்து இரயில்வே மார்க்கெட் சாலை, மேட்லி சாலை வழியாக தியாகராய நகர் பேருந்து நிலையம் வரை 28 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள நகரும் படிக்கட்டு மற்றும் மின்தூக்கிகளுடன் கூடிய ஆகாய நடைமேம்பாலத்தை மக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தியாகராய நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான ரங்கநாதன் தெரு, மேட்லி சாலை, மார்க்கெட் சாலை, நடேசன் தெரு ஆகிய இடங்களில் பாதசாரிகளின் போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையிலும், இரயில் மற்றும் பேருந்து பயணிகள் சிரமமின்றி இரயில் மற்றும் பேருந்து நிலையத்தை அடைந்திட இந்த ஆகாய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
மாம்பலம் இரயில் நிலைய நடைமேம்பாலத்தை தியாகராய நகர் பேருந்து நிலையத்துடன் இணைக்கும் வகையிலும், மாம்பலம் இரயில் நிலைய நடைமேம்பாலத்திலிருந்து இரயில்வே மார்க்கெட் சாலை, மேட்லி சாலை வழியாக தியாகராய நகர் பேருந்து நிலையம் வரை சீர்மிகு நகர திட்ட நிதியின் கீழ், 28 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில், 7 மீட்டர் உயரத்தில், 570 மீட்டர் நீளம் மற்றும் 4.20 மீட்டர் அகலத்தில் நகரும் படிக்கட்டு மற்றும் மின்தூக்கிகளுடன் கூடிய ஆகாய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆகாய நடைமேம்பாலமானது பல்வகை போக்குவரத்தினை ஒருங்கிணைக்கும் வகையில், தென் தமிழகத்திலிருந்து வரும் இரயில் பயணிகள் மற்றும் மின்சார தொடர்வண்டியில் பயணிக்கும் பயணிகள் சிரமமின்றி தியாகராய நகர் பேருந்து நிலையத்தை அடையும் வண்ணம், மாம்பலம் இரயில் நிலைய நடைமேம்பாலத்துடன் இந்த ஆகாய நடைமேம்பாலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆகாய நடைமேம்பாலத்தில் மின்னாக்கிகள் (Generators), காவல்துறை கண்காணிப்பு அறையுடன் இணைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள், பொதுமக்களுக்கான அறிவிப்பு ஒலிபெருக்கிகள், துருப்பிடிக்காத எஃகிலான குப்பை கூடைகள், பாதுகாவலர் அறைகள், நவீன கழிவறைகள் போன்ற கூடுதல் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆகாய நடைமேம்பாலத்தால் தினமும் சுமார் ஒரு இலட்சம் மக்கள் பயனடைவர்.
தியாகராய நகரில் ஆகாய நடைமேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர், அந்நடைமேம்பாலம் முழுவதும் நடந்து சென்றார். பின்னர், நடைமேம்பாலத்திலிருந்து இறங்கி ரங்கநாதன் தெரு முழுவதும் நடந்து சென்று இருமருங்கிலும் கூடியிருந்த பொதுமக்களின் உற்சாக வரவேற்பினை ஏற்றுக் கொண்டு, அவர்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, பொதுமக்களுடன் செல்பி புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்.
சிங்கப்பூரில் உள்ளது போல சென்னையிலும் தற்போது ஆங்காங்கே மேம்பாலங்கள்,நவீன வசதிகள் கொண்ட நடைபாதைகள் மாற்றப்பட்டுள்ளது இது பெருமை அளிப்பதாகவும் வெளிநாட்டில் பயணி தெரிவித்துள்ளார்.
கல்லூரிக்கும், வேலைக்கும் செல்ல வேண்டும் என்றால் தி.நகர் ரங்கநாதன் தெருவிற்கு சென்று அங்கு இருந்து மாம்பலம் ரயில் நிலையம் செல்ல வேண்டுமென்றால் கூட்ட நெரிசலிலும், போக்குவரத்து நெரிசலிலும் கடந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டது. தற்போது காற்றோட்டத்துடன் எந்த ஒரு நெரிசலும் இல்லாமல் எக்ஸ் லேட்டர் மூலமாகவும் லிஃப்ட் மூலமாகவும் பயன்படுத்துவதால் சிரமமின்றி கல்லூரிக்கு, வேலைக்கு செல்ல முடிகிறது தெரிவித்துள்ளனர்.
மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாகவும் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதற்கு இதுபோன்றவளர்ச்சி திட்டங்களும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மேலும் சிங்கப்பூரில் உள்ளது போல சென்னையிலும் தற்போது ஆங்காங்கே மேம்பாலங்கள், நவீன வசதிகள் கொண்ட நடைபாதைகள் மாற்றப்பட்டுள்ளது. இது பெருமை அளிப்பதாகவும் வெளிநாட்டில் பயணி தெரிவித்துள்ளார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்