Tamilnadu

“பா.ஜ.கதான் எங்க எதிரி”: முதலமைச்சருடன் CPIM தலைவர்கள் திடீர் சந்திப்பு - யெச்சூரி சொன்ன முக்கிய தகவல்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நேரில் சந்தித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீத்தாராம் யெச்சூரி, “கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க தோற்கடிக்கப்பட்ட பின்னர் எழுந்துள்ள அரசியல் நிலைமைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.

பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை எப்படி பலப்படுத்துவது என்பது குறித்து நாங்கள் விவாதித்தோம். அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து அடுத்தடுத்த நாட்களில் இக்கட்சிகளிடையே தீவிரமான ஆலோசனை நடைபெற உள்ளது.

பா.ஜ.க-வுக்கு எதிராகத் தேசிய அளவில் அணிச்சேர்க்கை நிச்சயம் உருவாகும். அதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கெனவே பல்வேறு அரசியல் கட்சிகளிடையே தொடங்கிவிட்டது. தமிழகத்தில் அனைத்து மதச் சார்பற்ற எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டுள்ளனர்.

அதேபோல் கர்நாடகாவில் காங்கிரஸ் தனித்து நின்றபோதிலும் பாஜகவை வீழ்த்துவதில் வெற்றிபெற்றுள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் தனித்தனியாகத் தேர்தலைச் சந்தித்தபோதிலும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாமல் பார்த்துக்கொண்டன.

எனவே ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றவாறு பாஜகவை வீழ்த்துவதற்கான உக்திகள் வகுக்கப்படும். அரசமைப்பு சட்டம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, மக்களின் உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கவேண்டும் என்றால் பாஜக மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றவிடாமல் தடுப்பது முக்கியம். அதற்கு ஏற்றவாறு எங்களது செயல்பாடுகள் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: ஜூன் 5ல் கிண்டி பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு: கலைஞர் நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர்!