Tamilnadu
பத்திரிகையாளர் நலன் சார்ந்த அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு !
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் பத்திரிகையாளர் நல வாரியத்தின் சார்பில் 7 பத்திரிகையாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டையினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து பணிகாலத்தில் உயிரிழந்த அரசு அச்சகப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 8 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும், 1 இலட்சத்து ஒன்றாவது தமிழரசு இதழ் சந்தாதாரருக்கு தமிழரசு இதழையும் வழங்கினார்.
மேலும், தண்டையார்பேட்டை காமராஜர் நகர், அரசு அச்சகப் பணியாளர்களுக்கு 96 புதிய குடியிருப்புகள் ரூ.34.49 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும் வணக்கத்தையும் முதலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழக அரசு தேர்தல் அறிக்கையிலே சொன்னபடி, பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கும் பணி இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் அறிக்கையில் சொன்ன ஒவ்வொரு வாக்குறுதியையும் ஒவ்வொரு நாளாக நாங்கள் நிறைவேற்றி வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக இன்று, தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதியை காப்பாற்றியிருக்கிறோம், நிறைவேற்றியிருக்கிறோம்.
பத்திரிகையாளர் நலன் சார்ந்த அரசாக என்றுமே நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல, சென்ற அரசால் போடப்பட்ட அத்தனை அவதூறு வழக்குகளையும் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரசாணை வெளியிட்டு அத்தனை வழக்குகளையும் இரத்து செய்தார். அதேபோல, கொரோனா நேரத்தில், பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தது மட்டுமல்லாமல், அவர்களுக்கெல்லாம் 5000 ரூபாய் நிதி உதவி கிடைக்கச் செய்ததும் நம்முடைய அரசு. தொடர்ந்து, பத்திரிகையாளர்களுக்காக சேவை செய்ய நம்முடைய அரசு காத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.
அதேபோல் இன்று இந்த நிகழ்ச்சிக்கு பொதுவாக பத்திரிகையாளர்களெல்லாம் வந்திருக்கிறீர்கள், மூத்த பத்திரிகையாளர்களும் வந்திருக்கிறீர்கள். மற்ற நிகழ்ச்சிகள், மற்ற துறை நிகழ்ச்சிகளையெல்லாம் நீங்கள் அந்த நிகழ்ச்சியின் செய்தியை சேகரிப்பதற்காக வருவீர்கள். ஒவ்வொரு பத்திரிகையிலும் ஒவ்வொரு அளவில் வரும், ஒவ்வொரு கோணத்தில் வரும், சில சமயம் வராமல் கூட போய்விடும். ஆனால் இன்றைக்கு உங்களுடைய நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் செய்தியை நீங்கள் சேகரிக்காமல் இருக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், இன்றைக்கு வேறொரு மிக முக்கியமான நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது, ஒரு புதிய அமைச்சர் பதவியேற்று இருக்கிறார். அந்த நிகழ்ச்சியை விட்டுவிட்டு இந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரிப்பதற்கு வந்திருக்கிறீர்கள். எனவே, அந்தளவிற்கு இந்த நிகழ்ச்சி ஒரு முக்கியமான நிகழ்ச்சி தான்.
நேற்று நம்முடைய மாண்புமிகு அமைச்சர் திரு.சாமிநாதன் அவர்கள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, உடனே இந்த அரசு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார் என்றால், பத்திரிகையாளர்களுக்கு இந்த அரசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். எப்போதும் போல நீங்கள் தொடர்ந்து இந்த அரசுக்கு துணைநின்று, ஏதாவது தவறு நடந்தால் அதை சுட்டிக்காட்டி, நல்லது செய்தால் எங்களை தட்டிக்கொடுத்து நீங்களெல்லாம் உங்களுடைய பணியை தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, வந்திருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொண்டு விடைபெறுகின்றேன்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !