Tamilnadu

பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு செக் வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. அவதூறு வழக்கு தாக்கல்!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தி.மு.க குறித்து அவதூறு பரப்பும் வகையில் போலியான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து தி.மு.கவினர் அண்ணாமலைக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

மேலும் தி.மு.க மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளை அண்ணாமலையால் 15 நாட்களுக்குள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியுமா? என்றும் அவர் மீது வழக்குத் தொடுக்கப்படும் என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தி.மு.க மீது போலியான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்திய அண்ணாமலைக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ரூ.50 கோடி இழப்பீடு கேட்டும், தி.மு.க பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு ரூ.100 கோடி இழப்பீடு கேட்டும், கனிமொழி எம்.பியும் ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டும் நோட்டீஸ் அனுப்பினர்.

இந்நிலையில் அவதூறு கருத்துகளை வெளியிட்ட பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கு தாக்கல் செய்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அரசு வழக்கறிஞர் ஜி.தேவராஜன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அதில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 14 ம் தேதி செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு தகவல்களை வெளியிட்டுள்ளார். அண்ணாமலையின் கருத்துக்கள் பொய்யானது மட்டும் இல்லாமல் முதலமைச்சரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் இரண்டு லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம் என பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருவதையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது அவதூறு சட்டத்தின் கீழ் உரியத் தண்டனை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Also Read: நேற்று மிட்சுபிஷி.. நாளை ஹூண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதலீடுகளை ஈர்க்கும் தமிழ்நாடு!