Tamilnadu
திமுக அரசின் சாதனை விளக்க தெருமுனைக் கூட்டங்களை நடத்துக - திமுக இளைஞரணியினருக்கு உதயநிதி வேண்டுகோள் !
மே 7, 8 & 9 ஆகிய தேதிகளில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை விளக்கி தமிழ்நாட்டின் 1,222 இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெறும் என கழக கொள்கைப் பரப்புச் செயலாளர்கள் அறிவித்துள்ளனர். இதில் வரும் 7-ம் தேதி காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் கண்டோன்மெண்ட் நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த கூட்டத்தில் பெரும்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என திமுக இளைஞரணியினருக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டிற்கான விடியலாக, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டுகளை நிறைவு செய்து, வருகிற மே 7 -ஆம் தேதி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
`மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து’, `புதுமைப்பெண் திட்டம்’, `நான் முதல்வன்’, `மக்களைத்தேடி மருத்துவம்’, `நம்மைக் காக்கும் 48’, `அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம்’, `இல்லம் தேடி கல்வி’ என முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியின் நீட்சியாக, சமூகநீதித் திட்டங்களின் வழியே வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டு வருகிறது நம் கழக அரசு.
இந்த இரண்டு ஆண்டு கால திராவிட மாடல் அரசின் சாதனைகளை, மக்களிடம் கொண்டு சேர்த்திட, மே 7, 8 & 9 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதுமுள்ள 72 கழக மாவட்டங்களின் ஒன்றிய-நகர-பகுதி-பேரூர் கழகங்களின் சார்பில், 1,222 இடங்களில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இக்கூட்டங்களில் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள்… என பலர் கலந்துகொண்டு அரசின் சாதனைகளை விளக்கிக்கூறி உரையாற்ற உள்ளோம். இளைஞர் அணியைச் சேர்ந்த அனைவரும் இந்தக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
நம் கொள்கை எதிரிகளும், அடிமைகளும் தினம் ஒரு அவதூறாக சமூக வலைதளம் மூலம் பரப்பி வரும் இன்றையச் சூழலில், நம் சாதனைகளை இல்லந்தோறும் கொண்டு சேர்ப்பது அவசியமாகிறது. எனவே, சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் முடிந்தபிறகு, கழக அரசின் சாதனைகளை இல்லந்தோறும் கொண்டு சேர்த்திடும் வகையில், இளைஞர் அணி சார்பில் `சாதனை விளக்க தெருமுனைக் கூட்டங்களை’ சிறப்புற நடத்திட வேண்டும் என்று நம் நிர்வாகிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த சாதனை விளக்க தெருமுனைக் கூட்டங்களை மாவட்ட-ஒன்றிய-நகர-பகுதி-பேரூர் கழக நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து நம் அணிக்குப் பெருமை சேர்த்திடும் வகையில் நடத்திடுமாறும், ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை கூட்டங்கள் நடைபெற உள்ளன என்ற தகவலையும் அன்பகத்துக்கு தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தத் தெருமுனைக் கூட்டங்கள் வெறும் சாதனை விளக்கக் கூட்டங்கள் மட்டுமல்ல, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்திற்கான தொடக்கமும்கூட. ஆகவே, இந்தப் பெரும்பணியின் பொறுப்புணர்ந்து செயலாற்றிடுவோம். கழகத் தலைவர் அவர்களின் வழியில், எனக்கு அன்பளிப்பாகப் பூங்கொத்துகளையும், பொன்னாடையையும் அளிக்காமல் புத்தகங்களையும், கல்வி மற்றும் மருத்துவ சேவைப் பணிகளுக்கு உதவிடும் வகையில் இளைஞர் அணி அறக்கட்டளைக்கு நிதியுதவியும் வழங்கிடுங்கள் எனக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
அதன்படி, இளைஞர் அணி நேர்காணல், அரசு நிகழ்ச்சிகள் என நான் செல்லும் இடங்களில் எல்லாம் கழகத்தினர் புத்தகங்களையும், இளைஞர் அணியின் அறக்கட்டளைக்கு நிதியுதவியையும் வழங்கி வருகின்றனர். இதுவரை நடந்து முடிந்துள்ள 6 மண்டலங்களுக்கான நேர்காணலில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களையும், 425 பேர்கள் 35 லட்சத்து 93 ஆயிரத்து 118 ரூபாயையும் இளைஞர் அணி அறக்கட்டளைக்காக வழங்கியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் நன்றி.
இளைஞர் அணி நேர்காணல் பணிகளும் 6 மண்டலங்களில் நடந்து முடிந்துள்ளன. மீதமுள்ள 3 மண்டலங்களுக்கான நேர்காணலும் விரைவில் நடத்தி முடிக்கப்பட்டு, மாவட்டப் பொறுப்புகளுக்கான நிர்வாகிகளை அறிவிக்கவுள்ளோம். நாம் இருக்கும் காலத்தின் அவசியத்தை உணர்ந்து, சட்டமன்றத் தேர்தலில் அடிமைகளை விரட்டியதைப்போல், எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களை அடிமைப்படுத்திய பாசிச சக்திகளையும் விரட்டி அடிக்க, உறுதியேற்றிடுவோம்" எனக் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்