Tamilnadu

“தொழிலாளர் நலன் காக்க தி.மு.க அரசு என்றென்றும் பாடுபடும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்து!

தொழிலாளர் நலன் காக்க, திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் அரசும் என்றென்றும் பாடுபடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தி வருமாறு:-

உழைக்கும் தோழர்களின் உன்னதத்தை உலகுக்கே எடுத்துரைக்கும் மே நன்னாளாம் இந்தப் பொன்னாளில், நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் முதுகெலும்பாகத் திகழும் தொழிலாளத் தோழர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது இதயம் நிறைந்த உழைப்பாளர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்கும்போதெல்லாம் பல்வேறு தொழிலாளர் நலத்திட்டங்களை அக்கறையோடு நிறைவேற்றி, தொழிலாளர் வாழ்வில் முன்னேற்றமும், நிம்மதியும் காண அயராது பாடுபடும் இயக்கம் என்பதை உழைப்பாளர் சமுதாயம் நன்கு அறியும்.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்தால், தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்துப் போராடியிருக்கிறோம். ஆட்சியில் இருக்கும் போது, அவர்களுக்கான உரிமைகளைப் பேணும் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துகிறோம்.

மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய அரசு விடுமுறை; தொழிலாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ், ஊக்கத் தொகை; நிலமற்ற ஏழை வேளாண் தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச நிலம்; வேளாண் கூலிகளாகவும், வேறுபல தொழில்களில் உழைப்பாளிகளாகவும் திகழும் ஏழை, எளிய கருவுற்ற பெண்களுக்கு 6000 ரூபாய் நிதியுதவி; தொழிலாளர் குடும்பங்களின் பசிப்பிணி போக்கிட ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி; உழைப்பாளர்களின் உயிர்காக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம்; குடிசைகளில்லா கிராமங்கள், குடிசைப் பகுதிகளில்லா நகரங்கள் கொண்ட தமிழ்நாடு காணும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம்; அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரியங்கள் என பல்வேறு முத்தான திட்டங்களை உழைக்கும் சமுதாயத்தின் நலனுக்காக நிறைவேற்றியது தி.மு.க ஆட்சிதான் என்பது வெள்ளிடை மலை.

அந்த உறுதிப்பாடு குலையாமல் தொழிலாளர் நலன் காக்க, திராவிட முன்னேற்றக் கழகமும், அதன் அரசும் என்றென்றும் பாடுபடும் என்பதை இந்த நன்னாளில் தெரிவித்து, உழைக்கும் தோழர்கள் அனைவரும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “ஒன்றிய அரசின் தரக் கட்டுப்பாட்டு ஆணைகள்.. ஜவுளித்தொழிலில் தடைகளை ஏற்படுத்தும்” : முதலமைச்சர் கடிதம்!