Tamilnadu

குடும்ப சண்டையில் பினாயில் குடித்த காதலி.. தகவல் அறிந்து காதலன் எடுத்த முடிவால் அதிர்ச்சி !

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மறைமலைநகர் பகுதியை அடுத்துள்ளது கூடலூர் என்ற பகுதி. இங்கு சூர்யா என்ற இளைஞர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டுப் படித்து வரும் இவரும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த சூழலில் காதலியின் குடும்பத்தில் தொடர்ந்து சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அந்த பெண் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் சம்பவத்தன்று காதலியின் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அந்த பெண் வீட்டில் கழிவறை சுத்தம் செய்ய வைத்திருந்த பினாயிலை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இளம்பெண் பினாயில் குடித்ததை அறிந்த குடும்பத்தினர் உடனே அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு பக்கம் போலீசார் இதுகுறித்து விசாரிக்கையில், தனது காதலி இவ்வாறு செய்துகொண்டது காதலன் சூர்யாவுக்கு தெரியவந்தது.

இதனால் சூர்யா மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் காதலி உயிரோடு வருவாரோ வரமாட்டாரோ என்ற அச்சத்திலே இருந்துள்ளார் சூர்யா. இந்த சூழலில் சூர்யா மிகுந்த உளைச்சலில் காதலி இறப்பதற்கு முன் தானும் இறக்க வேண்டும் என எண்ணிய அவர் தற்கொலை செய்துகொள்ள எண்ணியுள்ளார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தூக்கில் தொங்கிய நிலையில் சூர்யாவை மீட்ட அவரது பெற்றோர் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த அதிகாரிகள், சூர்யாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது காதலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குடும்ப தகராறில் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற காதலி, உயிரோடு வர மாட்டாரோ என்று எண்ணி காதலன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் செங்கல்பட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: அப்போ மூதாட்டி.. இப்போ இளம்பெண்: காதுக்குள் உயிருடன் கூடு கட்டி வசித்த சிலந்தி-பயங்கரத்தின் பின்னணி என்ன?