Tamilnadu

OLXல் பைக், ஐபோன்களை வாங்கி நூதன விற்பனை.. உரிமையாளரையே போலிஸில் மாட்டிவிட்ட இளைஞர் - பகீர் வாக்குமூலம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மெகபூப்பாஷா என்பவர் இருசக்கர வாகனங்கள் வாங்குவது விற்பனை செய்யும் கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கடைக்கு வந்த இளைஞர் ஒருவர் தன்னிடம் ஒரு இருசக்கர வாகனம் உள்ளது என தெரிவித்து வாகனத்துக்கு உரிய அனைத்து ஒரிஜினல் பேப்பர்களை கொடுத்துள்ளார்.

அதைப் பார்த்த மெகபூப்பாஷா வாகனத்தின் விலையை கேட்கும் போது குறைந்த விலைக்கு கொடுக்க முன்வந்துள்ளார். இதை அடுத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கக்கூடிய வாகனத்தை மிககுறைந்த விலைக்கு தருகிறார் என சந்தேகம் வரவே இளைஞரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளார். மேலும் அந்த இளைஞர் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்துள்ளார்.

சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் மற்ற வாகன விற்பனையாளர்களிடமும் இதுகுறித்து தகவல் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மற்ற வாகன விற்பனை உரிமையாளர்களும் பார்த்தபோது இளைஞர் ஏற்கனவே நான்கு மாதத்திற்கு முன் வாகனத்தை விற்றுவிட்டு உரிமையாளரை போலிஸிடம் மாட்டு விட்ட நபர் என தெரியவந்தது.

இதையடுத்து இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து அங்கேயே கட்டி வைத்துள்ளனர். பின்னர் ஓசூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து, சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் விசாரணை மேற்கொண்டதில், இளைஞர் பெயர் ரமேஷ் எனவும் கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் OLX மூலம் விலையுர்ந்த ஐபோன் மற்றும் இருசக்கர வாகனங்களை விற்பனை வாடிக்கையாளரிடம் நேரடியாக தொடர்பு கொண்டு பணம் கொடுப்பதற்கு பதில் காசோலை கொடுத்துவிட்டு ஏமாற்றி வந்துள்ளது தெரியவந்தது. இதுபோல் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளாவிலும் இந்த மோசடி சம்பவத்தில் அரங்கேற்றியுள்ளது தெரியவந்தது.

இச்சம்பவத்தில் ஏற்கனவே கேரள மாநிலத்தில் சிறை சென்றவர் எனவும் தெரிய வந்தது. மேலும் தன்னுடைய ஆதார் கார்டு இடத்திற்கு தகுந்தார் போல் மாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து போலிஸார் வேறு எங்கெல்லாம் இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஓசூரில் உள்ள பழைய இருசக்கர வாகன விற்பனையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: ஹிஜாப் பிரச்சனை: “600க்கு 593 மதிப்பெண்.. மாநிலத்தில் முதலிடம்”: சங்கிகளுக்கு தரமான பதிலடி கொடுத்த மாணவி!