Tamilnadu
அண்ணாமலைக்கு பறந்த 4வது நோட்டீஸ்: 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் : கனிமொழி MP!
தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தி.மு.க குறித்து அவதூறு பரப்பும் வகையில் போலியான வீடியோ ஒன்றை அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது வெளியிட்டார். இதையடுத்து தி.மு.க மீது போலியான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்திய அண்ணாமலைக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ரூ.50 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினர். இவரை தொடர்ந்து தி.மு.க பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
ஏற்கனவே மூன்று பேர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தற்போது கனிமொழி எம்.பியும் ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி சார்பாக வழக்கறிஞர் மனுராஜ் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில் “தமிழ்நாடு பா.ஜ.க தலைவராகிய நீங்கள் ஏப்ரல் 14 ஆம் தேதி உங்கள் கட்சித் தலைமையகத்தில் DMK files என்ற பெயரில் ஓர் அவதூறு வீடியோவை பத்திரிகையாளர்கள் முன்பு திரையிட்டிருக்கிறீர்கள்.
அந்த அவதூறு வீடியோவில் எனது கட்சிக்காரர் தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி பெயரைக் குறிப்பிட்டு, அபிடவிட் படியான சொத்து மதிப்பு ரூ30.33 கோடி ரூபாய் மற்றும் கலைஞர் டிவி 800 கோடி ரூபாய் மொத்த மதிப்பு 830.33 கோடி என புகைப்படத்துடன் காட்டப்பட்டுள்ளது. இது அவரை களங்கப்படுத்தும் வகையிலான அவதூறு மட்டுமல்ல அடிப்படை ஆதாரமற்றது. கற்பனையானது மற்றும் ஆவணங்களில்- பதிவுகளில் இருப்பவற்றிற்கு முரண்பாடானது.
2024 மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் நாடு முழுதும் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளில் இருந்து மக்களைத் திசை திருப்பிவிடும் வகையிலும். தி.மு.கவின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் நோக்கத்தோடும் இந்த அவதூறு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த அவதூறு வீடியோவுக்காக உங்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர முகாந்திரம் உள்ளது.
அவதூறு பரப்பும் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை என் கட்சிக்காரருக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மேற்கண்ட அவதூறு வீடியோவை இந்த நோட்டீஸ் கண்ட 48 மணி நேரத்தில் திரும்பப் பெற்றுக் கொண்டு அனைத்து சமூக வலைதளங்களிலும் அகற்றி, எனது கட்சிக்காரரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். தவறும் பட்சத்தில் உங்கள் மீது எனது கட்சிக்காரர் சார்பாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
TN Fact Check : தஞ்சை பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டா? - இணையத்தில் பரவும் போலி செய்தி : உண்மை என்ன?
-
200 ஏக்கர் பரப்பளவில் ஆன்மீக சுற்றுலா மையம்! : அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு!
-
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு புகார் : சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜர்!
-
ரூ.1,792 கோடியில் ஸ்ரீபெரும்புதூரில் Foxconn நிறுவன ஆலை விரிவாக்கம்... 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!
-
நீதிமன்றத்தில் காணொளி மூலம் வழக்கு விசாரணை! : டெல்லி காற்று மாசு எதிரொலி!