Tamilnadu

"மிசாவை கண்ட இயக்கம் தி.மு.க.. IT ரெய்டுகளை கண்டு அஞ்சாது": ஈரோட்டில் அமைச்சர் உதயநிதி அனல் பேச்சு!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வெற்றி பெற்றார்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நன்றி தெரிவிக்க உங்களை மீண்டும் சந்திக்க ஈரோட்டுக்கு வருவேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதன்படி இன்று ஈரோடு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் மக்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "உங்களை எல்லாம் பார்த்து நன்றி தெரிவிப்பதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். நீங்கள் சொன்னது போலவே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவைத்துள்ளீர்கள்.

நாம் ஆட்சிக்கு வந்த இரண்டு வருடத்தில் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி சாதனைகளைச் செய்துள்ளார்.

கட்டணமில்லா பேருந்து பயணத்தில் இதுவரை மகளிர் 300 கோடி பயணங்களைச் செய்துள்ளார்கள். மகளிர் உரிமைத்தொகை செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இப்படிச் சொன்ன வாக்குறுதிகளை 80%க்கு மேல் நிறைவேற்றி உள்ளோம்.

நேற்று நமது தலைவர் டெல்லிக்கு சென்றார். எதற்குச் சென்றார்?. சென்னையில் ரூ. 230 கோடி செலவில் பல்நோக்கு மருத்துவமனை ஒன்றரை வருடத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கக் குடியரசுத் தலைவரைச் சந்தித்து அழைப்பு விடுப்பதற்காகச் சென்றார்.

நம்முடைய முதலமைச்சர் மக்களுக்காக டெல்லி செல்கிறார். ஆனால் இன்னும் சிலரும் டெல்லி செல்கிறார்கள். இவர்கள் எதற்குச் செல்கிறார்கள். இவர்களது கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி பிரச்சனைக்காக டெல்லி செல்கிறார்கள்.

அ.தி.மு.கவை பார்த்து நான் கேட்கிறேன், பிரதமரை அடிக்கடி சந்திக்கும் நீங்கள் என்றைக்காவது மக்கள் பிரச்சனைக்காக அவரை சந்திக்கச் சென்று உள்ளீர்களா?. உங்கள் கட்சி பஞ்சாயத்தைப் பேசுவதற்காகவே செல்கிறீர்கள்.

நம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதற்கும் அஞ்சாதவர். அவர் யாரைக் கைகாட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர். மிசாவை கண்ட இயக்கம் தி.மு.க. இவர்களின் ஐடி ரெய்டுகளை கண்டு எல்லாம் அஞ்சாது. பாசிச அடிமைகளைக் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது வீட்டுக்கு அனுப்பி வைத்தீர்கள். அதேபோல் பாசிச பா.ஜ.கவையும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் வீட்டிற்கு அனுப்ப வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”இருப்பை காட்டிக்கொள்ள உண்மைக்கு மாறாக அறிக்கை வெளியிடும் பழனிசாமி”: அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி!