Tamilnadu

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் முறைப்படுத்தல் மசோதாவுக்கு ஆளுநர் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி ஒப்புதல் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட, அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி T.ராஜா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை தங்களுக்கு எதிராக எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் வாதிடப்பட்டது.

இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் பணம் சம்பாதிப்பதற்காக பல குடும்பங்களை சீரழிப்பதை ஏற்க முடியாது என்றும், சூதாட்ட நிறுவனங்களுக்கு எந்த பாதுகாப்பும் வழங்க கூடாது என்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

அப்போது, சூதாட்டத்தால் ஏற்படும் மரணங்களை தவிர்க்க தமிழ்நாடு அரசு தடைச்சட்டம் கொண்டு வந்ததில் என்ன தவறு? என மனுதார்களைப் பார்த்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மக்களை காக்கவே சட்டம் இயற்றியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தமிழ்நாட்டில் லாட்டரி, குதிரை பந்தயம் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன என்பதை மனுதாரர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினர்.

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளித்த பிறகே இடைக்கால உத்தரவு குறித்து முடிவெடுக்க முடியும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த நீதிபதிகள், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

Also Read: “அனைவருக்கும் IITM” - திராவிட மாடலின் மற்றொரு தொலைநோக்கு பார்வை.. பயனடையும் அரசுப் பள்ளி மாணாக்கர்கள் !