Tamilnadu
“தொழிலாளத் தோழர்களின், பாட்டாளிகளின் பாதுகாவலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி புகழாரம் !
பாட்டாளிகளின் பாதுகாவலர்
தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதாவை நிறுத்தி வைப்பது என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பதன் மூலமாக பாட்டாளிகளின் அரசே என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி என்பது எப்போதும் தொழிலாளத் தோழர்களின் ஆட்சியாகவே அமைந்திருந்துள்ளது.
* குடிசை மாற்று வாரியம்.
* ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரியம்.
* தரிசு நிலங்களை ஏழைகளுக்கு வழங்கியது.
* விவசாய தொழிலாளர்க்கு நியாயமான கூலி வழங்க கணபதியா பிள்ளை ஆணையம்.
* நகர்ப்புற தொழிலாளர் ஊதியத்தை நிர்ணயம் செய்ய கார்த்திகேயன் ஆணையம் அமைத்தது.
* விவசாயத் தொழிலாளர்கள் குடியிருந்த மனைகள் அவர்களுக்கே சொந்தம் ஆக்கும் வகையில் குடியிருப்பு மனைச் சட்டம் கொண்டு வந்தது.
* கை ரிக்ஷாவை ஒழித்தது.
* இந்தியாவிலேயே முதன் முதலாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்தது.
* அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.
* அமைப்பு சாராத் தொழிலாளர் வாரியம் அமைத்தது.
* மே தினப் பூங்கா அமைத்தது.
- அந்தளவுக்கு தொழிலாளத் தோழராக ஆட்சியை நடத்தியவர் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள். அவர் வழியில் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கடந்த இரண்டு ஆண்டுகாலத்தில் தொழிலாளத் தோழர்களின் அரசாகத்தான் அமைந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் தொழிலாளர் நல வாரியங்களில் முந்தைய ஆட்சியாளர்களால் தரப்படாமல் நிலுவையில் இருந்த 1 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் செய்து தரப்பட்டுள்ளது. 6 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 25க்கும் மேற்பட்ட தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தினை நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 12 ஐ.டி.ஐ. நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
6 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவை போன்ற உதவித் தொகைகள் அனைத்தும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக கடை மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தித் தர சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் பெரிய அளவில் 65 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறிய அளவில் 817 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் இதுவரை 15 ஆயிரத்து 691 நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன. இதில் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
2 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது என்றால் அதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் உருவாகி இருக்கிறது. இந்த நிறுவனங்கள் 2 லட்சம் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க இருக்கின்றன. புதிய வேலை வாய்ப்புகள், அதன் மூலம் நிலையான வேலைகள், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் ஆகியவற்றின் மூலமாக பாட்டாளிகளை உருவாக்கி, அவர்களுக்கு உதவி செய்யும் அரசாக தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் புதிதாக வரும் நிறுவனங்கள், வேலை நேரங்களில் எளிதில் பின்பற்றும் வேலை நேரத்தை எதிர்பார்க்கிறார்கள். இதனையே திருத்தச் சட்டமாக தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. “தமிழகம் மிகப் பெரிய உற்பத்தி தொழிற்சாலைகளைக் கொண்ட கேந்திரமாக விளங்குகிறது. இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளையும், தொழிற்சாலை பணியாளர்களையும் கொண்ட மாநிலம் தமிழகமாகும். இந்த நிலையில் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறை சங்கங்களிடம் இருந்து மாநில அரசுக்கு கோரிக்கை மனுக்கள் வந்த வண்ணம் உள்ளன.
அதில், வேலை நேர சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும். எளிதில் பின்பற்றக் கூடிய, குறிப்பாக பெண்களுக்கான வேலை நேரங்கள் தொடர்பான சட்டப்பூர்வமான வழிவகைகளை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. மத்திய தொகுப்புச் சட்டத்தின் 127-வது பிரிவின்படி, தொழிற்சாலைகளில் ஓய்வு இடைவெளி, கூடுதல் பணிநேரம், நீட்டிக்கப்படும் நேரம் தொடர்பான அம்சங்கள் குறித்து மாநில அரசே அறிவிப்பாணையை வெளியிட்டு முடிவெடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, தொழிற்சாலைகளில் எளிதில் பின்பற்றக் கூடிய நேரத்தை நிர்ணயிக்கும் வகையில், தொழிற்சாலைகள் சட்டம்-1948-ஐ திருத்தம் செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது” என்கிறது அந்த சட்டத் திருத்தம். இதன் மூலமாக தொழிலாளர் வேலைப்பளு அதிகமாகும் என்று விமர்சனங்கள் எழுந்தது. சிலர், இதற்குத் தான் காத்திருந்ததைப் போல தாழ்த்தும் விமர்சனங்களை அரசு மீது வைத்தார்கள்.
தொழிலாளர் உரிமையைப் பாதுகாக்க ஏராளமான சட்டங்கள் இருப்பதால் இந்த பயம் தேவையில்லை என்றாலும் விமர்சனத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் முதலமைச்சர் அவர்கள் இதனைத் திரும்பப் பெற முடிவெடுத்தார்கள். "தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் முனைப்போடு செயல்பட்டு வரக்கூடிய இந்த அரசு ஒரு சட்டமுன்வடிவை எந்த அளவு உறுதியுடன் கொண்டு வருகின்றதோ, அது குறித்து மக்களிடம் ஏதேனும் மாற்றுக் கருத்துக்கள் வரப் பெற்றால், அவற்றைச் சீர்தூக்கி ஆராய்ந்து, அவர்களின் கருத்துகளுக்கிணங்க, அவற்றிற்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்துகொள்வதிலும் அதே அளவு உறுதிகாணப்பட வேண்டும்" என்று கம்பீரமாகக் கூறுகிறது அரசின் செய்திக்குறிப்பு.
முதலமைச்சர் நினைத்து இருந்தால் பொதுவெளியில் விமர்சனம் எழுந்ததும் உடனே அதனை திரும்பப் பெற்று பெயர் வாங்கி இருக்க முடியும். ஆனால் அனைத்து தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்த உத்தரவிட்டார்கள். பின்னரே, தனது முடிவை அறிவித்தார்கள். முதலமைச்சரின் பெருந்தன்மை இதன் மூலமாக வெளிப்படுகிறது. இத்தகைய பெருந்தன்மையை அனைவரிடமும் எதிர்பார்க்க முடியாது அல்லவா?
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!