Tamilnadu

குழந்தை இல்லாத விரக்தி.. மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தையை 24 மணி நேரத்தில் மீட்ட போலிஸ்!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் வடமாநிலத்தைச் சேர்ந்த கமலினி என்ற பெண் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர்களுக்குக் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதுபோல் நடித்துவந்த உமா என்ற பெண், கமலினிக்குப் பிறந்த ஆண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனையிலிருந்து தலைமறைவாகியுள்ளார்.

இதையடுத்து கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராணி என்பவரை உமா தொடர்பு கொண்டு தனக்குக் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாங்கள் பேருந்து மூலம் ஊருக்கு வந்து கொண்டிருப்பதாகவும் அவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதற்கிடையில் மருத்துவமனையில் குழந்தை காணாமல் போனது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து திருப்பூர் போலிஸாருக்கு கள்ளக்குறிச்சி அருகே கடத்தப்பட்ட குழந்தை இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

பின்னர் திருப்பூர் போலிஸார் கள்ளக்குறிச்சியில் உள்ள சிறப்புப் புலனாய்வு போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அவர்கள் பரங்கினத்தம் கிராமத்தில் பதுங்கி இருந்த உமா மற்றும் அவருக்கும் அடைக்களம் கொடுத்த ராணி ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த குழந்தையை மீட்டனர்.

பிறகு இவர்கள் திருப்பூர் மாவட்ட போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையைக் கடத்திய உமாவிடம் நடத்திய விசாரணையில், தனக்குக் குழந்தை இல்லை என்ற விரக்தியால் குழந்தையைத் திருடியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவரிடம் போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “Meeshoல இருந்து பேசுறோம்.. Car பரிசா விழுந்துருக்கு”: நம்பி 4 லட்சம் ஏமாந்த வாலிபர் எடுத்த விபரீத முடிவு