Tamilnadu

Online-ல் பொருள் வாங்கும் மக்களே.. இராணுவ வீரர்கள், CRPF பெயரில் மோசடி: எச்சரிக்கும் புதுவை சைபர் கிரைம்!

தற்போதுள்ள இணைய உலகில் அனைத்தும் இணையமாக மாறிவிட்டது. இதில் எவ்வளவு நல்லது இருக்கிறதோ அந்த மோசமான விஷயங்களும் உள்ளது. நாம் அனைத்தும் இணையத்திலேயே பெற்றுக்கொள்ள முடிகிறது. குறிப்பாக ஆப்கள் மூலம் நமக்கு தேவையானவற்றை ஆன்லைன் மூலமே பெற்று கொள்ள முடிகிறது.

இதனால் மக்கள் ஆடைகளில் இருந்து சாப்பாடு வரை அனைத்தும் ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்கின்றனர். நல்லதுக்காக உருவாக்கப்பட்ட இதனை பலரும் தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றனர். இதுபோல் சைபர் குற்றங்கள் தற்போது அதிகரித்தே காணப்படுகிறது. இதனால் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது தங்களை இராணுவ வீரர்கள் என்று கூறி மர்ம கும்பல் ஆன்லைனில் மோசடியில் ஈடுபட்டு வருவதாக புதுச்சேரி சைபர் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வெளியான எச்சரிக்கை அறிவிப்பில், பழைய - புதிய பொருட்களை வாங்க விற்க உதவும் உதவும் செயலிகள் மற்றும் சமூக வலைதளங்களான OLX, Facebook, Instagram, Second Hand Mall, Koove, ListUp, Tradly, Quikr, Zefo, MaxDeal, EBay, Spoyl, Tips To Sell Used Things Online போன்றவற்றில் இணைய வழி மோசடிக்காரர்கள் அதிகாமாக காணப்படுகின்றனர்.

அவர்கள் தங்களை இராணுவ வீரர்கள் என்றும், CRPF அதிகாரிகள் என்றும், ஒன்றிய அரசில் பணிபுரிந்து வருவதாக கூறியும், தற்போது தனக்கு மாறுதல் வந்து விட்டதால் தான் அடுத்த வாரம் டெல்லி செல்ல வேண்டும் என்றும், எனவே மேற்கண்ட பொருட்களை விற்க இருக்கிறேன் என்றும் கூறி புகைப்படத்துடன் கூடிய சில பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த விளம்பரங்களை கண்டு தொடர்பு கொண்டால், இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருளை 90 ஆயிரத்திற்கு திருவதாகவும், தங்களால் இந்த பொருட்களை எடுத்துச் செல்ல முடியாது என்றும் கூறுகின்றனர்.தொடர்ந்து சிறிது பேரம் பேசி அவர்கள் கொடுக்கின்ற வங்கி கணக்குகளில் (UPI ID) நாம் அட்வான்ஸ் தொகையாக 10 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் பணத்தை செலுத்திய உடன் அவர்களுடைய இணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டு விடும்

இது போன்ற செயலிகளையும், விளம்பரங்களையும் மக்கள் நம்ப வேண்டாம். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இதுபோன்று 14 புகார்கள் பதிவாகியுள்ளது ஆகவே பொதுமக்கள் இதுபோன்ற குறைந்த விலைகளில் பொருள் கிடைக்கிறது என்று பொதுமக்கள் யாரும் பணத்தை மோசடி நபர்களிடம் செலுத்தி மோசடிக்காரர்களிடம் ஏமாற வேண்டாம் என்று புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Also Read: ஒரே மாதத்தில் 3 முறை.. மோடி, யோகி -பழிவாங்க தொடரும் கொலை மிரட்டல்கள்:கேரளாவை தொடர்ந்து உபியிலும் அதிர்வலை