Tamilnadu
“அ.தி.மு.க ஆட்சியில் PM வீடு கட்டும் திட்டத்தில் ரூ.50.28 கோடி முறைகேடு”: CAG வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்!
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஏராளமான ஊழல்களும், முறைகேடுகள் நடைபெற்றதாக அப்போதைய எதிர்கட்சியான தி.மு.க தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. மேலும், ஆட்சிக்கு வந்ததும் அ.தி.மு.க-வின் முறைகேடுகள் வெளிகொண்டுவந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தி.மு.க அறிவித்திருந்தது.
அதன்படி, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சிக்கு வந்த தி.மு.க., கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 2016ம் ஆண்டு முதல் 2021 வரையிலான ஐந்தாண்டு ஆட்சியின் செயல்திறன் குறித்த இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG) of India) அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் அ.தி.மு.க-வின் பல்வேறு முறைகேடுகள் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஒன்றிய அரசு விதிகளுக்கு முரணாக, டைப்பிஸ்ட்டுகள், இளநிலை பொறியாளர்களை கொண்டு டெண்டர்கள் விடப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளதும், ஒரே IP addressல் இருந்து பல கம்பெனிகள் டெண்டர்களுக்கு விண்ணப்பித்ததும், நெடுஞ்சாலைத்துறையின் கம்பியூட்டரில் இருந்தே சிலர் டெண்டருக்கு விண்ணப்பித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் கடந்த 2016 - 2021 காலக்கட்டத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் ரூ.50.28 கோடி முறைகேடு நடைபெற்று உள்ளதாகவும், இது மேலும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் சி.ஏ.ஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளிவந்த அறிக்கையில், 2016-2021 வரையிலான காலத்தில் 5.09 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு வெறும் 2.80 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டது.
மேலும், மானியம் பெறுவதற்கான ஒன்றிய அரசின் நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றாத காரணத்தால், ஒன்றிய அரசின் ரூ.1,515.60 கோடி நிதி உதவியை உரிய நேரத்தில் தமிழக அரசால் பெற முடியவில்லை. ஊரக வளர்ச்சி இயக்குனர் விளம்பரங்களுக்கும் திட்டத்துடன் தொடர்பற்ற பிறவற்றுக்கும் நிர்வாக நிதியிலிருந்து ரூ.2.18 கோடி செலவு செய்துள்ளார்.
இதில், திட்டமிடல் மற்றும் கண்காணிப்புக் குறைபாடுகளால் ஆதிதிராவிடர், பழங்குடியினர் குடும்பங்களுக்கென இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 60 சதவீதம் வீடுகளை எட்ட முடியவில்லை.பெரும்பாலான எஸ்.சி., எஸ்.டி., குடும்பங்கள் சரியான காரணமின்றி சமூகப் பொருளாதார மற்றும் சாதிக் கணக்கெடுப்பு தரவு தளத்தில் இருந்து அகற்றப்பட்டன.
பயனாளியை அடையாளம் காணப் பயன்படுத்தும் சமூகப் பொருளாதார மற்றும் சாதிக் கணக்கெடுப்பு தரவில் பல குடும்பங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவரின் பெயர் ‘தெரியாது‘ என்று குறிக்கப்பட்டு இருக்கிறது. இந்த குறைபாட்டை தவறாகப் பயன்படுத்தி, பெருமளவில் வீடுகள் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது.
‘தெரியாது‘ என்ற உள்ளீட்டை தவறாகப் பயன்படுத்தி மொத்தம் 3 ஆயிரத்து 354 வீடுகள், பயனாளியாகத் தகுதியற்றோருக்கு முறைகேடாக ரூ.50.28 கோடி செலவில் வழங்கப்பட்டது. மாநில அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் முறைகேடாக அனுமதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.
இந்நிலையில், ‘தெரியாது‘ என்று உள்ளீடு கொண்ட பெயர் தரப்படாத பயனாளிகள் பெயரில் ஒப்பளிப்பு ஆணைகள் வழங்கப்பட்டு, உதவித்தொகை வழங்குவதற்காக வேறு குடும்பங்களைச் சேர்ந்த நபர்களின் வங்கி கணக்குகள் இணைக்கப்பட்டு இருந்தன. தகுதியான பயனாளிகள் பெயரில் ஒப்பளிப்பு ஆணைகள் வழங்கப்பட்டது. ஆனால், உதவித் தொகையானது. தகுதியற்ற நபர்களின் வங்கி கணக்குகளுடன் மோசடியாக வழங்கப்பட்டது.
2021 மார்ச் 31-ந்தேதி நிலவரிப்படி, ஒப்பளிப்பு அளிக்கப்பட்ட 5.09 லட்சம் வீடுகளில் 2.80 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டிருந்தன. பெருமளவில் கள ஆய்வுப் பதவிகள் நேர்மையற்ற முறையில் கையாளப்பட்டன. புவிசார் குறியீடு முறையில் மற்றும் வீட்டின் புகைப்படங்களின் நேர முத்திரையில் பல முரண்பாடுகள் இருப்பது தணிக்கையின் போது கண்டறியப்பட்டது.
இந்த அறிக்கை வெளியாகி அ.தி.மு.க ஆட்சியில் நடந்த நிர்வாக திறன் அம்பலமாகியுள்ளது. மேலும் இதில் தொடர்புடைய அ.தி.மு.க முக்கிய புள்ளிகள் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!