Tamilnadu

தண்டவாளத்தில் படுத்திருந்த 3 இளைஞர்கள்.. இரயில் மோதியதில் உடல் நசுங்கி இருவர் பலி.. திருவிழாவில் சோகம் !

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உப்பூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு அமைந்திருக்கும் ஆலங்காடு மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. எனவே இந்த திருவிழாவை காண சுற்றி இருக்கும் கிராம புறங்களில் இருந்து பலரும் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றைய முன்தினம் இரவு இந்த திருவிழாவை காண நாகை மாவட்டம் தெற்குபிடாகை மேலமருதூரைச் சேர்ந்த முகேஷ் என்ற முருக பாண்டியன் (22), அருள் (24) மற்றும் பரத்குமார் (17) ஆகிய மூவரும் சென்றுள்ளனர். திருவிழாவில் நன்றாக சுற்றி ஜாலியாக இருந்துள்ளனர்.

பின்னர் நன்றாக சுற்றிய பின்னர் 3 பேரும் களைப்பாக உள்ளது என்று ஒரு இடத்தில் அமர்ந்திருந்து பின்னர் தங்கள் ஊருக்கு செல்ல இரயில் நிலையம் சென்று கொண்டிருந்தனர். அப்போது அனைவருக்கும் மிகவும் சோர்வாக இருந்தது என்பதால் அருகில் இருந்த ஒரு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்தனர். அப்போது இரயில் எதுவும் வரவில்லை என்பதால் அப்படியே தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்திருந்தனர்.

அந்த சமயத்தில் அங்கு தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயில் வேகமாக வந்துள்ளது. அப்போது தண்டவாளத்தில் படுத்திருந்த 3 பேரில், இருவர் மீது இரயில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற ஒருவரான பரத் என்பவர் மட்டும் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார்.

இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த ஒருவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விரைந்து வந்த திருவாரூர் ரயில்வே போலீசார், உயிருக்கு போராடி கொண்டிருந்த பரத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த மற்ற இருவரின் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்ததோடு இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதோடு இது தற்கொலையா அல்லது விபத்தா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவிழாவுக்கு வந்த போது, இரயில்வே தண்டவாளத்தில் படுத்திருந்த 2 இளைஞர்கள் இரயில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பெயிண்ட் தின்னரை குடித்த சகோதரிகள்.. உயிரிழந்த 3 வயது சிறுமி: தொடர் சிகிச்சையில் 5 வயது அக்கா!