Tamilnadu

கடையில் இருந்த 35 இருசக்கர வாகனங்களை தீ வைத்து கொளுத்திய வாலிபர்.. காரணம் கேட்டு போலிஸ் ஷாக்!

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர்கள் பொன்னு பாண்டி மற்றும் பழனி குமார். இவர்கள் இருவரும் சேர்ந்து பழைய இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 17ம் தேதி சந்தான குமார் என்பவர் இவர்களது கடையில் தவணை முறையில் பழைய இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். பின்னர் வாகனம் வாங்கியதிலிருந்தே அடிக்கடி பழுதாகி வந்துள்ளது.

இதனால் சந்தான குமார் இது குறித்து பழனி குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியான பதில் எதுவும் சொல்லவில்லை. இதையடுத்து சந்தான குமார் இரண்டு மாதங்கள் தவணை கட்டியதோடு அடுத்த மாதம் நிறுத்தியுள்ளார்.

இது குறித்துக் கேட்டபோது வாகனத்தைச் சரிசெய்யவே அதிக செலவாகிவிட்டது. இதனால் தவணை கட்ட முடியாது என கூறியுள்ளார். இதற்கு பழனி குமார் தன்னிடமே வாகனத்தைச் சரி செய்து கொள்ளும்படியும், தவணையைக் கட்ட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சந்தான குமார், மதன்குமார் என்பவரை அழைத்துக் கொண்டு பழனி குமார் வீட்டிற்குச் சென்று தகராறு செய்துள்ளார். வீட்டின் கண்ணாடிகளை உடைத்து பழனி குமார் மற்றும் அவரது மனைவியைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து பழனி குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து கடையிலிருந்த 35 இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிவதாக பழனி குமாருக்குத் தகவல் வந்துள்ளது. அவர் அங்குச் சென்று பார்த்தபோது கடையில் நிறுத்தி வைத்திருந்த 35 வாகனங்களும் எரிந்து சேதமடைந்துள்ளது.

இதையடுத்து பழனி குமார், சந்தான குமார் மற்றும் மதன்குமார் ஆகிய இருவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்துத் தலைமறைவாக உள்ள இருவரையும் போலிஸார் தேடி வருகின்றனர்.

Also Read: மீண்டும் மேல்முறையீடு.. இயக்குநர் லிங்குசாமியின் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு !