Tamilnadu

“அதிநவீன சிகிச்சை கருவிகள்.. உலக தரத்தில் உயரும் அரசு மருத்துவமனைகள்” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

உலக ஆட்டிசம் (மனம் இருக்க நோய்) மாதத்தை முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு நோயாளிகளின் குறை தீர்ப்பு மையத்தை திறந்து வைத்து, அரசு ரோட்டரி சங்கம் மற்றும் எம்.ஆர் எப் நிறுவனத்தால் வழங்கப்படும் மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் குறை தீர்ப்பு முகாம் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று குறை தீர்ப்பு முகாம் திறக்கப்பட்டுள்ளது. ரோட்டரி சங்கம் சார்பில் கடந்த ஆண்டு வரை சைதாப்பேட்டை மாதாவரம் ஆகிய இடங்களில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக 60 லட்சம் மதிப்பிலான மார்பக புற்றுநோய் கண்டறியும் ஊடுகதிர் பரிசோதனை கருவியை ரோட்டரி சங்கம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வழங்கியுள்ளது. 38 லட்சம் மதிப்பிலான கண்புரை நீக்கும் இயந்திரம், கண் அறுவை சிகிச்சைக்கான நுண்ணோக்கி இயந்திரம் உயர் வேதியல் பகுப்பாய்வு இயந்திரம் ஆகிய கருவிகளை இந்த மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அருவை சிகிச்சை இயந்திரங்களை சுத்தம் செய்யும் அதிநவீன உபகரணங்கள் 58 லட்சம் செலவில் மருத்துவ சேவைகள் கழகம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் 1.18 லட்சம் மதிப்பிலான அதிநவீன மருத்துவ உபகரணங்கள் இந்த மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

மொத்தமாக தனியார் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு ஆகிய இரண்டையும் சேர்த்து 2.18 மதிப்பிலான உபகரணங்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஸ்டான்லி, ராயப்பேட்டை, கே.எம்.சி, ராஜீவ்காந்தி ஆகிய அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் ஸ்டான்லியில் உள்ள செவிலியர் பயிற்சி பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 35 கோடி செலவில் விடுதி கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஸ்டான்லி மருத்துவமனைக்கு மட்டும் 147 கோடி ரூபாய் செலவிலான மருத்துவ கட்டடங்கள் கட்டப்படவுள்ளது. இதேபோல் ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் 100 படுக்கையின் கூடிய தீவிர சிகிச்சை வார்டு 40 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.

ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் நரம்பியல் துறைக்கு 65 கோடி செலவில் கட்டிடம் ஒன்று கட்டப்பட உள்ளது. மேலும் கே.எம்.சி மருத்துவமனையில் புதிய டவர் பிளாக் 125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் அரசு மருத்துவமனையின் சேவையைகளை பயன்படுத்திக் கொள்வதற்கு மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ்நாடு அரசு தொண்டு நிறுவனங்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ள ஆவலாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஃபேமிலி மருத்துவமனையின் முதல்வர் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Also Read: விவசாயிகள் பாராட்டும் வேளாண் நிதிநிலை அறிக்கையை கொச்சைப்படுத்துவதா?.. அமைச்சர் MRK கண்டனம்!