Tamilnadu

பைக்கில் சென்ற காதலர்கள்.. போலிஸ் என கூறி காதலியை கடத்திய வாலிபர்: சிக்க வைத்த செல்போன் சிக்னல்!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியை சேர்ந்தவர் ரோபாஸ்டன். இவர் அதே பகுதியை சேர்ந்த 21 வயதான இளம்பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் ஊட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் செல்ல திட்டமிட்டனர்.

இதையடுத்து கடந்த 7 ம் தேதி சாயல்குடியில் இருந்து ஊட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டனர். மதுரை, ஒட்டன்சத்திரம், தாராபுரம் வழியாக வந்தனர். பல்லடம் அருகே வந்த போது அவர்களது இரு சக்கர வாகனத்தை ஒரு வாலிபர் பின்தொடர்ந்து வந்துள்ளார்.

திடீரென 2 பேரையும் வழிமறித்த அந்த வாலிபர் நான் போலிஸ், உங்களை பார்க்கும் போது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதனை அடுத்து அந்த பெண்ணை அங்கேயே நிற்க சொல்லிவிட்டு, காதலன் ரோபாஸ்டனை சிறிது தூரம் அழைத்து சென்றுள்ளார்.

பிறகு அவரிம், நீ இங்கேயே இரு, நான் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்விட்டு வருகிறேன் என கூறிவிட்டு கூறிவிட்டு சென்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சந்தேகமடைந்த ரோபாஸ்டன் உடனே காதலி நிற்குமிடத்திற்கு சென்று பார்த்தார்.

அப்போது அங்கு காதலியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அப்பகுதியில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. உடனே இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த புகாரினை பெற்று கொண்ட போலிஸார் மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளுக்கு தகவல் தெரிவித்து வாலிபரை பிடிக்க உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணை கொண்டும், சிசிடிவி காட்சிகள் அடிப்படையிலும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடத்தப்பட்ட இளம்பெண் மதுரையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மதுரை சென்ற பல்லடம் போலிஸார் இளம்பெண்ணை மீட்டனர். ஆனால் போலிஸார் வருவதை அறிந்த அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இதையடுத்து அந்த நபர் குறித்து போலிஸார் விசாரணை செய்ததில் திருப்பூர் வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்த கணேசன் என்பது தெரிய வந்தது. பின்னர் தலைமறைவாக இருந்த கணேசனை போலிஸார் கைது செய்தனர். போலிஸார் என கூறி கடத்தல் மற்றும் இரு சக்கர வாகன திருட்டு உட்பட 7 வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்த பல்லடம் போலிஸார் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read: புதுச்சேரி : தேர்வு முடிந்த மகிழ்ச்சி.. நண்பர்களுடன் கடலில் குளித்து கொண்டாடிய மாணவன்.. இறுதியில் சோகம் !