Tamilnadu

தமிழ்நாட்டில் நிலநடுக்க கண்காணிப்பு நிலையம்.. பேரவையில் 19 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் KKSSR!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் K.K.S.S.R. இராமச்சந்திரன் 19 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

1. பேரிடர் முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் தொடர் கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்தி புதிய TN-Alert கைபேசி செயலி மற்றும் மேம்படுத்தப்பட்ட TN-SMART செயலி ரூ.12.50 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

2. மயிலாடுதுறை மாவட்டம் திருமைலாடி மற்றும் முதலைமேடு கிராமங்களில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் இரண்டு பேரிடர் மீட்பு மையங்கள் அமைக்கப்படும்.

3. பேரிடர் காலங்களில் தடையற்ற தொலைத்தொடர்பை உறுதிப்படுத்தும் வகையில் 31 மாவட்டங்களில் தற்போதுள்ள அனலாக் (Analogue) VHF ரிப்பீட்டர்கள், ரூ.7.31 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் ரிப்பீட்டர்களாக மேம்படுத்தப்படும்.

4. வெள்ள பாதிப்பிற்குள்ளாகும் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றின் இடது கரை ரூ.14.50 கோடி மதிப்பீட்டில் பலப்படுத்தப்படும்.

5. தமிழ்நாட்டில் புதியதாக நிலநடுக்க கண்காணிப்பு நிலையம் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

6. நில அளவை மற்றும் நில ஆவணங்கள் தொடர்பான இ-சேவைகள் குறித்த தகவல்களை அளிக்கும் பொருட்டு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்ககத்தில் தொலைபேசி அழைப்பு மையம் நிறுவப்படும்.

7. இடம் சார்ந்த நில ஆவணங்களின் விவரங்களை அறிவதற்குரிய புதிய செயலி உருவாக்கப்படும்.

8. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி வட்டங்களிலுள்ள 23 கிராமங்களில் மனை வாடகை (Ground Rent) விதிக்கப்பட்டு பட்டா வழங்கப்படாமல் உள்ள பகுதி மக்களுக்கு இரயத்துவாரி மனைப்பட்டா வழங்கப்படும்.

9. ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம் மற்றும் நகரம், வார்டு C, D மற்றும் E-ல் சர்க்கார் புறம்போக்கு நத்தம் நிலத்தில் 70 ஆண்டுகளுக்கு மேலாக தார்சு வீடு/ஓட்டு வீடு கட்டி குடியிருந்து அனுபவம் செய்து வரும் 4000 குடும்பங்களுக்கு நிலவரித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வீட்டு மனை பட்டா வழங்கப்படும்.

10. கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், புஞ்சை புகழூர் வடக்கு கிராமம் புல எண்.375/B, புஞ்சை புகழூர் வடக்கு கிராமம், புல எண்.203/A மற்றும் நஞ்சை புகழூர், புல எண்.269-இல் 50 ஆண்டு காலமாக வசித்து வரும் மக்களுக்கு நத்தம் நிலவரித்திட்டத்தின் கீழ் வீட்டுமனை பட்டா வழங்கப்படும். இதனால் சுமார் 1,705 குடும்பங்கள் பயனடையும்.

11. தஞ்சாவூர் மாவட்டம். திருவிடைமருதூர் வட்டம், திருபுவனம் கிராமத்தில்

அரசு புறம்போக்கு நத்தம் நிலத்தில் நீண்ட நாட்களாக குடியிருந்து வரும் குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்கப்படும்.

12. திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் வட்டம், வெங்களாபுரம் கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களது நிலங்கள் கிராமம் மற்றும் நகர்ப்புற வருவாய் ஆவணங்களில் சேர்க்கப்படாமல் இருந்து வந்த நிலையில், பொது மக்களின் நீண்ட கால கோரிக்கைக்குத் தீர்வு காணும் வகையில் நிலவரித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு இணைய வழி வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும்.

13. தருமபுரி மாவட்டம் மற்றும் வட்டம், ஏ.ரெட்டிஅள்ளி கிராமத்தில் நிலஎடுப்பு செய்து ஏற்கெனவே வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா 2020-ஆம் ஆண்டு இரத்து செய்யப்பட்டது. அவ்விடத்தில் ஊரக வளர்ச்சித்துறை அல்லது வீட்டு வசதித் துறையுடன் இணைந்து வீட்டு வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய பயனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பட்டா வழங்கப்படும்.

14. ஈரோடு மாவட்டத்தில், பவானிசாகர் அணை மற்றும் கீழ்பவானி நீர்பாசனத் திட்டங்களின் பேரில் திட்ட நிபந்தனைப் பட்டா பெற்றவர்களுக்கு தற்போது, திட்ட நிபந்தனையை தளர்வு செய்து அயன் பட்டா வழங்கப்படும்.

15. தமிழ்நாடு நிலச்சீர்திருத்த (நில உச்சவரம்பு நிர்ணய) சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “குடும்பம்“ என்ற வரையறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை அளிக்கும் பொருட்டு திருமணமாகாத மகள்கள் மற்றும் திருமணமாகாத பேத்திகள் என்ற சொற்கள் நீக்கப்படும்.

16. பதிவு பெற்ற சுய உதவிக்குழுக்களுக்கு கிராமங்களில் குடிசைத்தொழில் செய்ய ஏதுவாக பூமிதான நிலங்கள் வீட்டுமனையாக வழங்கப்படும்.

17. நகர்ப்புற நில உச்ச வரம்புச் சட்டத்தின் கீழ், கையகப்படுத்தப்பட்ட உபரி நிலங்களை அறியாமல் கிரையம் பெற்றோர் திட்டத்தின் கீழ் வரன்முறை செய்யும் தீர்வு நாள் நீட்டிக்கப்படும்.

18. நலிந்தோர் நிவாரண உதவித் திட்டம் மற்றும் விபத்து நிவாரண உதவித் திட்டம் தொடர்பான சேவைகள் இணையவழியில் வழங்கப்படும்.

19. வருவாய்த் துறையில் வழங்கப்படும் இதர சான்றிதழ்கள் அனைத்தும் இணையவழியில் வழங்கப்படும்.

Also Read: தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்... அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்த முக்கிய அறிவிப்புகள் என்ன ?