Tamilnadu
சென்னையில் திரைப்பட நகரம்.. பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் மு.பெ.சாமிநாதன்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. நேற்று செய்தித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
1. சென்னை வள்ளுவர் கோட்டம் உலகத் தரத்தில் ரூ.80 கோடியில் புனரமைக்கப்படும்.
2. டாக்டர் சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோரின் பெருமைகளைப் பறைசாற்றும் வண்ணம் ஒரு வரலாற்று சின்னம் சென்னையில் ரூ.5 கோடியில் அமைக்கப்படும்.
3. மன்னர் பூலித்தேவர் படையின் முக்கியத் தளபதியும், சுதந்திரப் போராட்ட வீரருமான வெண்ணி காலாடிக்குத் ரூ.50 கோடியில் திருவுருவச் சிலை தென்காசி மாவட்டம் விசுவநாதப்பேரியில் அமைக்கப்படும்.
4. சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை வேலுநாச்சியாருக்குப் பெருந்துணையாக நின்ற வீராங்கனை குயிலிக்கு ரூ.50 கோடியில் திருவுருவச் சிலை அமைக்கப்படும்.
5. வேலுநாச்சியார், மருது சகோதரர்களுடன் சேர்ந்து ஆங்கிலேயேருக்கு எதிராகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரரான வாளுக்குவேலி அம்பலம் அவர்களுக்கு ரூ. 50 லட்சத்தில் திருவுருவச் சிலை சிவகங்கை மாவட்டத்தில் அமைக்கப்படும்.
6. சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலம் அவர்களது பிறந்த நாளான ஜூன் 10ம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
7. ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தியாகி கொடிகாத்த குமரனுக்கு ரூ.3கோடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும்.
8. பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தினை நிறைவேற்றக் காரணமாயிருந்த பெருந்தலைவர் கு.காமராஜருக்கு கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் ரூ.50 லட்சத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும்.
9. இந்தி திணிப்பினை எதிர்த்துப் போராடி முதன் முதலில் உயிர் தியாகம் செய்த கீழப்பழுவூர் சின்னசாமிக்கு அரியலூர் மாவட்டத்தில் ரூ.3 கோடியில் அரங்கம் அமைக்கப்படும்
10. தமிழ் மொழி மீது தீராத பற்றுக் கொண்டு வடமொழிப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தியும், கள்ளுக்கடை மறியல், வைக்கம், சைமன் குழு எதிர்ப்பு, உப்பு சத்தியாக்கிரகம் மற்றும் நீல் சிலை சத்தியாக்கிரகம் ஆகிய போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைத் தண்டனை பெற்று மடிந்த அண்ணல் தங்கோவுக்கு வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ரூ. 50 லட்சத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும்.
11. தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர், தேசியப் போராட்டத் தியாகி, உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தின் வழிநடைப் பாடல் ஆசிரியர் மற்றும் பத்ம பூஷண் பட்டம் பெற்றவருமான நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு ரூ.20 லட்சத்தில் மார்பளவு சிலை அமைக்கப்படும்.
12. டி.எம். சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவினையொட்டி அவரது புகழைச் சிறப்பிக்கும் வகையில் மதுரையில் ரூ.50 லட்சத்தில் அவருக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்.
13. அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சென்னை அருகே அதிநவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
14. தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் நான்கு அதிநவீன படப்பிடிப்புத் தளங்கள் அமைக்கப்படும்.
15. பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?