Tamilnadu

பள்ளி தேர்வு எழுத செல்லாத மாணவன்.. தகவல் கிடைத்ததும் துரிதமாக செயல்பட்ட காவலர்கள்.. குவியும் பாராட்டு !

தமிழ்நாட்டில் தற்போது பள்ளிகள் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல் சரகம் கொந்தாமூர் கிராமத்தில் உள்ள அரசு மேல் நிலை பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

பள்ளி தேர்வு 10:00 மணிக்கு துவங்க உள்ள நிலையில் தேர்வுக்கு அனைத்து மாணவர்களும் வருகை தந்த நிலையில், இயற்பியல் படிக்கும் மோனிஷ் என்ற மாணவர் மட்டும் வரமால் இருந்துள்ளார். தேர்வு நேரம் நெருங்கிய நிலையில், ஒரு மாணவர் மட்டும் தேர்வுக்கு வராதது தலைமையாசிரியருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்த்து பள்ளி தலைமையாசிரியர் அங்கிருந்த மதன் என்ற காவலரிடம் இதுகுறித்து கூற உடனடியாக சமயோகிதமாக செயல்பட்ட காவலர் மதன், மாணவரின் ஊர் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தென்கோடிபாக்கம் என்பதை தெரிந்துகொண்டுள்ளார்.

அதன்பின்னர் அந்த பகுதியில் பகல் ரோந்து காவலர் யார் என்று காவல் நிலையத்தில் விசாரித்து உடனே மணிகண்டன் என்ற அந்த காவலருக்கு தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துக்கூறியுள்ளார். அதன்பின்னர் காவலர் மணிகண்டன் அந்த பகுதியில் விசாரித்து மாணவரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு மாணவரை சந்தித்து ஏன் தேர்வு எழத செல்லவில்லை என கேட்க அவரின் பெற்றோருடன் சண்டையிட்டு அழுதுகொண்டு தேர்வு எழுத செல்லாமல் மறுத்துள்ள தகவல் தெரியவந்துள்ளது. உடனடியாக மாணவனை சமாதானபடுத்தி அவருக்கு அறிவுரை கூறி தனது இருசக்கர வாகணத்தில் மிக வேகமாகவும் பாதுகாப்பாகவும் பள்ளிக்கு உரிய நேரத்தில் அழைத்துவந்து தேர்வெழுத வைத்துள்ளார். காவல்துறையின் இந்த செயலை அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Also Read: பள்ளி மாணவனின் முகத்தை சிதைத்த மர்ம கும்பல்.. வீட்டுக்கு வெளியே உறங்கியபோது நேர்ந்த அவலம்: நடந்தது என்ன?