Tamilnadu

பெண்ணிடம் அத்துமீறிய BIG BASKET டெலிவரி பாய்.. அலட்சியமாக பதிலளித்த Customer Care.. பெண் பகிரங்க புகார்!

சென்னையில் மளிகை சாமான்களை வீட்டுக்கே வந்து டெலிவரி செய்யும் டெலிவரி நிறுவனமான BIG BASKET நிறுவனத்தின் பெண் ஒருவர் புகார் கூறியுள்ளார். டெலிவரி செய்பவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என்றும், இது குறித்து அந்த நிறுவனத்திடம் கூறிய போது இந்த விவகாரம் தொடப்பாக புகார் அல்லது சமூக வலைத்தளத்தில் ஏதும் பதிவிட வேண்டாம் என்றும் கூறியதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அக்சயா என்ற பெண் ஒருவர் பதிவிட்டுள்ள பதிவில், "எனது நண்பர் 2 நாட்களுக்கு முன்பு BIG BASKET -டில் இருந்து மளிகை சாமான்களை ஆர்டர் செய்தார், அது இன்று டெலிவரி ஆனது, டெலிவரி செய்யும் நபர் வந்தபோது மளிகை சாமான்களை கதவின் அருகில் உள்ள நாற்காலியில் வைக்கச் சொன்னேன்.ஆனால் அந்த டெலிவரி செய்யும் நபர் என் அனுமதியின்றி நேராக சமையலறைக்கு வந்து இல்லை மேடம் பரவாயில்லை நான் கிச்சனில் பொருட்களை வைக்கிறேன் என்றார். நான் சமையலறைக்கு சென்று , நீ இந்த இடத்தை விட்டு வெளியேறு என்று சொன்னேன்

அதற்கு அவன் பதில் சொல்லாமல் என் அருகில் வந்து என் தோள்களை தொட்டு என் அருகில் வர முயன்றான். நான் பயந்து கோபமடைந்து ஹாலுக்கு ஓடி வந்து பிரதான கதவைத் திறந்து அவனை வெளியே போகுமாறு கத்திக் கொண்டிருந்தேன். ஆனால், ஹாலுக்கு வந்து கதவை மூடி மீண்டும் என் அருகில் வர முயன்றார். அதோடு "மேடம் உங்கள் நம்பரைக் கொடுங்கள், நான் புறப்படுகிறேன்" என்று அவர் மீண்டும் மீண்டும் கூறி சுமார் 20 முறை என் மொபைல் எண்ணைக் கேட்டார்.

வெளியே கேமரா இருக்கு, தயவு செய்து விட்டுவிடு, என் நண்பன் வேறு அறையில் இருக்கிறான், நான் போலீஸை அழைக்கிறேன் என்று கத்தினேன்.அதன்பின்னர் கடைசியாக நான் என் நண்பரை உதவிக்கு அழைத்தேன், அவர் அதைப் பார்த்து டெலிவரி செய்பவர் சிரித்துக்கொண்டே வெளியே சென்றார்.

என்ன நடக்கிறது, ஒரு பெண் தனியாக இருக்கும்போது டெலிவரி பையன் எவ்வளவு தைரியமாக நடந்துகொள்கிறான் என்பதை என்னால் உண்மையில் புரிந்து கொள்ள முடியவில்லை. இது குறித்து இந்த புகாரளிக்க உடனடியாக BIG BASKET வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொண்டால், அவர்கள் அந்த நபரை வேலையில் இருந்து நிறுத்துவதாக என்னிடம் சொன்னார்கள். காவல் நிலையத்தில் புகார் செய்ய அந்த நபரின் எண் மற்றும் பெயர் வேண்டும் என்று நான் அவர்களிடம் கேட்டபோது அவர்கள் பெயரை மட்டுமே சொன்னார்கள், எண் அல்லது எந்த விவரமும் சொல்லவில்லை.

5 வெவ்வேறு நபர்களிடம் பேசியபோதும், அனைவரும் ஒரே மாதிரி "நிறுவனக் கொள்கையின்படி டெலிவரி பார்ட்னரின் எண்ணை நாங்கள் வெளியிடக்கூடாது" என பதிலளித்தனர்.மேலும் சமூக ஊடகங்களில் இது தொடர்பாக எதையும் பகிர வேண்டாம் அல்லது காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள். ஆனால், என்னால் அதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது! போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கிறேன். BIG BASKET நிறுவனத்தின் இதுபோன்று நடந்துகொண்ட நபர் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளேன், மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Also Read: வடமாநிலத்தவர் தாக்கப்பட்டதாக போலியாக வீடியோ எடுத்து வதந்தி.. RSS பிரமுகரை கைது செய்த தமிழ்நாடு போலிஸ்!