Tamilnadu

66 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருட்டு: இதுதான் மோடி அரசின் டிஜிட்டல் இந்தியாவா? பின்னணி என்ன?

இந்தியாவில் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில், நாட்டிலேயே மிகப்பெரிய தகவல் திருட்டு ஒன்று தற்போது அம்பலமாகியுள்ளது.

நாடு முழுவதும் 66 கோடியே 9 லட்சம் பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஜி.எஸ்.டி., நிறுவனம், பல்வேறு மாநிலங்களின் அரசு போக்குவரத்து நிறுவனங்கள், ஆர்.டி.ஓ., மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.

இதேபோல், அமேசான், நெட்ஃபிளிக்ஸ், யூடியூப், போன்பே, பிக் பாஸ்கட், புக் மை ஷோ, இன்ஸ்டாகிராம், சொமாட்டோ, பாலிசி பஜார், அப்ஸ்டாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் தகவல்களும் திருடப்பட்டுள்ளன. பைஜூஸ், வேதாந்து உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் தகவல்களும், நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் தகவல்களும் திருடப்பட்டுள்ளன.

இதேபோல், காப்பீடுதாரர்கள், கடன் அட்டை மற்றும் பற்று அட்டை வைத்திருப்பவர்கள், மாத வருமானம் பெறுவோரின் தகவல்களும் களவாடப்பட்டுள்ளன. ராணுவத்தில் பணியாற்றும் இரண்டரை லட்சம் பேரின் தகவல்களும் திருடப்பட்டுள்ளன. 24 மாநிலங்கள் மற்றும் 8 முக்கிய நகரங்களில் இந்த தகவல் திருட்டு அரங்கேறியுள்ளது.

அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 21 கோடியே 39 லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் நான்கரை கோடி பேரின் தகவல்களும், டெல்லியில் 2 கோடியே 70 லட்சம் பேரின் தகவல்களும் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பாக அரியானாவைச் சேர்ந்த விநாயக் பரத்வாஜ் என்பவரை தெலுங்கானா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியானா மாநிலம் பரிதாபாத் நகரில் இருந்து செயல்பட்டு வரும் இன்ஸ்பயர்வெப்ஸ் என்ற இணையதளம் மூலம் விநாயக் பரத்வாஜ், தனிப்பட்ட நபர்களின் விவரங்களை திருடி அதை கிளவுட் டிரைவ் லிங்க் மூலம் வெவ்வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளார். அவரிடமிருந்து 2 செல்போன்கள், 2 லேப்டாப்கள், தனிப்பட்ட தரவுகள் அடங்கிய கருவிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: BBC ஆவணப்படம்.. ஒன்றிய மோடி அரசின் தடை குறித்து விசாரணைக்கு தயாரான உச்சநீதிமன்றம்: முழு விபரம்!