Tamilnadu

சென்னை IIT-யில் தொடரும் மரணங்கள்.. மேற்கு வங்க மாணவர் தூக்கிட்டு தற்கொலை - 2 மாதத்தில் நடந்த 3வது பலி!

இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டி கல்வி நிலையங்களில் சாதிய பாகுபாடுகள் காரணமாக 72% பட்டியலின மாணவர்கள் ஐ.ஐ.டியில் இருந்து தங்களின் உயர் கல்வி படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேறியுள்ளனர். அதேபோல், சென்னை உள்ளிட்ட ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் கல்வி நிலையங்களில், தொடர்ச்சியாக மாணவர்கள் மர்மமான முறையில் தற்கொலை கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இதைத் தடுப்பதற்கு ஒன்றிய கல்வித்துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவருவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் சங்கங்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை ஐஐடியில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் தற்போது மற்றொரு மாணவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, மும்பை ஐ.ஐ.டி-யில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்த தர்ஷன் சொலான்கி என்ற மாணவர் கடந்த 12ம் தேதி விடுதியின் மாடியில் இருந்த குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சி சம்பவம் அடங்குவதற்குள் சென்னை ஐ.ஐ.டி-யில் இரண்டு மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்ரீவன் சன்னி ஆல்பட் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் சச்சின் குமார் என்ற மாணவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் சச்சின் குமார் ஜெயின் (31). இவர் சென்னை ஐ.ஐ.டி.யில் பி.எச்.டி. படித்து வந்தார். இவர் தனது நண்பர்களான ஐ.ஐ.டி.யில் பி.எச்.டி. படிக்கும் தேவகிஷ் ஜூஸ் (28), தேவராஜ் (28) ஆகியோருடன் கடந்த மூன்று மாதங்களாக வேளச்சேரி பிராமின் தெருவில் வாடகை வீடு எடுத்து தங்கி படித்து வந்தனர். 3 பேரும் கல்லூரிக்கு சென்றனர்.

ஆனால், சச்சின் குமார் ஜெயின் பாதியிலேயே வீட்டுக்கு திரும்பி வந்தார். பின்னர்  “என்னை மன்னித்து விடுங்கள், நான்  நலமாக இல்லை” என ஆங்கிலத்தில் (ஐயம் சாரி, ஐயம் நாட் குட் எனப்) என வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தார். பின்னர் நண்பர்களுக்கும் இதே வாசகத்தை அனுப்பி  வைத்துள்ளார். இந்த நிலையில் கல்லூரியில் இருந்து தேவகிஷ் ஜூஸ்  வீட்டுக்கு வந்தார்.  

அப்பொழுது வீட்டில் உள்ள அறையில் மின் விசிரி கொக்கியில் பெட்ஷீட்டால் தூக்கு மாட்டி சச்சின் குமார் ஜெயின் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் வேளச்சேரி போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கு என்ன காரணம் என விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 2 மாதங்களில் 3 வது மாணவர் ஐஐடி கல்வி நிலையங்களில் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நேற்று மும்பை.. இன்று சென்னை : 2 நாளில் 2 IIT மாணவர்கள் தற்கொலை: ஒரு மாணவர் தற்கொலை முயற்சி!