Tamilnadu
கிரைண்டரில் மாவு அரைக்கும்போது தூக்கி வீசப்பட்ட தாய்.. கண்ணீருடன் நடந்த மகளின் திருமணம்: குமரியில் சோகம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கீழப்பெருவிளை பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல் (51) - சாந்தி தம்பதியினர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பொன் பிரதீஷா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், எள்ளுவிளையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்று திருமணம் நடப்பதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இதனால் சண்முகவேல் வீடே திருமண நிகழ்ச்சிக்காக களை கட்டியிருந்தது. ஏராளமான உறவினர்கள் அங்கு வந்திருந்தனர். எனவே தாய் சாந்தி உறவினர்களை கவனித்துக் கொண்டு அவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டார். இதற்காக அவர் கிரைண்டரில் மாவு அரைக்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது எதிா்பாராத விதமாக கிரைண்டரில் மின்கசிவு ஏற்பட்டு சாந்தி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதைத் தொடர்ந்து அவரது உடற்கூறாய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து இது குறித்து ஆசாரிபள்ளம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மின்சாரம் தாக்கி மணமகளின் தாய் சாந்தி இறந்த நிலையில் நிச்சயிக்கப்பட்டபடி திருமணத்தை நடத்தவா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தனர். பின்னர் திருமணத்தை நடத்த வேண்டும் என்று இருவீட்டாரும் மனதை இறுக்கமாக்கி முடிவு செய்தனர்.
இதையடுத்து நாகர்கோவில் மாநகர மேயரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ், மற்றும் போலிஸ் துணையுடன் உடனடியாக சாந்தியின் உடல் உடற்கூறாய்வு செய்து முடித்தபின் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று ஏற்கனவே நிச்சயம் செய்த படி சாந்தியின் மகள் திருமணம் நடைபெற்றது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக மகிழ்ச்சியோடு கலகலப்பாக காணப்பட வேண்டிய திருமண மண்டபம் களையிழந்து காணப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!