Tamilnadu
3 நாளில் 2 பேர்.. திருச்சியில் மேலும் ஒருவர் தற்கொலை: ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தொடரும் சோகம்!
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் அவர் மசோதாவை நிறைவேற்றாமல் தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பினார்.இதன் காரணமாகத் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
இதையடுத்து மீண்டும் சட்டப்ரேவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சியில் கடந்த மூன்று நாளில் மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மணப்பாறை அருகே உள்ள சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் வில்சன். வடை, பஜ்ஜி போடும் மாஸ்டராக இருந்து வந்துள்ளார்.கடந்த சில மாதங்களுக்கு முன் கோவைக்கு வேலைக்குச் சென்றார்.
இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
அங்குச் சிகிச்சை பலனின்றி வில்சன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான வில்சன், பல இடங்களில் கடன் வாங்கி ரம்மி விளையாடி அதில் பணத்தை இழந்துள்ளார். இதனால் கடன் பிரச்சினை அதிகரித்து மனமுடைந்த நிலையில் வில்சன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!