Tamilnadu
அதிமுக அரசின் கடன் 4 லட்சம் கோடி.. நிதிநிலைமைச் சீர்செய்து சொன்னதைச் செய்து காட்டிய முதலமைச்சர்: முரசொலி!
சொன்னதைச் செய்த முதலமைச்சர் - 2
அ.தி.மு.க. ஆட்சியில் சீரழிக்கப்பட்ட நிதிநிலைமைச் சீர்செய்வோம் என்பதை உறுதிப்படுத்திச் சொல்லி வந்தார் முதலமைச்சர் அவர்கள். அதனையும் செய்து காட்டி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தபோது வருவாய் பற்றாக்குறை என்பது 62 ஆயிரம் கோடியாக இருந்தது. அந்த வருவாய் பற்றாக்குறையை 30 ஆயிரம் கோடி அளவுக்கு குறைத்துள்ளது தமிழ்நாடு அரசு. இது அரசின் தெளிவான செயல்திட்டத்தைக் காட்டுகிறது.
2006-2011 வரையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் வாங்கிய கடன் வெறும் 44 ஆயிரத்து 84 கோடி ரூபாய் மட்டுமே! ஆனால் 2011-21 அ.தி.மு.க. ஆட்சியில் வாங்கப்பட்டுள்ள கடன் மட்டும் சுமார் 4 லட்சம் கோடி!
2011 ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கடன் தொகை எப்படி ஏறிக் கொண்டு வந்துள்ளது என்பதைப் பாருங்கள்!
2011 -–12 - கடன் 1,02,439 கோடி
2012- –13 - கடன் 1,20,204 கோடி
2013- –14 - கடன் 1,40,041 கோடி
2014- –15 - கடன் 1,95,290 கோடி
2015- –16 - கடன் 2,11,483 கோடி
2016- –17- கடன் 2,52,431 கோடி
2017 –-18 - கடன் 3,14,366 கோடி
2018 –-19 - கடன் 3,55,844 கோடி
2019- –20 - கடன் 3,97,495 கோடி
2020 -–21 - கடன் 4,56,000 கோடி . - பழனிசாமியின் சாதனை என்பது இதுதான்!
தி.மு.க. ஆட்சியில் 438.78 கோடி ரூபாய் உபரி வருவாயுடன் நிதிநிலை அறிக்கை இருந்தது. அதனை 62 ஆயிரம் கோடி பற்றாக்குறையாக மாற்றியதுதான் பழனிசாமியின் சாதனை ஆகும். இன்று வருவாய் பற்றாக்குறை 65,994.06 கோடி ரூபாய். இதில் மட்டுமல்ல, பொதுத்துறை நிறுவனங்களில் வைத்துவிட்டுப் போன கடன்களும் லட்சம் கோடிக்கு மேல் ஆகும். இவ்வளவு கடன் வாங்கி ஏதாவது சாதனை செய்தார்களா என்றால் இல்லை.
2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட
* இலவச செல்போன் தரப்படவில்லை.
* ஏழை மக்களுக்கு அம்மா மினரல் வாட்டர் இலவசமாக தரப்படும்.
* குறைந்த விலையில் அவசியமான மளிகைப் பொருள்கள் தரப்படும்.
* வீடில்லா ஏழை மக்களுக்கு 3 சென்ட் இடம் தரப்படும்.
* அனைவருக்கும் அம்மா வங்கி அட்டை தரப்படும்.
* கல்விக் கடன்கள் அனைத்தும் அடைக்கப்படும்.
* கோ ஆப்டெக்ஸ் துணிகள் வாங்க 500 ரூபாய் கூப்பன் தரப்படும்.
* சென்னையில் மோனோ ரயில் விடுவோம்.
* கோவையில் மோனோ ரயில் ஓடும்.
* திருச்சியில் மோனோ ரயிலை விடுவோம். - இவை எதையும் செய்யவில்லை பழனிசாமி.
'நான் பல சாதனைகளைச் செய்ததால் கடன் வாங்க வேண்டி வந்தது' என்கிறார் பழனிசாமி. கொரோனா வந்ததால் கடன் வாங்கினாராம். கொரோனா இருந்தது ஒரு வருடம் தான். மீதி ஒன்பது ஆண்டுகள் என்ன செய்தார்கள் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள்?
ஆனால் இரண்டு ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டின் நிதிநிலைமை ஓரளவு சீர் செய்யப்பட்டுள்ளது. வருவாய் வரவினங்கள் கடந்த நிதி ஆண்டை விட 10.1 சதவிகிதம் அதிகமாகும் என்றும் அரசின் சொந்த வரிகள் வாயிலாக பெறப்படும் வருவாய் 19.3 சதவிகிதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்துக்கு வணிக வரிகள், முத்திரைத்தாள்களும் பத்திரப் பதிவுகளும், மாநில ஆயத்தீர்வை, வாகனங்கள் மீதான வரிகள் ஆகியவைதான் மிக முக்கியமான வரி வருவாய்கள் ஆகும்.
வரி அல்லாத வருவாய் கணிசமாக வரும். ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. வரி காரணமாக மாநிலத்தின் வருவாய் குறைந்து வருகிறது. மானியங்கள் மற்றும் இழப்பீடுகளை ஒன்றிய அரசிடம் இருந்து பெறுவதும் பெரும்பாடாக இருக்கிறது.
இந்த நிலையில் செலவினங்களைக் குறைப்பதில் தமிழ்நாடு அரசு கவனமாக இருக்கிறது. கடந்த ஆண்டு வெளியான நிதிநிலை அறிக்கையிலேயே நிதி மற்றும் நிருவாக நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டது. நிதி சீர்திருத்தம் என்று பேசிக் கொண்டு எதையும் செய்யாமல் இருக்கவில்லை. சமூகநலத் திட்டங்களையும் உருவாக்கித் தந்தார் முதலமைச்சர் அவர்கள்.
பொருளாதார வளர்ச்சியை உயர்த்துதல், சமூகப் பாதுகாப்பை வளப்படுத்துதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதல், கல்வியின் மூலம் பெண்களின் வாழ்வாதார மேம்பாடு, விளிம்பு நிலை மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் மூலமாக வறுமை ஒழிப்பு, தரவுகள் அடிப்படையிலான நிருவாகத்தின் மூலம் அரசின் திட்டங்கள் பொதுமக்களை முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்தல், சுற்றுச்சூழலில் நீடித்த நிலைத்த தன்மையையும் தலைமுறைகளுக்கு இடையேயான சமத்துவத்தையும் உறுதி செய்தல் - ஆகிய கோட்பாடுகளை உள்ளடக்கி அரசு செயல்பட்டது.
கொரோனா கால நெருக்கடிகள் தொழில் துறையில் கடந்த ஆண்டும் தொடரவே செய்தது. உலக நாடுகள் பலவற்றிலும் பணவீக்கம் அதிகமாகி வருகிறது. ஒன்றிய அரசின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் அதன் நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் பொருளாதார நிலைப்புத் தன்மை இல்லை.
ஒன்றிய பா.ஜ.க.வின் பல்வேறு நடவடிக்கைகள் பொருளாதாரத் தன்மையை பாதிக்கக் கூடியவையாக உள்ளன. இத்தகைய சூழலில் தமிழ்நாடு அதிக பொருளாதார வளர்ச்சியை கடந்த ஆண்டு எட்டி இருப்பது மகத்தான சாதனை ஆகும்.
அதிகச் செலவுள்ள பல நலத்திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டே இந்த சாதனையை தமிழ்நாடு அரசு செய்துள்ளது. நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமைக்கும், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் நிதி மேலாண்மைக்கும் கிடைத்த வெற்றியாகும் இது.
வரி வருவாய் என்பது 2006 - 11 தி.மு.க. ஆட்சியில் 8 சதவிகிதமாக இருந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் அது 5 சதவிகிதமாக ஆக்கப்பட்டுவிட்டது. இப்போது அதனை 6.11 சதவிகிதமாக முதலமைச்சர் அவர்கள் ஆக்கிக் காட்டி இருக்கிறார்கள். வளர்ச்சியின் அடையாளமான மூலதனச் செலவுகள் கடந்த ஆண்டை விட 15.7 சதவிகிதம் அதிகமாகத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நிதிமேலாண்மை என்பது சீர் செய்யப்பட்டு வருவதன் அடையாளம் இது. சொன்னதைச் செய்து காட்டி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்!
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?