Tamilnadu

சட்டப்பேரவையில் 3-வது முறையாக தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை.. 70 சிறப்பு அம்சங்கள் என்ன?

தமிழ்நாடு அரசின் 2023-2024ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மின்னணு வடிவிலான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வாசித்தார். அதன் முழு விவரம் வருமாறு:-

மாண்புமிகு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்களே,

‘இன்சொல் விளைநிலமா ஈதலே வித்துஆக

வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி

அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர்

பைங்கூழ் சிறுகாலைச் செய்’கிற முதலமைச்சர் அவர்கள் அளித்த அரிய வாய்ப்பின் பொருட்டு, இன்று மூன்றாம் வேளாண்மை நிதிநிலை அறிக்கையை இந்தச் சபையின்முன் வைக்கின்ற மகத்தான வாய்ப்பை நான் பெற்றுள்ளேன்.

அதற்காக முதலமைச்சர் அவர்களுக்கும், நெற்றி வியர்வையை நிலத்தில் பாசன நீராகப் பாய்ச்சி, கதிர்களை அறுவடை செய்யும் உழவர் பெருமக்களுக்கும், என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு, எனது உரையைத் துவங்குகிறேன்.

பயிர்களை வளர்ப்பதற்கு நீரே அடிப்படை என்பதால், ஆற்றுப்படுகைகளில் குடியேற, நிலையான வாழ்க்கை நதிக்கரை ஓரங்களில் நங்கூரம் பாய்ச்சியது. அவனை நாடி வந்த காட்டு மிருகங்கள் அவன் கைப்பட்டு, வீட்டு விலங்குகளாயின; அவன், ஈட்டியிலிருந்து மண்வெட்டிக்கு மாறினான்; அம்புகளிலிருந்து கடப்பாரைகளுக்குத் தாவினான். கல்லாயுதத்திலிருந்து கலப்பைக்கு மருவினான். சிதைப்பதிலிருந்து செதுக்குவதற்கு நகர்ந்தான். அழிப்பதிலிருந்து ஆக்குவதற்கு முனைந்தான். உயிர்களை வேட்டையாடுவதிலிருந்து பயிர்களை உற்பத்தி செய்யத் தொடங்கினான்.

எத்தனைத் தொழில்கள் செழித்து வளர்ந்தாலும், மனிதனின் அடிப்படைத் தேவை உணவேயாகும். மகத்தான மனிதர்களும் உணவு சற்று தாமதமானால், உணர்ச்சிவசப்படுவதைப் பார்க்கிறோம். உணவுக்கும், உணர்வுக்கும் தொடர்புண்டு. ‘பசி வருகிறபோது அனைத்தையும் மனிதன் இழந்து விடுகிறான்’ என்பதைக் குறிப்பிடத்தான் தமிழ் மூதாட்டி ஔவையார்,

‘மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை

தானம் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்

கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்

பசிவந் திடப்பறந்து போம்’

என்று குறிப்பிடுகிறார்.

வேளாண்மையைத் தமிழர்கள் தொன்று தொட்டுப் பேணி வந்தார்கள் என்பதை நம் இலக்கியங்கள் சான்றுகளாக முன்வைக்கின்றன. சங்க இலக்கியங்களில் வேளாண்மை குறித்த எண்ணற்ற குறிப்புகள் இருக்கின்றன. உழவு பற்றி ஓர் அதிகாரத்தையே ஒதுக்கினார் திருவள்ளுவர். ‘பருவத்தே பயிர் செய்’ என்றும், ‘பூமி திருத்தி உண்’ என்றும், ஆத்திச்சூடி அறிவுறுத்துகிறது. ‘நீரகம் பொருந்திய ஊரகத்து இரு’ என்று கொன்றைவேந்தன் குறிப்பிடுகிறது.

நிலப்பரப்பையொட்டி தமிழர்கள் வாழ்வியல் முறையை வகுத்துக்கொண்டார்கள் என்பதை இலக்கியங்கள் இயம்புகின்றன. வெளிநாட்டு அறிஞர்களும் வேளாண்மையைப் பாராட்டி மகிழ்கின்றனர். வேளாண்மையே மனிதன் மேற்கொண்ட முதல் தொழில் என்பதை வரலாறு மட்டுமல்ல, மானுடவியலும் குறிப்பிடுகிறது. ‘வேளாண்மை என்பது பணி அல்ல, அது வாழ்க்கை முறை’ என்று லூயி தாம்சன் குறிப்பிடுகிறார். ‘உன்னதமான அறிவியல்’ என்று முதல் அகராதியைத் தொகுத்த டாக்டர் சாமுவேல் ஜான்சன் கூறுகிறார். இயற்கை வேளாண்மையை முன்வைத்த மசனோபு ஃபுகாகா (Masanobu Fukuoka) ‘வேளாண்மையின் நோக்கம் பயிர்களை வளர்ப்பதல்ல, மனிதர்களைப் பண்படுத்துவது’ என்று குறிப்பிடுகிறார்.

இத்தகைய மகத்தான வேளாண்மை செழித்து வளரவேண்டும் என்பதற்காக தனி வேளாண் நிதிநிலை அறிக்கை அவையின்முன் வைக்கப்படும் என்கிற அறிவிப்பை நிலைநாட்டும் வகையில், இந்த மூன்றாவது வேளாண் நிதிநிலை அறிக்கை உங்கள் முன்பு வைக்கப்படுகிறது. உழவர் பெருமக்கள் உழைப்பிற்கேற்ற பலன்களைப் பெறவேண்டும், வர்த்தக ரீதியாக வருமானம் ஈட்ட வேண்டும், அறிவியலையும் உயர்ந்த தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி, மகசூலில் சாதனைகள் புரியவேண்டும் என்கிற அடிப்படையில்தான் சென்ற இரண்டு வேளாண் நிதிநிலை அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டன.

வேளாண்மைத் துறையில் சவால்கள்:

இயற்கையோடு நடத்துகிற கண்ணாமூச்சி ஆட்டமாக வேளாண்மை இன்று மாறிவிட்டது. எண்ணற்ற சவால்கள் இன்று உழவர் பெருமக்களை சூழ்ந்திருக்கின்றன. விளைநிலங்கள் வீட்டுமனைகளாகின்றன. மக்கட்தொகை பெருகி வருகிறது. தொழிற்சாலைகள் தோன்றிவருகின்றன. நிலத்தின் பரப்பளவு வேளாண்மைக்குக் குறைந்து வருகிறது. எனவே, உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவது இன்றைய தேவை. புன்செய் நிலங்களிலும் மகசூலை அதிகப்படுத்தும் இரகங்களை பல்வேறு பயிர்களில் உண்டாக்குவது முக்கியம். வறட்சியைத் தாக்குப்பிடிக்கும் இரகங்களும், வெள்ளத்தைச் சமாளிக்கும் இரகங்களும், பருவநிலை மாற்றத்தால் கட்டாயமாக்கப்பட்ட தேவைகளாக மாறிவிட்டன. தானியங்களை மட்டுமல்ல; காய்கறிகளையும், பழங்களையும் போதிய அளவு உற்பத்தி செய்து, ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதும் முக்கியமான சவால். வெறும் மாவுச் சத்து மட்டுமே உண்டால், உடல் உபாதைகள் உண்டாகும். எனவே, புரதம், வைட்டமின்கள், நார்ச்சத்து, தாதுப் பொருட்கள், அமினோ அமிலங்கள் ஆகிய அனைத்தும் உணவின் மூலம் கிடைத்தால்தான் நாம் ஊட்டச்சத்தில் பாதுகாப்பை அடைந்ததாக உரக்கக் கூற முடியும்.

தொழிற்சாலைகளுக்குத் தேவையான இடுபொருட்களைப் போதிய அளவுக்கு விளைவித்துத் தருவதும், வேளாண்மைத் துறையின் கடமை. இவற்றையெல்லாம் மனதில் வைத்து, 2021-22 ஆம் ஆண்டில் பல தொலைநோக்குத் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தியதன் காரணமாக மொத்த சாகுபடிப் பரப்பு, ஒரு இலட்சத்து 93 ஆயிரம் எக்டர் அதிகரித்து, மொத்தமாக 63 இலட்சத்து 48 ஆயிரம் எக்டர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

உழவுக்கு மண்ணே அடித்தளமாக அமைகிறது. தேவையான சத்து இருக்கிற மண்ணே, மகசூலை அதிகப்படுத்த வல்லது. அதனால், மண் வளம் மங்காமலிருக்க, பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மண் பரிசோதனை நிலையங்களில் உழவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, மண்ணின் தன்மைக்கேற்ற பயிர்களும், அப்பயிர்களுக்குத் தேவையான உரங்களும் பரிந்துரை செய்யப்பட்டு, மண் வள அட்டைகள் வழங்கப்படுகின்றன. மண் வளம் காக்கும் பணிகளால் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 2021-22 ஆம் ஆண்டில், 119 இலட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்து சாதனை அடையப்பெற்றது. இது 2020-21 ஆம் ஆண்டைவிட 11 இலட்சத்து 73 ஆயிரம் மெட்ரிக் டன் கூடுதல் என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன்.

குறைந்து வரும் நீர்வளம்:

‘மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

நாமநீர் வேலி உலகிற்கு அவன்அளிபோல்

மேல்நின்று தான்சுரத்த லான்’

என்று இளங்கோவடிகள் மழையைப் போற்றுவதைப் பாயிரமாக வைத்தார். மழை மண்ணுக்கு அமுதம். நூறு பாசனத்தை, ஓங்கிப் பெய்யும் ஒரு மழை ஈடுகட்டிவிடுகிறது. மழையே ஆற்றுக்கும், குளத்துக்கும் ஆதாரம்.

வேளாண்மைக்கு நீரே உயிர் நீர். புறநானூற்றில் குடபுலவியனார் என்கிற புலவர், ‘நீர்நிலைகளை உருவாக்கும் மன்னனே, நீடித்த புகழை அடையமுடியும்’ என்று குறிப்பிடுகிறார்.

‘உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே;

நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே;’

என்று புறநானூறு குறிப்பிடுகிறது.

நீர் வளத்தை உறுதி செய்வதும், நீர்நிலைகளைப் போற்றிப் பேணுவதும், அவற்றின் கொள்ளளவை அதிகரிப்பதும், நம் தலையாய பணி. ஆறுகள், வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றைத் தூர் வாரியதன் காரணமாகவும், அதிக எண்ணிக்கையில் நீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கியதனாலும், பருவமழை நன்றாகப் பொழிந்ததாலும், தமிழ்நாட்டில் நிலத்தடி நீரின் அளவு அதிகரித்திருக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 2021 ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட நாளான ஜூன் 12 ஆம் தேதியன்றும், 2022 ஆம் ஆண்டில், 19 நாட்கள் முன்னதாக, மே 24 ஆம் தேதியன்றும் மேட்டூர் அணையைத் திறந்து வைத்ததனால், தஞ்சைத் தரணிக்கு தடையில்லாமல் நீர் கிடைத்து, வயல்களெல்லாம் நெல் பயிரினால் பச்சை தொற்றிக்கொண்டு பரவசமடைந்தன. இதனால், 2022-23 ஆம் ஆண்டில் டெல்டா மாவட்டங்களில் 5 இலட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நிகழ்ந்து, சாதனை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது கடந்த 47 ஆண்டுகளில் நிகழாத சாதனை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

நிலத்தடி நீரை முழுமையாகப் பயன்படுத்த மின்சாரம் முக்கியம். கால்வாயில் ஓடிவருகிற நீரை மண்வெட்டி கொண்டு திசைதிருப்பி உழவர்கள் பாய வைக்க முடியும். மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரை வெளிக்கொண்டு வர மின்சார இணைப்புகளின்றி இயலாது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயத்திற்காக ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் புதிய மின் இணைப்புகளை வழங்கி, சாதனை படைத்ததன் விளைவாக, வயல்களில் பம்புசெட்டுகள் மூலம் தண்ணீர் பாய்ந்து வருகிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் ஆற்றலின் வடிவங்கள்; நம்பிக்கையின் சிகரங்கள்; உத்வேகத்தின் ஒட்டுமொத்தக் குறியீடுகள். இளைஞர்கள் வேளாண்மையில் ஈடுபட்டால்தான் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்படும். அவர்கள்தான் துணிந்து சில பரிசோதனைகளை நிகழ்த்துவார்கள். இதை மனதில் வைத்து, 2021-22 ஆம் ஆண்டில் 185 வேளாண் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு, தலா ஒரு இலட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு, அவர்கள் மூலமாக ‘அக்ரி கிளினிக்’, வேளாண்மை சார்ந்த தொழில்கள் தொடங்கப்பட்டன.

உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய விலை உத்தரவாதம் அளிக்கப்பட்டால்தான் உற்சாகத்தோடு உழவர்கள் உழைப்பார்கள்.  இதை எண்ணத்தில் கொண்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் உழவர்களிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்குமேல் கூடுதல் விலைக்கு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.  வரலாறு காணாத வகையில் நேரடிக் கொள்முதல் நிலையங்கள் அதிக எண்ணிக்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  

நெல் மட்டுமின்றி, பயறு வகைகளும், கொப்பரைத் தேங்காயும் கொள்முதல் செய்யப்படுகின்றன.  ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு 195 ரூபாய் கூடுதலாக வழங்கி, கொள்முதல் நிகழ்த்தப்படுகிறது.  விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வண்ணம் உழவர் சந்தைகள், மின்னணு சந்தைகள் (eNAM), ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.  

வேளாண் தொழிலில் நாற்று நடுவதற்கும், களை பறிப்பதற்கும், கதிர் அறுப்பதற்கும், மனிதர்களைப் பயன்படுத்துவதைவிட, இயந்திரங்களைப் பயன்படுத்துவது எளிதாகவும், சிக்கனமாகவும் இருக்கிற காரணத்தினாலும், சாகுபடிச் செலவைக் கணிசமாகக் குறைப்பதாலும், வேளாண் பணிகளுக்குத் தேவையான அனைத்து வகையான இயந்திரங்களும் உழவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.  வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மூலம் அந்த இயந்திரங்களை வாடகைக்குப் பெற்றுப் பயன்படுத்தும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.  

உழைப்பைச் சிந்தி, வியர்வையை இறைத்து, தூக்கத்தைத் துண்டித்து, இரவைப் பகலாக்கி, பசியை மறந்து, உழைத்துப் பெற்ற விளைபொருட்கள் அறுவடைக்குப் பின்பு, வீணாவதைத் தடுத்திட, அரசு புதிய குளிர்பதனக் கிடங்குகள், தானியப் பாதுகாப்புக் கிடங்குகள், உலர் களங்கள் போன்றவற்றை அமைத்துக் கொடுத்து, அவர்கள் நலம் பேணும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.  

இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து உழவர்களின் வாழ்வாதாரத்தைக் காத்திட பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டில் 40 இலட்சத்து 74 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 26 இலட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர். தமிழ்நாடு அரசால் 1,695 கோடி ரூபாய் காப்பீட்டுக் கட்டண மானியமாக வழங்கப்பட்டு, ஆறு இலட்சத்து 71 ஆயிரம் விவசாயிகளுக்கு இதுவரை 783 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 

சென்ற ஆண்டு வடகிழக்குப் பருவமழை, 2023 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பருவம் தவறிப் பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 82 ஆயிரம் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியமாக 163 கோடியே 60 இலட்சம் ரூபாய் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. 

வேளாண் காடுகள் உருவாக்குவது இயற்கையை மேம்படுத்தவும், மண்மீது பசுமைப் போர்வை போர்த்தி, பூமியை மட்டுமல்ல, சுற்றுச்சூழலையும் குளிர்விப்பதற்காகவும்தான். அது கணிசமான அளவிற்கு வருவாயை ஈட்டித் தரும் என்ற நோக்கில் கடந்த ஆண்டு, சந்தனம், செம்மரம், மகோகனி, தேக்கு போன்ற 77 இலட்சம் உயர் இரக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, 30,000 எக்டர் பரப்பில் நடப்பட்டுள்ளன.

மின்னணு வேளாண்மையில், விதையில் தொடங்கி, விற்பனை வரை, 22 முக்கிய வேளாண் சேவைகள், ‘உழவன் செயலி’ மூலம் நல்ல முறையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.  

கடந்த இரண்டு ஆண்டுகளில் அவையின்முன் வைக்கப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கைகளைப் பொருத்தவரை, ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறவேண்டிய இனங்களைத் தவிர, அவற்றில் இடம் பெற்றிருந்த மற்ற அனைத்து அறிவிப்புகளுக்கும் அரசாணைகள் வெளியிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன

கருத்துக் கேட்புக் கூட்டங்கள்: 

இந்த அரசு பதவியேற்றபோதே, வேளாண்மைத் துறை என்றிருந்த துறையின் பெயர், வேளாண்மை-உழவர் நலத் துறை என்று பெயர் மாற்றப்பட்டு, உழவர்தம் உயர்வையே மையமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது.  கோட்டையில் அமர்ந்துகொண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையை வடிவமைப்பது ஏற்புடையது அல்ல என்பதை அறிந்ததன் காரணமாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைக்கேற்ப, திண்டுக்கல், திருநெல்வேலி, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, சென்னை, சிவகங்கை மாவட்டங்களுக்கு நானும் துறை சார்ந்த அலுவலர்களும் சென்று, சுற்றுவட்டாரத்தில் இருக்கிற மாவட்டங்களின் உழவர்கள், வேளாண் வணிகர்கள், ஏற்றுமதியாளர்களை அழைத்துப் பேசி, அவர்கள் கருத்துக்களுக்கும் இடமளிக்கும் வகையில் இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை இம்மாமன்றத்தில் குறிப்பிட விரும்புகிறேன். 

வேளாண்மைத் துறை

வேளாண்மை, பல துறைகளின் தாய்; பல தொழில்களின் முன்னோடி.  பல்வேறு விதமான துறைகளின் ஒருங்கிணைப்பு இருந்தால்தான் வேளாண்மை செழிக்க முடியும்.  மண்ணை வளமாக்குவது நீர் என்பதால், நீர்வளத் துறையின் ஒருங்கிணைப்பு முக்கியம்.  உழவர்களுக்கு உதவுவதாலும், அவர்தம் வாழ்வுக்குக் காப்பீடாக இருப்பதாலும், கால்நடைத் துறையின் பங்களிப்பும் அவசியம்.  விளைபொருட்களை விற்பதாலும், இடுபொருட்களை வழங்குவதாலும் கூட்டுறவுத் துறையோடும் கூட்டணி தேவை.  உழவர்கள் குளங்களில் மீன் வளர்ப்பதற்குப் பங்களிப்பதால், மீன் வளத் துறையும் கைகொடுப்பது அவசியம்.  கட்டமைப்பு வசதிகளை சிற்றூரில் ஏற்படுத்தி, உழவுக்கு ஒத்திசைவாக இருப்பது, ஊரக வளர்ச்சித் துறை.  உழவர்கள் வாழ்வில் விளக்கேற்றி வைத்து, வெளிச்சத்தைக் காண்பது மின்சாரத் துறை.  உற்பத்தி செய்த பொருட்களைப் பதப்படுத்தி, நெடிய நாள் பாதுகாத்து வைப்பதற்கு தொழில் துறையும் தோள் தர வேண்டும்.  இப்படி பல்வேறு துறைகளின் செயல்பாட்டால்தான் வேளாண்மை விரிவடைய முடியும். 

வரும் ஆண்டில் தமிழ்நாட்டில் 127 இலட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய மகத்தான இலக்கை அடைவதற்கு மேற்கொள்ளப்படவிருக்கின்ற நடவடிக்கைகளையும், திட்டங்களைப் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன். 

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்

ஒவ்வொரு சிற்றூரும் தன் தகுதிக்கேற்ப தன்னிறைவு அடைய முடியும்.  தண்ணீர் வளத்திற்கு ஏற்பவும், மண்ணின் வளத்திற்கு ஏற்பவும், அந்தச் சிற்றூரில் வேளாண்மை முழுமையாக வளர்வதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளையும், வேண்டிய மற்ற பணிகளையும் மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட திட்டமே, இத்திட்டம்.  ஊரக வளர்ச்சித் துறையோடு இணைந்து உழவர்களுக்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி, ஒருமித்த, உள்ளடக்கிய வளர்ச்சியை இச்சிற்றூர்கள் பெறுவதற்கு அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் கைகோர்த்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வரும் ஆண்டில் இத்திட்டம் 2,504 கிராம ஊராட்சிகளில் 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

அ. தொகுப்பாக 10 ஏக்கர் தரிசாக உள்ள பகுதிகளைக் கண்டறிந்து, ஆழ்துளைக் கிணறு அமைத்து, மின் இணைப்பு அல்லது சூரிய சக்தி பம்ப்செட்டுகள் இலவசமாக அமைத்துத் தரப்படும். மின் இணைப்பு கிடைத்தவுடன், மா, கொய்யா, நெல்லி போன்ற பல்லாண்டு பலன் தரக்கூடிய பழமரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, அதில் சொட்டு நீர்ப் பாசன வசதியும் மானியத்தில் நிறுவப்படும்.

ஆ. ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும், தென்னை மரங்கள் இல்லாத 300 குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் வீதம் மொத்தம் 15 இலட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக 2,504 கிராமப் பஞ்சாயத்துகளில் வழங்கப்படும். 

இ. விவசாயிகளின் வயல்களில் 600 பண்ணைக் குட்டைகள் அமைத்து, கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகை செய்யப்படும். மேலும் இப்பண்ணைக் குட்டைகளில் மீன்வளத்துறை மூலமாக மீன் குஞ்சுகள் வளர்த்து, கூடுதல் வருமானம் ஈட்டிடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஈ. 300 ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளின் வயல்களில், ஆழ்துளைக்கிணறுகள் அமைத்து, அதில் மின் இணைப்பு அல்லது சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகளும் இலவசமாக நிறுவப்பட்டு, அதில் சொட்டு நீர்ப் பாசன வசதியும் மானியத்தில் அமைத்துத் தரப்படும். 

உ. ஊரக வளர்ச்சி- உள்ளாட்சித் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள சிறுபாசனக் குளங்கள், ஊருணிகள், வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரி, பாசன நீர் கடைமடை வரை செல்வதற்கு வழிவகை செய்யப்படும். 

ஊ. இத்திட்டம் செயல்படுத்தப்படும் கிராமப் பஞ்சாயத்துகளில் விளைபொருட்களை உலர வைத்து சேமிப்பதற்கு வசதியாக 250 உலர்களத்துடன் கூடிய தரம் பிரிப்புக் கூடங்கள் கட்டித் தரப்படும். 

மேலும், ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தடுப்பணைகள், கசிவுநீர்க்குட்டைகள், வயலுக்குச் செல்லும் சாலைகள் போன்ற பல்வேறு பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு,  திட்டம் செயல்படுத்தப்படுவதால், சாகுபடி நிலப் பரப்பு உயர்ந்து இந்த கிராமங்கள் தன்னிறைவு அடையும். 

தமிழ்நாடு சிறு தானிய இயக்கம்

கம்பு, கேழ்வரகு, வரகு, சோளம், பனி வரகு, தினை, குதிரைவாலி, சாமை ஆகியவை சிறு, குறு தானியங்கள். சிறு தானியங்கள் வறட்சியிலும் வளர்பவை.  வளமற்ற மண்ணிலும் நலம்பெற்று துளிர்ப்பவை.  ஊட்டச்சத்து நிறைந்தவை.  தமிழ்நாட்டில் அவற்றை மீண்டும் செழிக்கச் செய்யும்பொருட்டும், சிறுதானிய பரப்பு, உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றை அதிகரிக்கும் பொருட்டும், கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் 20 மாவட்டங்களை உள்ளடக்கி அறிவிக்கப்பட்ட இரண்டு சிறு தானிய மண்டலங்களுடன் உழவர்களின் கோரிக்கைகளை ஏற்று, நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்கள் புதிதாகச் சேர்த்துக்கொள்ளப்படும்.  

சிறுதானியப் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், நீலகிரி, தருமபுரி மாவட்டங்களிலுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்திட கூட்டுறவு சங்கங்கள் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட குறு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு சென்னை, கோயம்புத்தூர் மாநகர அமுதம், சிந்தாமணி, காமதேனு கூட்டுறவு விற்பனை அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அறிவித்திருப்பதை ஒட்டி, தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த இயக்கத்தில், வரும் ஆண்டில், தரிசு நிலங்களை சீர்திருத்தம் செய்தும், மாற்றுப் பயிர் சாகுபடி மூலமாகவும் 50,000 ஏக்கரில் சிறுதானிய சாகுபடி மேற்கொள்ளவும், சிறுதானிய விவசாயிகளை ஒன்றிணைத்து 100 சிறுதானிய உற்பத்திக் குழுக்களை உருவாக்கி பயிற்சி அளிப்பதற்கும். 12,500 ஏக்கரில் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைக்கவும் மானியம் அளிக்கப்படும். சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய ஏதுவாக சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய உதவி அளிக்கப்படும். 

மக்களிடையே சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு “சிறுதானிய திருவிழாக்களும்”  இவ்வியக்கத்தின் மூலம் நடத்தப்படும்.

வரும் ஆண்டில், ஒன்றிய, மாநில அரசு நிதி உதவியுடன் 82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 

சிறுதானிய உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றை அதிகரிக்கும் வகையில் முக்கிய சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு போன்றவற்றை நேரடியாக கொள்முதல் செய்து, நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். அரசு நிறுவனங்கள், கல்வி நிலைய விடுதிகளில், சத்துள்ள சிறுதானிய உணவு அளிக்கப்படும்.

மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம்

 விவசாயிகளின் உடனடித் தேவைகளை நிறைவேற்றவும், வருமானத்தை உயர்த்தவும், பல்வேறு திட்டக்கூறுகளுடன் கூடிய பெருந்திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் ஆண்டில், இத்திட்டமானது மொத்தம் 64 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பின்வரும் இனங்களைக் கொண்டு செயல்படுத்தப்படும்.

அ. கிராம வேளாண் முன்னேற்றக் குழு

பயிர் சாகுபடியில் வருமானம் வளம்பெற, பருவத்திற்கேற்ற பயிர், பயிருக்கான தொழில்நுட்பம், மதிப்புக்கூட்டுதல், சந்தை வழிமுறைகள் குறித்த தகவல்கள், உரிய நேரத்தில் உழவர்களுக்கு வழங்கப்படுவது முக்கியம். ஐந்து ஆண்டுகளில், தமிழ்நாட்டில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், அனைத்துக் குக்கிராமங்களை உள்ளடக்கி, கிராம வேளாண் முன்னேற்றக் குழு அமைக்கப்படும்.  இக்குழுவில் கிராம ஊராட்சியிலுள்ள அனைத்து குக்கிராமங்களிலுள்ள அனைத்துப் பிரிவுகளையும் சார்ந்த,
25 முதல் 50 விவசாயிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.  

வரும் ஆண்டில், முதல் கட்டமாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் 2,504 கிராம ஊராட்சிகளில், வேளாண் முன்னேற்றக் குழுக்கள் இரண்டு கோடியே
50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு, செயல்படுவதற்கு பயிற்சிகள் அளிக்கப்படும்.    

ஆ. நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்கள்

தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் இரகங்களான தூய மல்லி, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கிச்சிலி சம்பா, தங்க சம்பா, கீரை சம்பா ஆகியவற்றைப் பாதுகாத்து பரவலாக்கிட, நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில், 2021-22 ஆம் ஆண்டு, 196 மெட்ரிக் டன் விதைகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. அதைப்போன்றே, இவ்வாண்டும் அரசு விதைப் பண்ணைகளில், 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்யப்பட்டு,
மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.  இதற்கென 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.  

மேலும், அகில இந்திய அளவிலான பாரம்பரிய நெல் விதைகளை, இனத் தூய்மையுடன் விதை வங்கியில் பராமரித்து வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக,
10 விவசாயிகளுக்கு வரும் ஆண்டில் தலா மூன்று இலட்சம் ரூபாய் வீதம் 30 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.

இ. வேளாண்மையில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிகளுக்குப் பரிசு

நெற்பயிரில் மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு மட்டும், ஐந்து இலட்சம் ரூபாய் பரிசினை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. அனைத்துப் பயிர்களுமே அரவணைக்கத்தக்கவை என்பதை அடிப்படையாகக் கொண்டு, நெல்லுக்கு வழங்கி வந்ததை, சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்றவற்றிற்கும் வழங்கவேண்டும் என்கிற அடிப்படையில், வரும் ஆண்டு முதல் கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, துவரை, உளுந்து, பச்சைப் பயறு, நிலக்கடலை, எள், கரும்பு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.  

அதேபோல, உணவு தானியப் பயிர்கள் உற்பத்தி, உற்பத்தித் திறனில் சிறந்து விளங்கும் களப்பணியாளர்கள், வட்டார அலுவலர்கள், மாவட்ட அலுவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வரும் ஆண்டு முதல், விருதுகள் வழங்கப்படும். 

ஈ. குறுவைப் பருவத்தில் மாற்றுப் பயிர்

பயிர்களின் சுழற்சி, மண்ணை வளமாக்கும்; உற்பத்தியைப் பெருக்கும்.  அதை அடையும் பொருட்டு, குறுவைப் பருவத்தில் குறைந்த நீர்த் தேவையுள்ள சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் சாகுபடியை ஊக்குவித்திட, வரும் நிதியாண்டில் ஒரு இலட்சம் ஏக்கர் பரப்பளவில் மாற்றுப் பயிர் சாகுபடிக்காக
16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

உ. நெல்லுக்குப்பின் பயிர் சாகுபடி

தமிழ்நாட்டில் சங்க காலத்திலேயே பயிர் சுழற்சி மேற்கொள்ளும் வழக்கம் இருந்துள்ளது. நெல்லை அறுவடை செய்வதற்கு முன்பே, எஞ்சியுள்ள ஈரத்தைப் பயன்படுத்துவதற்காக, சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி ஆகியவற்றைப் பயிரிடும் வழக்கம் தமிழ்நாட்டில் இருந்தது.  அவ்வழக்கத்தை இன்னும் விரிவாக்கும் பொருட்டும், செறிவாக்கும் பொருட்டும், ஆறு இலட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல்லுக்குப் பின் மாற்றுப்பயிர் சாகுபடி மேற்கொள்ள உதவி அளிப்பதற்காக வரும் ஆண்டில் 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

ஊ. இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல்

வேளாண்மை சார்ந்த பட்டப் படிப்பு படித்த மாணவர்கள் அனைவரும் தாங்கள் பெற்ற கல்வியைப் பயன்படுத்தி சொந்தக் காலில் நிற்கவும், தொழில் முனைவோராகப் பரிணாம வளர்ச்சியடையவும், வரும் ஆண்டில் வேளாண்மை, தோட்டக்கலை, பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு, வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்காக இரண்டு இலட்சம் ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கிட நான்கு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.   இத்திட்டத்திற்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விதை உரிமம், உர உரிமம், பூச்சி மருந்து உரிமம் ஆகியவை தேவைக்கேற்ப வழங்கப்படும்.

எ. வேளாண் கருவிகள் வழங்குதல் 

மக்களின் தொன்மை மிகுந்த வேளாண் பணியில் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் உழைப்புத் திறனை மேம்படுத்தி, வேளாண் பணிகளை எளிதில் செய்ய ஏதுவாக சிறு, குறு விவசாயிகள், நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வரும் ஆண்டில் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 60,000 வேளாண் கருவிகள் தொகுப்பு விநியோகம் செய்யப்படும். குறிப்பாக, நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 30,000 தொகுப்புகள் வழங்கப்படும்.

அங்கக வேளாண்மை (Organic Farming) ஊக்குவிப்பு 

அ) வேதியியல் பொருட்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதால் மண்ணும், நீரும் நச்சுத் தன்மையடைந்து நலிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.  எனவே, இயற்கையான எருவைப் பயன்படுத்தி இரசாயன உரங்கள் இல்லாமல் வேளாண்மை செய்யும் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் வண்ணம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க, பாரம்பரிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் 32 மாவட்டங்களில், 14,500 எக்டர் பரப்பில், 725 தொகுப்புகள் உருவாக்கப்படும். விவசாயிகள் அங்கக சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்க, சான்றுக் கட்டணத்திற்கு 10,000 எக்டருக்கு மானிய உதவி அளிக்கப்படும். வரும் ஆண்டில் இதற்கென, 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆ)  அங்கக இடுபொருட்களான பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், மண்புழு உரம், அமிர்தக் கரைசல், மீன் அமிலம் போன்றவற்றைத் தயாரித்து, விற்பனை செய்ய ஆர்வமுள்ள 100 உழவர் குழுக்களுக்கு இயற்கை இடுபொருள் தயாரித்தல் மையம் அமைக்க ஒரு இலட்சம் ரூபாய் வீதம் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இ) ஏரிகள், குளங்களில் படிந்துள்ள வண்டல் மண்ணில் மண்வளத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் மாநில அரசு, அந்தந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள், குளத்து வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து தங்கள் வயல்களில் பயன்படுத்துவதற்கு, சென்ற ஆண்டே அனுமதித்து 15 இலட்சம் கன மீட்டர் வண்டல் மண் எடுக்கப்பட்டு, 12,500 விவசாயிகள் பயனடைந்தனர். இதே போன்று, நடப்பாண்டிலும் நீர்வள ஆதாரத்துறை, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மூலம் தகுதியான ஏரிகள், குளங்கள் கண்டறியப்பட்டு, விவசாயிகளிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, வண்டல் மண்ணை, விளைநிலங்களில் பயன்படுத்துவதற்கு அரசு சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளும். விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் பயன் பெறும் வகையில், காலதாமதம் இன்றி இப்பணியினை சிறப்பாக மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது வழங்கப்படும். 

ஈ) நீலமலையில் அங்கக வேளாண்மை ஊக்குவிப்பு

காற்று கசங்காமல், மண் மங்காமல், நீர் நீர்த்துப்போகாமல், உணவுப் பொருள் நஞ்சடையாமல், பயிர் செய்வது முக்கியம் என்கிற எண்ணம் இப்போது பரவலாகி வருகிறது.  இயற்கையை இயற்கையாகவே பாவித்து இயைந்து வாழ்ந்து, இயற்கை வளத்தை அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்திற்கு வழங்குவது இன்றியமையாதது. நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மையைப் பெருமளவில் ஊக்குவிக்க ஒரு சிறப்புத் திட்டம் ஐந்து ஆண்டுகளில் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வேதியியல் உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தல், அங்கக வேளாண் சாகுபடி முறைகளை அறிமுகப்படுத்துதல், மண்புழு உரம், பஞ்சகவ்யம், தசகவ்யம் போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கான ஆலோசனைகளை வழங்குதல், சாகுபடி மானியம் வழங்குதல், அங்ககச் சான்று பெற பதிவு செய்தல், அங்கக விளைபொருட்களுக்கு அங்காடிகள் ஏற்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வரும் ஆண்டில் ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

உ) நஞ்சில்லா உணவு விளைவிக்கும் அங்கக விவசாயிகளுக்கு அவர்களது விளைபொருட்களில் நச்சுப் பொருட்களின் தன்மையினை அறிந்து அதன் தரத்தை உறுதி செய்யும் வகையில், நச்சு மதிப்பீட்டு பரிசோதனை செய்வதற்கான கட்டணத்திற்கு 50 சதவீத மானியம் வழங்கும் பொருட்டு, வரும் ஆண்டில் 20 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஊ) அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகள், கிராமப்புர இளைஞர்கள், பண்ணை மகளிர், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

எ) அங்கக வேளாண்மையின் கீழ் கொண்டுவருவதற்கு சாத்தியமான பகுதிகளைக் கண்டறிவதற்கு, சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும், அடிப்படைக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

சிறந்த அங்கக விவசாயிக்கான " நம்மாழ்வார் விருது"

அங்கக வேளாண்மையில்  திரு நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அங்கக  வேளாண்மையில் ஈடுபடுவதோடு,  அதனை ஊக்குவித்து பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் விவசாயிகளுக்கு  தமிழ்நாடு அரசால்  ”நம்மாழ்வார்’ பெயரில் விருது வழங்கப்படும். இவ்விருது ஐந்து இலட்சம் ரூபாய் பணப்பரிசு, பாராட்டுப் பத்திரத்துடன்  குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.

வேளாண் காடுகள் மூலம் பசுமைப் போர்வை:

மரங்கள் மண்ணின் வரங்கள்; அவை பாதசாரிகளுக்கு நிழற்குடை; பறவைகளுக்குச் சரணாலயங்கள்.  நிழலின் சாசனம், காற்றின் வாகனம், பசுமையின் ஆசனம். மரங்கள் வளர்க்கும்போது, மண் குளிர்ந்து மழை பொழிகிறது.  கரியமிலவாயு காற்றால் உறிஞ்சப்பட்டு, சுற்றுச்சூழல் சுத்திகரிக்கப்படுகிறது.  மழை பொழியும்போது, மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது.  குயில்களுக்கும், மயில்களுக்கும் அவை அடைக்கலமாக இருந்து காற்று மண்டலத்தை இசையால் நிரப்ப உதவுகின்றன.  தமிழ்நாட்டில் வேளாண் நிலங்களிலும் மரங்கள் வளர்ப்பது உழவர்களின் வருமானத்தை அதிகப்படுத்தும் வழிமுறையாகும். அவை நிரந்தர வைப்புத் தொகையாக நீடித்து உதவுகின்றன.  தரமான மரக்கன்றுகள் விவசாயிகளுக்குக் கிடைக்கச்செய்யும் பொருட்டு, வேளாண் காடுகள் திட்டத்தில், அரசு மற்றும் தனியார் அமைப்புகளுக்கு, புதிய நாற்றங்கால்கள் அமைக்க நிதியுதவி அளிக்கப்படும். உயர்மதிப்புமிக்க மரக்கன்றுகள் வளர்த்து விவசாயிகளுக்கு முழு மானியத்தில் வழங்க ஏதுவாக, ஏற்கனவே உள்ள நாற்றங்கால்களுக்கு நிதியுதவி செய்யப்படும். வரும் ஆண்டில், 75 இலட்சம் செம்மரம், சந்தனம், தேக்கு, ஈட்டி போன்ற உயர்மதிப்புள்ள மரக்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்பட உள்ளன. இதற்கென, ஒன்றிய மாநில அரசு நிதியிலிருந்து
15 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.  

ஆதிதிராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்குக் கூடுதலாக 20 சதவிகித மானியம்

வரும் நிதியாண்டில், ஆதிதிராவிட சிறு, குறு விவசாயிகளுக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலும், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலும், ஆக மொத்தம் 11 கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டு இயந்திரங்கள், சூரிய சக்தி பம்புசெட்டுகள், சூரிய சக்தி உலர்த்திகள், குளிர் சாதனக் கிடங்குகள், ஒருங்கிணைந்த பண்ணையம், பசுமைக்குடில், நிழல்வலைக்குடில் போன்ற உயர்மதிப்பு இனங்களுக்கு 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படும்.

மின்னணு வேளாண்மைத் திட்டம் 

நவீன மின்னணு தொழில்நுட்பங்களை வேளாண்மையிலும் உட்புகுத்தி, விவசாயிகள் எளிய முறையில் துரிதமாகக் கையாண்டு பயன்பெற ஏதுவாக, கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவாறு, 37 வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகள் இடுபொருட்கள் பெறுவதற்கு வசதியாக சோதனை முறையில் பணமில்லா பரிவர்த்தனை செயல்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வரும் ஆண்டில் 37 மாவட்டங்களில் 385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் பணமில்லா பரிவர்த்தனை விரிவுபடுத்தப்படும்.

அ) வேளாண் மின்னணு உதவி மையம்

தமிழ்நாட்டில் வேளாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் 880 வேளாண் விரிவாக்க மையங்கள் செயல்பட்டு வருகின்றன.  தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் அரசின் திட்டப் பலன்கள் சேரும் வகையில், வேளாண்மை–உழவர் நலத்துறையின்மூலம் வழங்கப்படும் அனைத்துப் பயன்களும் பெற விவசாயிகள் மின்னணு முறையில் விண்ணப்பிக்கத் தேவையுள்ளது. இதன்பொருட்டு, விவசாயி சார்ந்த அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் மின்னணு முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள உதவும் வகையில், 385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில்  தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உதவியுடன்  மின்னணு உதவி மையங்கள்  (இ-சேவை) இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

ஆ. தகவல் பரிமாற்றக்குழு

விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள், சந்தை நிலவரம், வானிலை முன்னறிவிப்புகள், மானியங்கள், பூச்சி-நோய் தாக்குதல் போன்ற தகவல்களை உடனுக்குடன் கொண்டு செல்வதற்கு ஏதுவாக, வட்டார அளவில் விவசாயிகளைக் கொண்டு ”வாட்ஸ்அப்” குழு உருவாக்கப்படும். இக்குழுவில் அனைத்து குக்கிராமங்களிலிருந்தும், விவசாயிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள். இதன் ஒருங்கிணைப்பாளராக வட்டார வேளாண்மை உதவி இயக்குநரும், தோட்டக்கலை உதவி இயக்குநரும் செயல்படுவார்கள்.

வட்டார குழுக்களை ஒருங்கிணைத்து மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் குழுக்கள் உருவாக்கப்படும். துறையின் மாநில அளவில் செயலாற்றும் விளம்பரப் பிரிவு, மாவட்டத்திற்குரிய தகவல்களை, குறுஞ்செய்தி (SMS), குரல் வழிச் செய்தி (Voice Message), குரல் வழி அறிவிப்பு (Voice Blasting), மின்னணு விளம்பரம் (Digital Advertisement) வாயிலாக மாவட்டக் குழுவிற்கு அனுப்பி வைக்கும். இத்தகவல்கள் உடனடியாக வட்டார அளவில் உள்ள விவசாயிகள் குழுவிற்கு அனுப்பப்பட்டு, அவர்கள் தங்களது குக்கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்குத் தகவல்களைத் தெரிவிப்பார்கள். 

) GRAINS-ஒரு தளம்-பல பயன்கள்

உழவர் நலன் சார்ந்த பல்வேறு துறைகளின் திட்டப்பலன்களை விவசாயிகள் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்திற்கு சென்று, பல்வேறு ஆவணங்களை தனித்தனி படிவங்களில் தரவேண்டியுள்ளது. இத்தகைய நடைமுறைகளை எளிதாக்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள நில உரிமையாளர், சாகுபடி செய்யும் விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளின் அடிப்படை தகவல்களான வங்கிக் கணக்கு, ஆதார் எண், நில விவரங்கள், பயிர் சாகுபடி விவரங்களை கிராம வாரியாக சேகரித்து, கணினிமயமாக்கி புதிய இணையதளமான ‘GRAINS’ (Grower Online Registration of Agriculture Inputs System) அறிமுகப்படுத்தப்படும். இதனால் விவசாயிகளுக்கு ஒரே தளத்தில் எல்லா பயன்களும் (One Stop Solution) கிடைக்கும்.

இதன் மூலம், பயிர்க்கடன், நெல். கரும்புக்கான ஊக்கத்தொகை, இயற்கைப் பேரிடர் நிவாரணம், நலத்திட்ட உதவிகள், வேளாண்மை சார்ந்த 13 க்கும் மேற்பட்ட துறைகளின் பல்வேறு திட்டப் பலன்கள் அனைத்தையும் விவசாயிகள் எளிதாகப் பெறும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இது விவசாயிகளுக்கும் அரசின் பல துறைகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

ஒருங்கிணைந்த பண்ணையம்

பயிர்களை வளர்ப்பதன்மூலம் மட்டுமே உழவரின் வாழ்க்கை உயர்ந்துவிட முடியாது.  ஆண்டுதோறும் பலன் தருகிற கறவை மாடுகள், தேவைக்கேற்ப விற்கக்கூடிய ஆடுகள், விருந்தினர் வந்தால் விருந்தாக புழக்கடைக் கோழிகள், மாடுகளுக்குத் தீவனமாகும் தீவனப் பயிர்கள், ஊட்டச் சத்தாகின்ற பழ மரங்கள், நெடுங்காலம் கழித்து முதலீடாய்த் திகழும் மரக்கன்றுகள், மலர்களில் மகரந்தச் சேர்க்கை நடத்திடும் தேனீக்கள் வளர்ப்பு, மண்ணை மக்கும் உரமாக மாற்றும் மண்புழு உரம் தயாரிப்பு, அன்றாடம் உணவு சமைக்க உதவும் ஊட்டச்சத்து தோட்டம், பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பு போன்ற வேளாண்மை தொடர்பான பணிகள் அனைத்தையும் ஒரு குடையின்கீழ் மேற்கொள்வதை ஊக்கப்படுத்துவது இன்றைய முக்கியமான தேவை.  இது நிலையான வருமானத்திற்கும், நீடித்த வருமானத்திற்கும் உதவுகின்ற ஒருங்கிணைந்த பண்ணையமாகும்.   இதை ஊக்குவிக்கும் வகையில், 50 ஆயிரம் ரூபாய் மானியத்தில் 10 ஆயிரம் ஒருங்கிணைந்த பண்ணையத் தொகுப்புகளுக்கு வரும் நிதியாண்டில் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். 

பயறு பெருக்குத் திட்டம்

பயறு வகைகள் புரதம் நிறைந்தவை.  உடலுக்கு உறுதி அளிப்பது புரதச் சத்து.  சமச்சீர் உணவுக்கும், இரும்பு போன்ற தசைகளுக்கும், எஃகு போன்ற நரம்புகளுக்கும், புரதச் சத்து அவசியமாகிறது.  அதை அளிப்பது பயறு வகைகள்.  தமிழ்நாட்டில் பயறு வகைகளின் பரப்பளவையும், உற்பத்தியையும் அதிகரித்திட பயறு பெருக்குத் திட்டம் வரும் நிதியாண்டில் 30 கோடி ரூபாயில் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

மேலும், துவரை மண்டலமாக கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து துவரையை நடவு முறையில் சாகுபடி செய்ய 18 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

இது தவிர, விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ், 60 ஆயிரம் மெட்ரிக் டன் உளுந்தும், 12 ஆயிரம் மெட்ரிக் டன் பச்சைப்பயறும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகள் நலம் காக்கப்படும்.

எண்ணெய் வித்துக்கான சிறப்பு திட்டம்

உணவுக்கு சுவை சேர்ப்பவை எண்ணெய் வித்துக்கள்.  தமிழ்நாட்டில் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை உயர்த்திடும் நோக்கத்துடன், சூரியகாந்தி பயிரின் உற்பத்தித் திறனை உயர்த்தவும், அதிக இலாபம் தரக்கூடிய நிலக்கடலை, எள், சோயா மொச்சை போன்ற பயிர்களைப் பரவலாக்கம் செய்திடவும் வரும் நிதியாண்டில் 33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.  

எண்ணெய் வித்து சிறப்பு மண்டலம்: 

நிலக்கடலை, எள் போன்ற முக்கிய எண்ணெய் வித்துக்கள் அதிகம் விளையும் மாவட்டங்களான திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, தருமபுரி, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, கிருஷ்ணகிரி, கடலூர், திருப்பத்தூர், அரியலூர், வேலூர், புதுக்கோட்டை ஆகியவற்றை ஒருங்கிணைத்து எண்ணெய் வித்துக்கள் சிறப்பு மண்டலமாக உருவாக்கி, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, மதிப்புக்கூட்டுதல், சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி ஆகியவற்றுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

தென்னை வளர்ச்சி மேம்பாடு

‘நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தருங்கொல் எனவேண்டா-நின்று

தளரா வளர்தெங்கு தாள்உண்ட நீரை

தலையாலே தான்தருத லால்.’

வேரால் உண்ட நீரை, தலையிலிருந்து தருகிற உன்னதம் கொண்டது தென்னை. வளர்ப்பவரை அன்னைபோல் பாதுகாக்கும் அரிய பயிர் தென்னை.  ஆண்டு முழுவதும் பலன் தந்து, நட்டவரைப் பாதுகாத்திடும் நம் மண்ணுக்குச் சொந்தமான மகத்தான பயிர்.  முற்றியபோதும், தண்ணீர் வற்றியபோதும், பலன் தருவது தேங்காய்.  இளசாக இருக்கும்போது தாகம் தீர்த்து உண்பவரைக் குளிர்விக்கும்.  தமிழ்நாட்டு சமையலில் தேங்காய்க்குப் பெரும்பங்கு உண்டு.  பராமரிப்பு குறைவாகவும், பலன் நீட்டிப்பாகவும் இருக்கின்ற காரணத்தால் செல்வாக்கு பெற்ற பயிராக இது திகழ்கிறது.  தேங்காய் எண்ணெயிலிருந்து எண்ணற்ற பொருட்கள் உற்பத்தியாகின்றன. 

அ) தென்னையின் உற்பத்தித் திறனை அதிகரித்து தேசிய அளவில் உற்பத்தியில் முதலிடம் அடையவும், தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்தவும் தென்னை வளர்ச்சி வாரிய திட்டத்தில் வரும் ஆண்டில், ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள் குறித்த செயல்விளக்கத்திடல்கள் 10 ஆயிரம் எக்டர் பரப்பிலும், மண்டல தென்னை நாற்றுப் பண்ணைகள் தோற்றுவித்தல், எருக்குழி தோற்றுவித்தல், மறுநடவு- புத்தாக்கத் திட்டம் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். 

ஆ) குட்டை-நெட்டை வீரிய ஒட்டு இரகத் தென்னை நாற்று உற்பத்தியை அதிகரித்தல்:

குட்டை-நெட்டை வீரிய ஒட்டு இரக தென்னைக்கு விவசாயிகளிடத்தில் அதிகத் தேவை இருப்பதால் கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம், தென்காசி மாவட்டம் செங்கோட்டை, விருதுநகர் மாவட்டம் தேவதானம் ஆகிய இடங்களில் உள்ள மாநில தென்னை நாற்றுப்பண்ணைகளில் கூடுதலாக 10,000 குட்டை-நெட்டை வீரிய ஒட்டு இரக நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.

பருத்தி இயக்கம்

நூற்பாலைகளுக்குத் தேவையான பஞ்சை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்து வழங்கிடும் நோக்கத்துடன், தொடர்ந்து பருத்திப் பயிரின் உற்பத்தியை உயர்த்தும் வகையில், இவ்வரசு, “நீடித்த நிலையான பருத்தி இயக்கத்தினைச்” செயல்படுத்தி வருகிறது. வரும் ஆண்டிலும் பருத்தி உற்பத்தியை 4 இலட்சத்து 52 ஆயிரம் பேல்களாக உயர்த்தும் வகையில், 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

பயிர்க் காப்பீட்டுத் திட்டம் 

இயற்கையோடு அன்றாடம் நடத்தும் பகடையாக இருக்கிறது பயிர் வளர்ப்பு.  உழவர்கள், எங்கே வறட்சியால் பயிர் வறண்டுவிடுமோ, வெள்ளத்தால் மூழ்கிவிடுமோ, புயலால் சாய்ந்துவிடுமோ, சூறாவளியால் சுருண்டுவிடுமோ, பூச்சிகளால் அழிந்துவிடுமோ, பூஞ்சான்கள் பூத்துவிடுமோ என்ற அச்சத்தோடு, பயிரிட்ட நாள்முதல் பரிதவித்து, கவலையில் கன்னத்தில் கை வைத்து சோர்ந்துவிடாமலிருக்க அவர்கள் மீது தெளிக்கப்படும் உற்சாக ஊற்றாக இருப்பது பயிர்க் காப்பீடு.  

இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன்  தமிழ்நாடு அரசு,  பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தினை மிகுந்த நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.  வரும் ஆண்டில், காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்களிப்பாக 2,337 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

பழங்குடியின விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாடு

தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை,  சேலம் மாவட்டம் சேர்வராயன் மலை,  திருச்சிராப்பள்ளி மாவட்டம் பச்சைமலை, தருமபுரி மாவட்டம் வத்தல் மலை, சித்தேரி, திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை, திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, ஈரோடு மாவட்டம் தாளவாடி, பர்கூர், குதியாலத்தூர் உள்ளிட்ட பல்வேறு மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின விவசாயிகளுக்கு அனைத்து வகையிலும் உதவும் வகையில் வேளாண்மை-உழவர் நலத்துறையானது, பழங்குடியினர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வனத்துறை, பெரும் பல் நோக்கு கூட்டுறவு சங்கங்கள்(LAMPS), தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றோடு இணைந்து செயல்படுத்தப்படும். 

இயற்கைப் பண்ணைய சாகுபடி, கால்நடை வளர்ப்பு, பட்டு வளர்ப்பு, தேனீ வளர்ப்பு போன்ற உப தொழில்களுக்கு அரசு உதவி செய்யும். குறிப்பாக, சிறுதானியங்களைத் தொகுப்பாக சாகுபடி செய்து, மதிப்புக்கூட்டி இலாபகரமான விலைக்கு விற்பனை செய்திடும் வகையில் 70 சதவீத மானியம் வழங்கப்படும். தோட்டக்கலைத்துறை மூலம், பழங்குடியின மக்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்காகவும், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், காய்கறி நாற்றுகள், விதைகள் அடங்கிய வீட்டுத்தோட்டத் தளைகள் 5,000 குடும்பங்களுக்கு வழங்க 22 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.

மழை நீர் சேகரிப்புக் கட்டுமானங்கள், நுண்ணீர்ப் பாசனம், நீர் இறைக்கும் மோட்டார், நீர் கொண்டு செல்லும் குழாய்கள், பல்லடுக்கு தோட்டக்கலை சாகுபடிக்கு தேவையான நடவுப் பொருட்கள் வழங்கப்படும். சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நீர்வளப்பாதுகாப்பு பணிகள், வேளாண் இயந்திரங்களுக்கு மானியம் போன்ற உதவிகள் சிறப்புக் கவனம் செலுத்தி வழங்கப்படும். 

16) உழவர் அலுவலர் தொடர்பு திட்டம்-2.0

விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள், திட்டப் பயன்கள் குறித்த விவரங்களை எடுத்துச் செல்வதற்காக, ”உழவர் அலுவலர் தொடர்பு திட்டம்”  2020-21 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தின் மூலம் 12,525 கிராம ஊராட்சிகளுக்கும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறையின் 3,684 விரிவாக்க அலுவலர்கள் (உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர்) பயணம் மேற்கொண்டு தனித்தனியே தங்கள் துறை சார்ந்த தகவல்களை வழங்கி திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றனர்.

இதன்படி, ஒரு உதவி வேளாண்மை அலுவலர் 8 முதல் 10 ஊராட்சிகளுக்கும், ஒரு உதவி தோட்டக்கலை அலுவலர் 10 முதல் 15 ஊராட்சிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் 15 நாட்களுக்கு ஒருமுறையே விரிவாக்க (உதவி வேளாண்மை/உதவி தோட்டக்கலை) அலுவலர்கள் ஒரு ஊராட்சிக்கு செல்ல முடிகிறது. கிராம அளவில் வேளாண்மை – உழவர் நலத்துறையின் திட்டங்களை ஒரு சேர வழங்கிட, கிராமத்திற்கு ஒரு விரிவாக்க அலுவலரை நியமித்திடவேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. 

இதன்பொருட்டு, வேளாண்மை-உழவர் நலத்துறையின் அனைத்து சகோதரத்துறைகளிலும் உள்ள வட்டார, கிராம அளவில் பணியாற்றும் விரிவாக்க அலுவலர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, 4,311 விரிவாக்க அலுவலர்கள் 3 முதல் 4 கிராமங்களுக்கு ஒருவராக நியமிக்கப்படுவார்கள். இந்த வேளாண்மை விரிவாக்க அலுவலர், வேளாண்மை, தோட்டக்கலை-மலைப்பயிர்கள், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் சார்ந்த அனைத்துப் பணிகளையும் கிராம அளவில் ஒருங்கிணைத்து உழவர் அலுவலர் தொடர்பு திட்டம்-2.0 ஆகச் செயல்படுத்துவர்.  

மேலும், வட்டார அளவிலான அனைத்து வேளாண்மை, சகோதரத்துறை அலுவலர்களின் ”மேசைப்பணியினைக் குறைத்து, களப்பணி”யினை அதிகரிக்கும் வகையில் ஆய்வுக்கூட்டங்கள், அறிக்கைகள் தயாரித்தல் ஆகியவை முறைப்படுத்தப்பட்டு நேரம் மீதப்படுத்தப்படும். விவசாயிகளுடனான தொடர்பு வலுப்படும்.

சர்க்கரைத் துறை

இனிப்பே, இனிய சுவைகளின் மகுடமாகத் திகழ்கிறது. மனம் மகிழும் போதெல்லாம் இனிய அனுபவங்கள் என்றே அழைக்கிறோம். இனிப்பை நுகர்வோர்க்கு வழங்குவதில் முன்னணி வகிக்கிறது சர்க்கரை. 

சர்க்கரைத் தொழிலிலும் அக்கறை காட்ட ஆர்வம் மிகுந்தது தமிழ்நாடு அரசு.  சர்க்கரை ஆலைகளும், கரும்புப் பயிரும், உழவர் பெருமக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருப்பதன்மூலம் வேலைவாய்ப்பு உருவாகி, மனிதனின் வருவாய் அதிகரிக்க ஆதாரமாக இருந்து வருகின்றன.

2021-22 பருவத்தில் கரும்பு விவசாயிகளுக்கு
ஒரு மெட்ரிக் டன் கரும்பிற்கு சிறப்பு ஊக்கத் தொகையாக
195 ரூபாய் அறிவிக்கப்பட்டு, ஒரு இலட்சத்து 21 ஆயிரம் விவசாயிகளுக்கு மொத்தம் 214 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்டு வரும் சிறப்பான நடவடிக்கைகளின் காரணமாக, சர்க்கரை ஆலைகளுக்குப் பதிவு செய்யப்படும் கரும்பு சாகுபடி பரப்பு 2022-23 பருவத்தில் குறிப்பிட்ட அளவைவிட 55,000 எக்டர்  அதிகரித்துள்ளது.  

கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, கரும்புப் பதிவு பரப்பு, உற்பத்தியினை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்திடவும், வரும் நிதியாண்டில் கீழ்க்காணும்  திட்டங்கள் இவ்வரசினால் செயல்படுத்தப்படும். 

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை 

தமிழ்நாட்டில் உள்ள கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, 2022-23 அரவைப் பருவத்தில், ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான டன் ஒன்றுக்கு 2,821 ரூபாய்க்கு மேல் கூடுதலாக 195 ரூபாய் தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக மொத்தம் 253 கோடி ரூபாய் வழங்கப்படும். இதன்மூலம் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர்.

கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டம் 

கரும்பில் உயர் மகசூல், அதிக சர்க்கரைக் கட்டுமானம் அடைந்திடவும், கரும்பு விவசாயிகளின் சாகுபடி செலவை குறைக்கும் நோக்குடனும், உயர் விளைச்சல், உயர் சர்க்கரைக் கட்டுமானம் கொண்ட வல்லுநர் விதைக்கரும்பு,  பருசீவல் நாற்றுக்கள் போன்றவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஏழு கூட்டுறவு, பொதுத் துறை சர்க்கரை ஆலைகளின் கரும்புத் தளங்கள் சிமெண்ட் கான்கிரீட் தளங்களாக மேம்படுத்தப்படும். இதற்கென வரும் ஆண்டில் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

சர்க்கரை ஆலைக் கழிவு மண்ணில் இருந்து இயற்கை உரம் தயாரித்தல் 

தமிழ்நாட்டு விவசாயிகளின் இயற்கை உரத் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக, சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில்  ஆலைக்கழிவு மண்ணிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

தோட்டக்கலை – மலைப் பயிர்கள் துறை

தென்னையும், மாவும், பலாவும், மாதுளையும், எலுமிச்சையும் அடர்ந்து, படர்ந்து வனம்போல் காட்சியளிக்கும் பல்லடுக்கில் வளமான தோட்டப் பயிர்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு தொன்று தொட்டு விளங்குகிறது.

 ‘முக்கூடற் பள்ளு’ என்கிற நூலில் தேங்காய் ஒன்று விழுந்து, பாக்கின்மீது பட்டு, பின்னர், மா மரங்களின்மீது உதிர்ந்து, பலா மரத்தின்மேல் விழுந்து, இறுதியில் வாழை மரக் குலைகளைச் சாய்த்து, பின்னர் மாதுளைக் கொம்பின் மீது படுவதைச் சித்தரிக்கும் அழகிய பாடல் இடம்பெற்றுள்ளது.  

‘மீது யர்ந்திடும் தெங்கிள நீரை

மிடைந்த பூகஞ்

சுமந்துதன் காயைக்

குத மொன்றிச் சுமக்கக் கொடுக்கும்

சூதந் தன்கனி

தூங்கும் பலாவில்

ஓதும் அந்தப் பலாக்கனி வாழை

உளுக்க வேசுமந்து

ஒண்குலை சாய்க்கும்

மாது ளங்கொம்பு வாழையைத் தாங்கும்

வளமை ஆசூர்

வடகரை நாடே.’

தோட்டக்கலைத் துறை ஊட்டச்சத்துக்கு உறுதுணையாக விளங்கும் துறை.  காய்கறிகளும், பழங்களும், உணவு தானியங்களுக்குச் சமமாக விளைந்தால்தான் உடலுக்குத் தேவையான தாதுப் பொருட்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து போன்றவை கிடைத்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; செரிமானம் சீராகும்.  உழவர்களின் வருமானம் உயர்வதற்கும், உண்பவர்களின் செரிமானம் அதிகரிப்பதற்கும் தோட்டக்கலைப் பயிர்களே தோதாக இருக்கின்றன.  

கடந்த வேளாண் நிதி நிலை அறிக்கையில் அறிவித்தவாறு, மாற்றுப் பயிராக தோட்டக்கலைப் பயிர்கள், தென்னையின் நடுவே ஊடுபயிர், துல்லிய பண்ணையம், தொகுப்பு முறையில் சொட்டுநீர்ப் பாசனம்,  பழப்பயிர்கள், கிழங்கு, சுவைதாளித பயிர்கள், மலர்கள், பூண்டு, உழவர் சந்தையில் காய்கறி வரத்தை அதிகரித்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. 

இவ்வாண்டு, காய்கனிகளைப் பெருமளவில் உற்பத்தி செய்து, ஊட்டச்சத்தில் தன்னிறைவு அடைவதை நோக்கிப் பயணிக்கிறது நம் தமிழ்நாடு. தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக,  காய்கறிகள், பழங்கள் பயிரிடுவதை விவசாயிகளிடையே ஊக்குவிக்க  தோட்டக்கலைத் துறை மூலம் சிறப்புத் திட்டங்கள் இந்த ஆண்டைப்போல் வரும் ஆண்டும் செயல்படுத்தப்படும்.

தொகுப்பு முறையில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி

மல்லிகை, கறிவேப்பிலை, மிளகாய், பலா போன்ற தோட்டக்கலை பயிர்கள் அதிகம் பயிரிடப்படும் மாவட்டங்களில் இதற்கென தனி தொகுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, உற்பத்தி முதல் அறுவடைப் பின் செய் மேலாண்மை உட்பட ஏற்றுமதி வரை அனைத்து நிலைகளிலும் கவனம் செலுத்தி, ஒட்டுமொத்த வளர்ச்சி அடையும் நோக்கில் திட்டம் செயல்படுத்தப்படும். புதிய தொகுப்புகள்மூலம் விளையும் விளைபொருட்களுக்குத் தனி அடையாளத்தை உருவாக்கி, உள்நாட்டில் மட்டுமல்லாது, உலகளாவிய மதிப்புத் தொடரில் நமது விவசாயிகளை ஒருங்கிணைத்து, அவர்கள் அதிக வருமானம் பெற்று வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் இத்திட்டம் அமையும்.

அ) மதுரை மல்லிகைக்கு ஓர் இயக்கம் 

மதுரைக்கும் மல்லிகைக்குமான தொடர்பு, இன்று நேற்றல்ல. சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது. எனவே மல்லிகைக்குப் புகழ்பெற்ற மதுரையை மையமாக வைத்து ஒரு தொகுப்பு ஏற்படுத்துவது மிகவும் உகந்ததாகும். 

மல்லிகை மதுரையில் மட்டுமின்றி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 4,300 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இத்தொகுப்பில் மல்லிகை உற்பத்தியை மேம்படுத்துவதோடு, சந்தை வாய்ப்புகளும் மேம்படுத்தப்படும்.  குறிப்பாக, பருவமில்லா காலங்களில் உற்பத்தி உறுதி செய்யப்படும். இத்திட்டம் தொடர் திட்டமாக ஐந்தாண்டுகளில் செயல்படுத்தப்படும். இத்தொகுப்பிற்குத் தேவையான தரமான மல்லிகைச் செடிகளை இராமநாதபுரம் மாவட்டத்தில் உற்பத்தி செய்து உரிய காலத்தில் வழங்கிட வழிவகை செய்யப்படும். 

மல்லிகை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் கவாத்து செய்யவும், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து, பயிர் பாதுகாப்பு மேலாண்மை முறைகளை மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டு ஆண்டு முழுவதும் மல்லிகைப் பூக்கள் கிடைத்திட  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  வரும் ஆண்டில் இத்திட்டம் ஏழு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

ஆ. பலா இயக்கம்

தமிழ்நாட்டின் மாநிலப் பழம் என்ற பெருமை கொண்டது பலா.  கடலூர் மாவட்டம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கே உரிய, பண்ருட்டி பலாவிற்கு ஒருங்கிணைந்த தொகுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, நடவுச் செடிகள், இடுபொருட்கள், மதிப்புக் கூட்டுதலுக்கான கட்டமைப்புகள், உலகளாவிய சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். பலா தொடர்பாக பன்னாட்டு கருத்தரங்குகள் நடத்துவதோடு, விவசாயிகளுக்கு மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரிப்பில் பயிற்சிகளும் வழங்கப்படும்.  

 மேலும், பிற மாவட்டங்களில் அப்பகுதிகளுக்கு ஏற்ற புதிய இரகங்களை அறிமுகப்படுத்தி, பயிரிட விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவர். ஐந்து ஆண்டுகள் தொடர் திட்டமாக பலா இயக்கம் செயல்படுத்தப்பட்டு, 2,500 எக்டர் பரப்பளவில் பலா சாகுபடி மேற்கொள்ளப்படும். இத்திட்டம், அரியலூர், கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சேலம், தென்காசி, தேனி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். 

பலா தொடர்பான ஆராய்ச்சிகளை வலுப்படுத்தி, புதிய இரகங்கள், உயர் மகசூல் தொழில்நுட்பங்கள், மதிப்புக்கூட்டல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையம் வலுப்படுத்தப்படும். வரும் ஆண்டில் இவ்வியக்கத்திற்கு மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

இ) மிளகாய் மண்டலம்

மிளகாய், தமிழ்நாட்டில் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் 35,200 எக்டர் பரப்பில் பயிரிடப்படுகிறது.  இப்பரப்பை 40,000 எக்டராக உயர்த்தி, உற்பத்தியினை அதிகரிக்க இம்மாவட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளில் மிளகாய் மண்டலமாக மாற்றப்படும்.  இப்பகுதியில் மிளகாய் உற்பத்தியை அதிகரிக்கவும், சேமித்து வைத்து சந்தைப்படுத்தவும், மதிப்புக்கூட்டுதலுக்கும் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். நீர் ஆதாரம் இல்லாத இடங்களில் பண்ணைக் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டு நுண்ணீர்ப் பாசன முறையில் சாகுபடி மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வரும் ஆண்டு, இம்மாவட்டங்களில் 1,000 எக்டர் பரப்பிலுள்ள  சீமைக்கருவேல மரங்கள், ஊரக வளர்ச்சித் துறை, வேளாண் பொறியியல் துறையுடன் ஒருங்கிணைந்து அகற்றப்பட்டு, மிளகாய் சாகுபடி செய்யப்படும்.

மேலும், 1,000 எக்டர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ள விதைகள், நாற்றுகள், இடுபொருட்கள் வழங்குவதோடு, மிளகாய்த்தூள், மிளகாய் பேஸ்ட் (Chilli paste), மிளகாய் துகள்கள் (Chilli flakes) மிளகாய் எண்ணெய் (Chilli oil) போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்க ஏதுவாக பதப்படுத்துதலும், மதிப்புகூட்டுதலும் செய்யும் கூடங்கள், சூரிய உலர்த்திக் கூடம்,  தூய்மையான முறையில் காய வைத்து சந்தைப்படுத்திட உலர் பாய் போன்றவை வழங்கப்படும். இத்திட்டம் வரும் ஆண்டில் ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். 

ஈ) கறிவேப்பிலைத் தொகுப்பு

உணவுக்கு மணமூட்டும் கறிவேப்பிலை, தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இங்கு கறிவேப்பிலைக்கு என ஒரு தொகுப்பு ஏற்படுத்தப்பட்டு, உரிய பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்து, பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டைக் குறைத்து, அதிகளவில் அங்கக இடுபொருட்களைப் பயன்படுத்தி, சாகுபடி மேற்கொள்ள விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும். ஐந்து ஆண்டுகளில் 1,500 எக்டர் பரப்பில் கறிவேப்பிலைத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். வரும் ஆண்டில், 100 எக்டரில் செங்காம்பு இரக கறிவேப்பிலை பயிரிட தரமான நடவுச்செடிகள், நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் வழங்கப்படும். உலர் கறிவேப்பிலை, கறிவேப்பிலைத்தூள், பேஸ்ட் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப் பயிற்சி அளிக்கப்படும்.

 மேலும், இத்தொகுப்பிலுள்ள விவசாயிகளுக்குப் பண்ணை இயந்திரங்கள், சூரிய உலர்த்திக் கூடம், மதிப்புக் கூட்டு இயந்திரங்கள் போன்றவை வழங்கப்படும்.  விளைவிக்கப்பட்ட கறிவேப்பிலையின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு ஏற்றுமதிக்குரிய தரக் கட்டுப்பாடு உறுதி செய்யப்படும். இத்திட்டம், வரும் ஆண்டு 2 கோடியே
50 இலட்சம்
ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

முருங்கை இயக்கம்

முருங்கையின் பல்வேறு சிறப்புகளைக் கருதி அதற்கு முக்கியத்துவம் அளித்துவரும் தமிழ்நாடு அரசு, முதல் வேளாண் நிதிநிலை அறிக்கையில் தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கி ”முருங்கை  ஏற்றுமதி மண்டலம்” அறிவித்தது. முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் மதுரையில் செயல்பட்டு வருகின்றது. 

வரும் ஆண்டு 1,000 எக்டர் பரப்பில் முருங்கை
சாகுபடி ஊக்குவிக்கப்படுவதோடு, பதப்படுத்துதலுக்கும் மதிப்புக்கூட்டுதலுக்கும் உரிய வசதிகள் ஏற்படுத்தப்படும். முருங்கையில் ஏற்றுமதி வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும் வகையில் சாகுபடி முறைகள், மதிப்பு கூட்டுதல் பயிற்சி, சான்றிதழ் பெறும் முறைகள்,  ஏற்றுமதி நெறிமுறைகள் குறித்த  பயிற்சிகள், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்துடன் (APEDA) ஒருங்கிணைந்து விவசாயிகளுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் இம்மையத்தின் மூலம்  வழங்கப்படும். இதற்கென 11 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

தக்காளி, வெங்காயம் சீராகக் கிடைக்கச் செய்தல்

தக்காளி, வெங்காயம் தமிழ்நாட்டு சமையலில் இன்றியமையாத அம்சங்களாகிவிட்டன.  எல்லா நாட்களிலும் தேவைப்படும் இவை, பருவத்தில் மட்டும் அதிகமாக உற்பத்தியாகி, உழவர்கள் பறிக்காமலேயே விட்டுவிடுகிற நிலை ஏற்படுகிறது. மற்ற காலங்களில், சாமானியர்களால் வாங்கமுடியாத விலைக்கு விற்கப்படுகிறது.  இதனைச் சரிசெய்யும்பொருட்டு, ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக தக்காளி, வெங்காயம் கிடைக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும், 

பெரம்பலூர், நாமக்கல், சேலம், தூத்துக்குடி, திருச்சி, திண்டுக்கல், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் விதைப்பு இயந்திரங்கள், சேமிப்புக் கட்டமைப்புகள், அறுவடை இயந்திரங்கள், வெங்காயத்தாள் பிரித்தெடுக்கும் கருவிகள் ஆகிய உதவிகள் வழங்க 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வெங்காய வரத்து நிலைப்படுத்தப்படும். 

தக்காளியின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, சொட்டு நீர்ப் பாசனம் அமைத்தல், தடுக்கு அமைத்தல், அதிக மகசூல் தரும் இரகங்களைப் பயிரிடுதல், மூடாக்கு இடுதல் போன்ற உத்திகள் ஊக்குவிக்கப்படும். இத்திட்டம் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் 19 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

செள செள, பட்டாணி, பீன்ஸ் போன்ற குளிர்காலக் காய்கறிகள் உற்பத்தி 

செள செள, பட்டாணி, பீன்ஸ் போன்ற குளிர்காலக் காய்கறிகள், மலைக்காய்கறிகள் மக்களிடையே பிரசித்தி பெற்று வருகின்றன. எனவே, இவ்வாண்டு  இப்பயிர்களின் சாகுபடிக்கு  முக்கியத்துவம் அளித்து,  விதைகள், இடுபொருட்கள் வழங்குவதோடு, கொடிவகைக் காய்கறிகள் படர்வதற்கான குச்சிகள் வாங்குவதற்கு பின்னேற்பு மானியம் வழங்கப்படும். இத்திட்டம், 1,000 எக்டர் பரப்பில் 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

சிறப்புத் தோட்டக்கலைப்  பயிர்களில் பரப்பு விரிவாக்கம்:

சிறப்பு மிக்க, அதிக சந்தை வாய்ப்புள்ள டிராகன் பழம், அவகாடோ, பேரீச்சை, லிச்சி, மங்குஸ்தான், அத்தி, ஆலிவ் போன்ற சிறப்புத் தோட்டக்கலைப் பயிர்களுக்கான தேவை மிகவும் அதிகரித்து வருகிறது. பெருமளவு இறக்குமதி செய்யப்படும் இவற்றை தமிழ்நாட்டில் பயிரிட விவசாயிகளிடையே ஆர்வம் எழுந்துள்ளது. பயிரிட சாதகமான இடங்களில் இவற்றை ஊக்குவிக்கும் வகையில், வரும் ஆண்டில் மொத்தமாக 1,000 எக்டரில் பரப்பு விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான சாகுபடி மானியம் வழங்கப்படுவதோடு, சாகுபடி முறைகள் குறித்த பயிற்சியும் வழங்கப்படும். இதற்கென இரண்டு கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்படும்.

நுண்ணீர்ப் பாசனம் அமைத்தல்

‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் திருவள்ளுவப் பெருந்தகை.  பணத்தைத் தண்ணீரைப்போல செலவு செய்யும் நிலையிலிருந்து, தண்ணீரைப் பணம்போல் செலவு செய்யவேண்டிய நெருக்கடியில் இருக்கிறது உலகம்.  ஒவ்வொரு சொட்டும் உன்னதம்; அதை சேமிப்பது மூலதனம்.

நிலத்தடி நீர் அதிகம் உறிஞ்சப்பட்ட, அதிவேகமாகக் குறைந்துவரும் குறு வட்டங்களில் சாகுபடிப் பரப்பளவு குறைந்துள்ளது. தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால், வேளாண்மை பாதிக்கிறது. நுண்ணீர்ப் பாசன முறையைப் பின்பற்றி, நிலத்தடி நீரைத் திறம்படப் பயன்படுத்தி, அதிக பரப்பை சாகுபடிக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வரும் ஆண்டில் இத்திட்டத்திற்கான மொத்த நிதியான 744 கோடி ரூபாய் நிதியில், சுமார் 60 சதவிகித நிதியான 450 கோடி ரூபாயில் இக்குறு வட்டங்களில்,
53,400 எக்டர் பரப்பில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.  

நுண்ணீர்ப் பாசன மானியம் பெறுவதற்கு தற்போதுள்ள அதிகபட்ச பரப்பான ஐந்து எக்டரை 10 எக்டராக உயர்த்தவும், ஒரே நிலத்தில் மீண்டும் நுண்ணீர்ப் பாசனம் நிறுவுவதற்கான கால இடைவெளியை ஏழு ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகளாகக் குறைக்கவும் ஒன்றிய அரசை இவ்வரசு வலியுறுத்தும்.

பத்து இலட்சம் குடும்பங்களுக்கு பழச் செடிகள் விநியோகம்

பழங்கள், நார்ச்சத்து நிறைந்தவை, இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்துபவை, இதய நோயைக் குறைப்பவை, பக்கவாதத்தைத் தடை செய்பவை, செரிமானப் பிரச்சினையைச் சரிபடுத்துபவை, கண் பார்வையைக் கூர்மையாக்குபவை. 
ஓர் உணவில், வெண்மை, பசுமை, பழுப்பு நிறமும், சிவப்பு நிறமும், மஞ்சள் நிறமும் சரியான விகிதத்தில் இருப்பதே சமச்சீரான உணவுக்கு அடையாளம்.  அத்தகைய உணவை வழங்குவதில் கனிகள் பெரும்பங்கு வகிக்கின்றன.  

தமிழ்நாடு, உணவு தானியங்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தாலும், ஊட்டச்சத்துப் பாதுகாப்பை அடைய பழங்களின் உற்பத்தி முக்கியம்.  பருவத்திற்கேற்ப இயற்கை நமக்குத் தேவையான பழங்களை உற்பத்தி செய்து தருகிறது.  கோடையில் குளிர்ச்சியான பழங்களையும், குளிர் காலத்தில் உடலை வெப்பத்தில் வைத்திருக்கும் பழங்களையும் தருவித்துத் தருகின்ற அமுதசுரபியாகத் திகழ்கிறது இயற்கை.  

எனவே, வரும் ஆண்டில், பத்து இலட்சம் குடும்பங்களுக்கு மா, கொய்யா, பலா, நெல்லி, எலுமிச்சை, சீதாப்பழம் போன்ற பல்லாண்டு பழச் செடிகள் அடங்கிய தொகுப்பு 15 கோடி ரூபாய் நிதியில் வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தும் கிராமங்களில் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும், 300 குடும்பங்களுக்கு இத்தொகுப்புகள் வழங்கப்படும்.

பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறையைப் பரவலாக்கல்: 

பசுமைக் குடில், நிழல் வலைக் குடில் ஆகிய பாதுகாக்கப்பட்ட சாகுபடி மூலம் உயர் மதிப்புள்ள காய்கறிகள், பூக்கள் ஆகியவற்றை விவசாயிகள் ஆண்டு முழுவதும்
சாகுபடி செய்து அதிக வருமானம் பெற முடியும். இவற்றை நிறுவ மானியம் அளிக்கும் வகையில், வரும் ஆண்டில்
22 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திண்டுக்கல், தருமபுரி, ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தேனி, ஈரோடு, திருப்பத்தூர், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். 

பூங்காக்களை அலங்கரித்தல்

ஆண்டுதோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வரும் ஏற்காடு அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில், தாவர அலங்கார வடிவங்கள் (Topiary) அமைக்கப்படும்.  தாவர வேலிகளிட்ட நடைபாதைகள், தாவரப் பின்னணிகள், உயிர்ச் சிற்பங்கள் அமைக்க ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

சென்னை, மாதவரம் தோட்டக்கலைப் பூங்காவிற்கு இரண்டு இலட்சம் பேர் ஆண்டுதோறும் வருகை புரிகின்றனர். இப்பூங்காவினை மேலும் அழகுபடுத்தி, பார்வையாளர்களைக் கவரும் வகையில், இசைக்கேற்ப அசைந்தாடும் நீரூற்றுகள், பூங்கா விரிவாக்கம் போன்றவை ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.

உழவர்களுக்கு அயல்நாட்டில் பயிற்சி 

அயல்நாடுகள் சிலவற்றில் உயர் இரக தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உற்பத்தித்திறன் அண்ணாந்து பார்க்கும் நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. அங்கிருக்கும் தொழில்நுட்பங்களை நம் மாநில உழவர்களும் அறிவது, அவர்களுக்குள் ஊக்கத்தை உண்டாக்கும். பிறகு, மனதில் தங்கி, தாக்கத்தை உண்டாக்கும். நாமும் அப்படி உற்பத்தி செய்ய முடியாதா என்கிற ஏக்கத்தை ஏற்படுத்தும். அது சாகுபடியிலிருக்கும் தேக்கத்தை நீக்கி தேடலை உண்டாக்கும். அவர்கள் தங்கள் நிலங்களில் அத்தகைய முயற்சியை மேற்கொள்வார்கள். காண்பது நம்பிக்கையாகவும், செய்வது கற்றலாகவும் மாறும். எனவே, 150 முன்னோடி விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பாரம்பரிய காய்கறிகள் 

தமிழ்நாட்டில் நம் மண்ணுக்கே சொந்தமான சுவை மிகுந்த எண்ணற்ற காய்கறி வகைகள் உள்ளன. இந்த ஆண்டைப் போலவே, வரும் ஆண்டிலும் இத்தகைய பாரம்பரிய காய்கறிகளைப் பரவலாக்கம் செய்யும் வகையில், காய்கறி விதைகள் சேகரிக்கப்பட்டு, மரபணு தோட்டங்கள் அமைக்கப்படும்.  மாவட்டந்தோறும் விதைத் திருவிழா, மாநில அளவில் கருத்தரங்கம் ஆகியவை நடத்தப்படும். பாரம்பரிய காய்கறி விதைகளை அதிகளவில் மீட்டெடுத்த  விவசாயிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். இவ்வாறாக மீட்டெடுத்த விதைகள் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு விதைப் பொட்டலங்களாக ஆடி, தை பட்டங்களில் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் விநியோகம் செய்யப்படும். வரும் ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

கீழ்பவானியில் ஒருங்கிணைந்த நுண்ணீர்ப் பாசன அமைப்பு

மேற்கு தொடர்ச்சி மலையின் நீலமலையிலிருந்து நீந்திவரும் நதி பவானி. அது நடக்கும் தடங்களெல்லாம் மரகதப் போர்வைகள்.  ஈரோடு மாவட்டத்திலுள்ள கீழ்பவானி பாசனப் பரப்புப் பகுதியில் சாகுபடிக்கு உகந்த பகுதிகளில் ஒருங்கிணைந்த நுண்ணீர்ப் பாசனக் கட்டமைப்புகளை சோதனை முறையில் 960 எக்டர் பரப்பளவில் தொகுப்பு முறையில் ஏற்படுத்திட புதிய திட்டம் செயல்படுத்தப்படும். கிடைக்கும் நீரினை திறம்பட உபயோகித்து, ஆண்டு முழுவதும் பயிர் சாகுபடி செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவதோடு, மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு, அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். இதன்மூலம் கீழ்பவானி பகுதியிலுள்ள தொட்டம்பாளையம், அக்கரைநெகமம், கரிதோட்டம்பாளையம், பூசாரிப்பாளையம் போன்ற ஆயக்கட்டுப் பகுதிகளில் காய்கறிகள், மஞ்சள், வாழை போன்ற தோட்டக்கலை பயிர்கள் பயிரிட நீர்ப்பாசன வசதி ஏற்படுத்தப்படும். இத்திட்டம் இரண்டு ஆண்டுகளில் தோராயமாக 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

முந்திரி சாகுபடியை மேம்படுத்துதல்

முந்திரிக்கான சந்தை வாய்ப்பு உள்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் அதிகரித்து வரும் நிலையில், வரும் ஆண்டு முந்திரி சாகுபடியை  கூடுதலாக 550 எக்டர் அதிகரிக்கவும், வயது முதிர்ந்த, விளைச்சல் குறைந்துள்ள முந்திரி மரங்களை அகற்றி, உயர் விளைச்சல் இரக செடிகளை  500 எக்டரில் நடவுசெய்து புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பண்ருட்டி, அருகாமையிலுள்ள பகுதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். 

தேனி மாவட்டத்தில் வாழை தொகுப்பு வளர்ச்சி திட்டம்: 

வாழையின் உற்பத்தித்திறனில் தமிழ்நாட்டில் முதலிடம் வகிக்கும் தேனி மாவட்டத்தில், வாழைக்கென தனி அடையாளம் உருவாக்கி உலக சந்தைக்கு கொண்டு சேர்க்கும் விதத்தில், வாழைக்கென்று ஒரு தனி தொகுப்புத் திட்டம் 130 கோடி ரூபாய் நிதி மதிப்பீட்டில் அரசு, தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.

பள்ளி மாணவர்களுக்குப் பண்ணைச் சுற்றுலா 

பாடப் புத்தகங்களில் படமாகவும், ஊடகங்களில் காணொலியாகவும் கண்ட வயல்களை, தோப்புகளை, தோட்டங்களை, பாசனக் கிணறுகளை, பழ மரங்களை, மாணவர்கள் நேரடியாக காண வேண்டுமென்பதற்காகவும், வேளாண்மையின் மகத்துவத்தை அவர்கள் அறிந்து, உணர்ந்து, தெளிந்து, தேற வேண்டுமென்பதற்காகவும், பண்ணைச் சுற்றுலா கல்வித் துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும். 

கான்கிரீட் காடுகளிலிருந்து பெறுகிற விடுதலையாகவும், மரகத வயல்வெளிகளைக் கண்டு மகிழ்கிற பொழுதுபோக்காகவும், உழவர்களின் வியர்வையின் உன்னதத்தைப் புரிந்துகொள்கிற பயிற்சியாகவும், பாடப் புத்தகங்களில் வருகிற வினாக்களுக்கு விளக்கமாகவும், உண்ணுகிற உணவை, உணவின் அருமையை உணரும் மெய்ஞானமாகவும், இந்தப் பண்ணைச் சுற்றுலா மாணவர்களுக்கு அமையும். 

இதுபோன்ற சுற்றுலாக்கள் இயற்கையோடு இயைந்து வாழும் நெறியைக் கற்றுத்தரும். அரிசியும், பருப்பும் தொழிற்சாலைகளில் உற்பத்தியாவதாக நினைத்துக் கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்திற்கு இந்தச் சுற்றுலா விழிப்புணர்வை ஏற்படுத்தும்.  இத்திட்டம் ஒரு கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

பனை மேம்பாட்டு இயக்கம்

பனை மேம்பாட்டு இயக்கத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், 20 இலட்சம் பனை விதைகள், ஒரு இலட்சம் பனங்கன்றுகள் விநியோகம், 124 இடங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடங்களுக்கு
510 உபகரணங்கள், பனை மரம் ஏறுவதற்கு
1,000 உபகரணங்கள்  விநியோகிக்கப்பட்டதுடன், பனை மரம் ஏறும் சிறந்த இயந்திரம் கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் விருது வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அ) பனை சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு ஆற்றங்கரைகள் போன்ற பொது இடங்களில் நடவு செய்ய 10 இலட்சம் பனை விதைகள் வழங்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பனைப் பொருட்களின் மதிப்புக்கூட்டல் ஊக்குவிக்கப்படும். விவசாயிகளுக்கு மதிப்புக்கூட்டலுக்கான கொட்டகை, உபகரணங்கள், பாதுகாப்பாக மரம் ஏறுவதற்குரிய உபகரணங்கள் வழங்கப்படும். தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியத்தின் மூலம் பனை வெல்லம், பனங்கற்கண்டு, பிற பனை சார்ந்த பொருட்களை சுகாதாரமான முறையில் தயாரிப்பதற்கான பயிற்சி வழங்கப்படுவதோடு மகளிருக்கு பனை ஓலைபொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சியும் அளிக்கப்படும். இத்திட்டம் இரண்டு கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

ஆ) பனை ஆராய்ச்சி நிலையம் அமைத்தல்

கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் குறுகிய காலப் பனை இரகங்களை உருவாக்குதல், மதிப்புக்கூட்டுதல் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு மேலும் முக்கியத்துவம் அளித்து புதிய குட்டை ரக பனை மரங்களை உருவாக்கி அவற்றின் நடவுப்பொருட்களை கிடைக்கச்செய்வது, நடவு, ஊட்டச்சத்து, நீர் மேலாண்மை ஆகியவற்றுக்கான வழிமுறைகளை நெறிப்படுத்துவது, நீரா, பனை வெல்லம், பனங்கற்கண்டு போன்ற பனை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் தரத்தினை ஆய்வதற்கான தர ஆய்வுக்கூடம் அமைத்தல், மதிப்புக்கூட்டுதல் தொழில்நுட்பங்களை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டு, தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் பனைக்கென தனி ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும். இதற்கென 15 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

வேளாண்மைப் பொறியியல் துறை

மனிதனுக்கும், விலங்குகளுக்கும் இருக்கும் வேறுபாடு, நேரத்தை மேலாண்மை செய்வதால் அல்ல; நேரத்தை உருவாக்குவதால் உருவானது. சிங்கமும், புலியும் நகங்களாலும், கூரிய பற்களாலும் வேட்டையாடியபோது, மனிதன் கருவிகளால் வேட்டையாடினான்.  அதன் காரணமாக அவன் நேரம் மிச்சமானது.  கருவிகள், மனிதனின் வேகத்தை அதிகரித்தன.  வேகம் வேறு, அவசரம் வேறு. அறிவியல் தொழில்நுட்பங்கள் நாம் செயல்படும் வேகத்தை விரைவுபடுத்துவதற்காகவே. உடலும், மனமும் ஒன்றிணையும்போது, அப்போது வருவது வேகம்.  மனதின் வேகத்திற்கு உடல் ஒத்துழைக்காதபோது, அது அவசரம். 

வேளாண் இயந்திரமயமாக்குதல்

வேளாண் இயந்திரங்கள் நேரத்தை சேமிக்க உதவுபவை. நூற்றுக்கணக்கான மனிதர்கள் அறுவடை செய்கிற வயலை ஒரே ஓர் இயந்திரம், சில மணி நேரங்களில் அறுவடை செய்யும் ஆற்றல் மிகுந்தது. தமிழ்நாட்டு சிற்றூர்களில் வேளாண் பணிகளுக்கு ஆள்தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. பரவலாக்கப்பட்ட கல்வியினாலும், பரந்து விரியும் நகரமயமாக்கலினாலும், பலரும் படித்துப் பட்டம் பெற்று, பல்வேறு பணிகளில் அமர்வதாலும், இந்த ஆள் தட்டுப்பாடு, வளர்ச்சி அடைந்த நாடுகளைப் போலவே அதிகரித்துக் கொண்டே வருகிறது.  எனவே, வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கு வேளாண்மை இயந்திரமயமாக்குதல் இன்றியமையாததாகும்.  

உழுதல், விதைத்தல், நாற்று நடுதல், களை பறித்தல், கனி பறித்தல், அறுவடை செய்தல், மதிப்புக் கூட்டுதல், தோண்டுதல், தேங்காயைப் பிரித்தெடுத்தல், வெங்காயத் தாள் நீக்குதல், எண்ணெய் பிழிதல், போன்றவற்றை மேற்கொள்ள இயந்திரங்கள் இருப்பதால் மனித ஆற்றல் சேமிக்கப்படுகிறது.  நேரம் உருவாக்கப்படுகிறது.  உருவான உபரி நேரம் மற்ற பணிகளுக்குப் பயன்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளித்து இயந்திரங்களை மானியத்தில் வழங்க இவ்வரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  

வரும் ஆண்டில் வேளாண் இயந்திரங்கள், மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள், கரும்பு சாகுபடிக்கு ஏற்ற இயந்திரங்கள், கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ஆகிய இனங்களுக்காக ஒன்றிய, மாநில அரசின் நிதியிலிருந்து 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதோடு பயனாளிகள் தேர்வும் கணினிமயமாக்கப்படும்.

ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

திறம்பட வாழ, திறன்கள் அவசியம். ஊரகப் பகுதிகளில் இயந்திரங்களைப் பயன்படுத்தினால் மட்டும் போதாது. அவற்றை இயக்கவும், பழுதுபார்க்கவும் திறன்கள் தேவைப்படுகின்றன. உரிய நேரத்தில் வேளாண் இயந்திரங்களை இயக்குவதற்கு திறன்வாய்ந்த ஓட்டுனர்களை உருவாக்குவது அவசியம்.  டிராக்டர், அறுவடை இயந்திரங்கள் ஆகியவற்றை இயக்குவதற்கும், கையாள்வதற்கும் 500 ஊரக இளைஞர்களுக்கு வேலூர், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருவாரூர், திருநெல்வேலி ஆகிய ஆறு இயந்திர பணிமனைகளில் ஒரு கோடி ரூபாய் செலவில் இயந்திரங்களை இயக்குவதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும். 

மேலும், வேளாண் இயந்திரங்களைக் காடுகளிலும், மேடுகளிலும் பயன்படுத்துகிற காரணத்தால், அவை அடிக்கடி பழுதாகிற நெருக்கடி நேர்கிறது.  வயலில் உழுதுகொண்டு இருக்கிறபோது, இயந்திரக் கலப்பை பழுதானால் உழுகிற பணிக்கு, ஊறு விளைந்து விடும்.  இதைத் தவிர்க்கும் பொருட்டு, நகர்ப்புரங்களை நாடி வருகிற அந்த இயந்திரங்களை சிற்றூரிலேயே சீர்படுத்துவதற்கு ஊரக இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பது இன்றைய தேவை. ஊரக இளைஞர்கள் சுய தொழில் தொடங்கும் வகையில் ஆறு அரசு வேளாண் இயந்திரப் பணிமனைகளில் 50 இலட்சம் ரூபாய் செலவில் 200 ஊரக இளைஞர்களுக்கு பழுது நீக்கம், பராமரிப்பு ஆகியவை குறித்த குறுகிய காலப் பயிற்சி வழங்கப்படும்.

மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் 

நீர்த்தேக்கங்கள் எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் என்கிற புரிதல் பழந்தமிழர்களுக்கு இருந்ததை கபிலர் எழுதிய 

‘அறையும் பொறையும் மணந்த தலைய,

எண் நாள் திங்கள் அனைய கொடுங்கரைத்

தெண்ணீர்ச் சிறு குளம் கீள்வது மாதோ,

கூர் வேல் குவைஇய மொய்ம்பின்

தேர் வண் பாரி தண் பறம்பு நாடே.’

என்ற புறநானூற்றுப் பாடலில் இருந்து அறிய முடிகிறது.

நீர்த் தேக்கங்களின் நீர் பிடிப்புப் பகுதிகளிலிருந்து ஆண்டுதோறும் வண்டல் மண் மழைக்காலங்களில் அடித்துச் செல்லப்பட்டு, நீர்த் தேக்கங்களில் படிகிறது.  இதனால் அணைகளின் கொள்ளளவு குறைகிறது. தெரிவு செய்யப்பட்ட அணைகளில் உலக வங்கி நிதி உதவியுடன் அணை புனரமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் மண் வள, நீர்வடிப் பகுதி மேலாண்மை, ஓடை பராமரிப்பு, வண்டல் மண் சேகரிப்புக் கட்டுமானங்கள், தடுப்பணைகள் போன்ற மழை நீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் உள்ளிட்ட பணிகள் வரும் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் செயல்படுத்தப்பட உள்ளன.  இதற்காக, தேனி மாவட்டத்தில் வைகை அணை, சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை ஆகிய அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இ-வாடகை செயலியில் தனியார் இயந்திரங்கள், பழுதுநீக்குபவர்கள் விபரங்கள் இடம்பெறுதல்

விவசாயிகள் உழவுப் பணியினைத் தங்குதடையின்றி மேற்கொள்ள உதவிடும்பொருட்டு, தனியாருக்குச் சொந்தமான டிராக்டர்களின் உரிமையாளர்கள், வேளாண் இயந்திரங்கள், பம்புசெட்டுகளின் பழுதுகளை சரிசெய்யக்கூடிய தனியார் பழுதுநீக்குபவர்களின் பெயர், விலாசம், கைப்பேசி எண் போன்ற விவரங்கள் வட்டார, மாவட்ட வாரியாக, இ-வாடகை செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உழவன் செயலியோடும் இணைக்கப்படும்.

கடைமடைக்கும் பாசன நீர் 

கடைமடைக்கும் பாசன நீர் செல்லும் வகையில் இந்த ஆண்டினைப் போலவே வரும் ஆண்டும் காவிரி, வெண்ணாறு வடிநிலப் பகுதியிலுள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இரண்டாம் கட்டமாக, 1,146 கிலோமீட்டர் நீளத்திற்கு ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்கால்களைத் தூர் வாரும் பணிகள், ஒரு இலட்சத்து
32,000 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில்
ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

வட்டார அளவில் வேளாண்மைப் பொறியியல் துறையின் செயல்பாட்டினை வலுப்படுத்துதல் 

வேளாண் இயந்திரங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் காரணத்தால், அவற்றைக் கடைகோடியில் இருக்கும் சிற்றூருக்கும் எடுத்துச் செல்லும் பொறுப்பு அரசுக்கு இருப்பதால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வட்டார அளவில் வேளாண் பணிகளைத் தங்குதடையின்றி மேற்கொள்ள உதவும்பொருட்டு, டிராக்டர்கள், ரோட்டவேட்டர்கள், எந்திரக் கலப்பைகள், கரும்பு அறுவடை இயந்திரங்கள், நெல் அறுவடை இயந்திரங்கள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டு தேவைப்படும் விவசாயிகளுக்கு துறையின் இ-வாடகை செயலியின் மூலமாக குறைந்த வாடகைக்கு விடப்படும். 

மேலும், வட்டார அளவில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களில் வேளாண்மைப் பொறியியல் துறையின் அலுவலர்கள், வரும் ஆண்டிலிருந்து செயலாற்றிடும் வகையில் தற்போது வருவாய் கோட்ட அளவில் இயங்கி வரும் வேளாண்மைப் பொறியியல் துறையின் கட்டமைப்பு வட்டார அளவில் செயல்பட மறுசீரமைக்கப்படும். 

ஒவ்வொரு கிராமத்திற்கு இரு ”பவர் டில்லர்கள்’ 

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குறைந்து வரும் விவசாயிகளின் நில உடமையினைக் கருத்தில்கொண்டு, சிறிய வகை வேளாண் இயந்திரங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் அவசியம் கருதி, தமிழ்நாடு அரசின் தொலைநோக்குத் திட்டமான “கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த  வேளாண் வளர்ச்சித் திட்டக்” கிராமங்களில், ஒரு கிராமத்திற்கு இரண்டு பவர்டில்லர் இயந்திரங்கள் என்ற அடிப்படையில் வரும் நிதியாண்டில், 2,504 கிராமங்களுக்கு
43 கோடி ரூபாய் மானியத்தில் 5,000 பவர்டில்லர்கள் வழங்கப்படும்.

வேளாண்மை விற்பனை-வேளாண் வணிகத் துறை

உற்பத்தி செய்த பொருட்கள் களத்து மேட்டிலேயே காய்ந்து கொண்டு இருந்தாலோ, உழவர்களின் உலர் களத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தாலோ, பயனில்லை. பண்ணையில் உற்பத்தியாகும் பொருட்கள் படிப்படியாக உண்பவர்களின் கைகளில் கிடைக்கும்போதுதான், உன்னதம் விளைகிறது. அதற்கு உறுதுணையாக இருப்பதுதான் வேளாண்மை விற்பனை-வேளாண் வணிகத் துறை. 

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் புதிய, கூடுதல் கட்டமைப்புகள்

விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சி, திருவெண்ணைநல்லூர், தஞ்சாவூர் மாவட்டத்தில், பாபநாசம், திருவண்ணாமலை மாவட்டத்தில், நாயுடுமங்கலம், ஆதமங்கலம்புதூர் கடலூர் மாவட்டத்தில், வேப்பூர் ஆகிய இடங்களில் பரிவர்த்தனைக் கூடங்கள், உலர் களங்கள், சேமிப்புக் கிடங்குகள் போன்ற வசதிகள் மொத்தம்
22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒன்றிய, மாநில அரசு நிதியில் அமைக்கப்படும்.

மேலும், சேலம் மாவட்டம் சங்ககிரி, காடையாம்பட்டி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நாமக்கல் ஆகிய இடங்களில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு புதிய கட்டமைப்பு வசதிகள், ஈரோடு மாவட்டம், சிவகிரி, புஞ்சை காளமங்கலம், எழுமாத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம் மலையடி பாளையம், நெகமம், காரமடை, ஆனைமலை ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு கூடுதல் சேமிப்புக் கிடங்குகள் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விற்பனைக் குழு நிதியில் அமைக்கப்படும்.

ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமிப்புக் கிடங்குகளை மறு கட்டமைப்பு செய்தல் 

காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 22 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள 27 சேமிப்புக் கிடங்குகளில் 34,000 மெட்ரிக் டன் கொள்ளளவு ஏற்படும் வகையில், வரும் ஆண்டில்
54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் மறு கட்டமைப்பு மேற்கொள்ளப்படும். 

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களைப் புதுப்பித்தல்

விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நாடும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் அதிக வரத்துள்ள 100 விற்பனைக் கூடங்களில் உள்ள கட்டமைப்பு வசதிகள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விற்பனைக்குழு நிதியில் புதுப்பிக்கப்படும்.

புவிசார் குறியீடு பெறுதல் 

ஒவ்வொரு மண்ணுக்கும், ஒவ்வொரு மகத்துவம் இருக்கிறது. தட்பவெப்ப நிலை, பெய்யும் மழை, அடிக்கும் காற்று, படரும் வெளிச்சக் கதிர்கள் ஆகியவற்றைப் பொறுத்து, சுவை பகுதிக்குப் பகுதி வேறுபடுகிறது. தமிழ்நாட்டுக்கே உரிய வேளாண் பொருட்கள் எண்ணற்றவை இருக்கின்றன.
ஒரு மாவட்டத்தில் விளைகிற மாதிரி, மற்றொரு மாவட்டத்தில் அவை விளைவது இல்லை.  அத்தகைய சிறப்பு வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று உலகளாவிய சந்தையில் இடம்பெறச் செய்வதன்மூலம் அவற்றின் மதிப்பு அதிகரிக்கிறது.  கடந்த ஆண்டில், சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம் உள்ளிட்ட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

இதேபோன்று, வரும் ஆண்டிலும், கிருஷ்ணகிரி  அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, தஞ்சாவூர் பேராவூரணி தென்னை, மூலனூர் குட்டை முருங்கை, சாத்தூர் வெள்ளரி, தஞ்சாவூர் வீரமாங்குடி அச்சுவெல்லம், தூத்துக்குடி விளாத்திகுளம் மிளகாய், கடலூர் கோட்டிமுளை கத்திரி, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்புகவுணி அரிசி ஆகிய பத்து பொருட்களுக்கு புவிசார் குறியீடு 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  பெற திட்டமிடப்பட்டுள்ளது.  

உழவர் சந்தைகளைப் புதுப்பித்தல் 

உழவர் சந்தைகள், உற்பத்தி செய்பவரே, விற்பனை செய்வதற்கான தாழ்வாரமாகத் திகழ்ந்து வருகின்றன. குறைந்த விலையில் பசுமை மாறாத காய்கறிகளை வாங்கும்பொழுது, நுகர்வோர் முகத்தில் மகிழ்ச்சி; பகர்வோர் விழிகளில் நெகிழ்ச்சி.  கடந்த இரண்டு ஆண்டுகளில் 100 உழவர் சந்தைகள் தமிழ்நாட்டில் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகின்றன. இதனால், உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள், பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து, சராசரியாக நாளொன்றுக்கு 8,000 விவசாயிகள், மூன்று இலட்சம் நுகர்வோர் பயனடைந்து வருகின்றனர். 

வரும் ஆண்டு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகளுக்கு அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிப்பறை வசதி, கடைகள் புனரமைப்பு,   நடைபாதை வசதிகள் போன்ற பணிகள் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். மேலும், 50 உழவர் சந்தைகளுக்கு 25 இலட்சம் ரூபாய் ஒதுக்கி, உணவு பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையத்தின் சான்று (FSSAI Certificate) பெற வரும் ஆண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தொன்மை சார் உணவகங்கள்

உழவர் சந்தைக்கு அதிகாலையிலேயே உழவர்கள் காய்கறி மூட்டையோடும், கீரைக் கட்டோடும் வந்து விடுகிறார்கள். மதியம் வரை அவர்கள் தங்கள் காய்கறிகளையும், பழங்களையும் விற்பனை செய்து களைத்துப் போகிறார்கள்.  அவர்கள் தங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ளும் வகையிலும், வயிற்றை நிரப்பிக் கொள்ளும் வகையிலும் தமிழ்நாட்டுக்கே உரிய தொன்மை மிக்க ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானியக் கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகள் போன்ற உணவுகளை வழங்கவும், வருகிற நுகர்வோர்கள் அவற்றை அருந்தி, விழிப்புணர்வு பெறவும், முதல் கட்டமாக 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள் தனியார் பங்களிப்புடன் உருவாக்கப்படும்.

மின்னணு தேசிய வேளாண் சந்தை (இ–நாம்) – விரிவுபடுத்துதல்

தமிழ்நாட்டில் உள்ள 284 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில்  127 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் (eNAM) இணைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் விளைபொருளின் தரமறிந்து மறைமுக ஏலத்தில் அதிக அளவில் வணிகர்கள் பங்கு கொள்வதால் இலாபகரமான விலை கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, ஆறு இலட்சம் விவசாயிகள் இத்தளத்தின் மூலம் 1,700 கோடி ரூபாய் மதிப்பிலான 10 இலட்சம் மெட்ரிக் டன் விளைபொருட்களை பரிவர்த்தனை செய்துள்ளனர். வரும் ஆண்டில், மேலும்
30 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்துடன் இணைக்கப்படும்.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் செங்காந்தள் மலர் விதைகள் (கண்வலிக்கிழங்கு விதைகள்) வர்த்தகம் 

செங்காந்தள் மலர் அதிகம் சாகுபடி செய்யப்படும் திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, திருச்சிரப்பள்ளி, கரூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், சேலம் ஆகிய மாவட்ட விவசாயிகள் விளைவிக்கும் செங்காந்தள் மலர் விதைகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் வர்த்தகம் செய்ய நடவடிக்கை  மேற்கொள்ளப்படும். 

நவீன சிப்பம் கட்டுதல், வேளாண் ஏற்றுமதிக்கான பயிற்சிகள் 

உற்பத்தி செய்த தரமான பொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்த ஏதுவாக, சிப்பம் கட்டுதல் (Packaging) குறித்த சிறப்பு பயிற்சி சென்னை, பெருங்குடியில் உள்ள இந்திய சிப்பம் கட்டுதல் நிறுவனத்தின் (Indian Institute of Packaging) வாயிலாக 154 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. இதனை விரிவுபடுத்தும் முயற்சியாக, மேலும் 164 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு
15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயிற்சி வழங்கப்படும்.  மேலும், ஏற்றுமதி மூலம் கூடுதல் வருவாய் பெறவும் சந்தை வாய்ப்புகளை அதிகப்படுத்தவும், மாநில அளவிலான பத்து கருத்தரங்குகள் 50 இலட்சம் ரூபாய் செலவில் நடத்தப்படும்.

மின்னணு மாற்றத்தகு கிடங்கு இரசீது 

தமிழ்நாட்டில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள  150 சேமிப்பு கிடங்குகள் வலுப்படுத்தப்பட்டு, கிடங்கு மேம்பாடு-ஒழுங்குமுறை ஆணையத்தின் (Warehousing Development and Regulatory Authority) அங்கீகாரம் பெற்று, வரும் ஆண்டில் மின்னணு மாற்றத்தகு கிடங்கு இரசீது (e Negotiable Warehouse Receipts) முறை கொண்டுவரப்படும். இதன் மூலம், இந்தச் சேமிப்புக் கிடங்குகளில் விவசாயிகள் விளைவித்த விளைபொருட்களையும், வியாபாரிகள் கொள்முதல் செய்த விளைபொருட்களையும் சேமித்து, அவற்றின் மதிப்புக்கு ஏற்ப, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 80 சதவிகிதம் வரை கடன் உதவி பெற வழிவகை செய்யப்படும்.  

மேலும், கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் கடலூர், திண்டுக்கல், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 31,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 25 குளிர்பதனக் கிடங்குகளுக்கும் கிடங்கு மேம்பாடு-ஒழுங்குமுறை ஆணையத்தின் (WDRA) அங்கீகாரம் பெற்று மின்னணு மாற்றத்தகு கிடங்கு இரசீது பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கொப்பரைத் தேங்காய் கொள்முதல்

விளைபொருட்களின் அறுவடை காலத்தில், சந்தை வரத்து அதிகரிப்பதனால் ஏற்படும் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும்பொருட்டு, ஒன்றிய அரசின் "விலை ஆதரவுத் திட்டம்" தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 

இத்திட்டத்தின்கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில்,
420 கோடி ரூபாய்  மதிப்பிலான 40,000 மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காய் 33,500 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வரும் கொள்முதல் பருவத்தில், 640 கோடி ரூபாய் மதிப்பிலான 56,000 மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காயினை ஒன்றிய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் (Minimum Support Price) தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்துடன் (NAFED) இணைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 

பல்வேறு பயிர்களின் பரிசோதனைக் கூடமாக, புதிய இரகங்களை வெளியிடுகிற ஆராய்ச்சிக் கூடமாக, தொழில்நுட்பங்களை மெருகேற்றும் விஞ்ஞானக் கூடமாக, உழவர்களுக்கு விரிவாக்கம் செய்ய உதவும் அறிவியல் மன்றமாக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் திகழ்ந்து வருகிறது. இங்கு வரும் மாணவர்களை, சிற்பங்களாகச் செதுக்கியும், கவிதைகளாக வடித்தும்,  ஓவியங்களாகத் தீட்டியும் மேம்படுத்துகிற மேன்மைமிக்க பல்கலைக்கழகமாக இது உலக அரங்கில் ஒப்பற்று விளங்குகிறது. எண்ணற்ற அறிவியல் அறிஞர்களை இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கியிருக்கிறது. 1971 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்டு, இரண்டு கல்லூரிகளுடன் தளிராக முளைவிடத் தொடங்கிய இப்பல்கலைக்கழகம், இன்று 18 அரசு உறுப்புக் கல்லூரிகள், 28 தனியார் இணைப்புக் கல்லூரிகள்,
40 ஆராய்ச்சி நிலையங்கள், 15 வேளாண் அறிவியல் நிலையங்கள் என்று ஆல் போல் தழைத்து, செழித்து, நிழல் பரப்பி வருகிறது. அனைத்துப் பரிமாணங்களிலும் வளர்ச்சியடைந்து உலகளாவிய ரீதியில் இது புகழ்மிக்க கல்வி நிறுவனமாகத் திகழ்கிறது. இப்பல்கலைக்கழகத்திற்கு, வரும் ஆண்டு 530 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு நிரந்தர மூலதன வைப்பு நிதி

வெளிநாட்டில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களைப் போலவும், இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தைப் போலவும், முன்னோடி ஆராய்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த, இப்பல்கலைக்கழகத்திற்கு
100 கோடி ரூபாய் நிரந்தர மூலதன வைப்பு நிதியாக வழங்கப்படும். இத்தொகைக்கு நிகராக தனியார், நிறுவனங்கள், அமைப்புகளிடமிருந்து பங்களிப்புத்தொகையினை ஈர்த்து, அத்தொகையை அப்படியே சேமித்து வைத்து, கிடைக்கும் வட்டியை தமிழ்நாட்டில் அவ்வப்போது ஏற்படும் முக்கிய வேளாண் பிரச்சினைகளுக்கு ஆராய்ச்சி மூலம் தீர்வு காண, திட்டங்களைச் செயல்படுத்தவும், முன்னோடி ஆராய்ச்சித் திட்ட செலவினங்களை பல்கலைகழக நிதிக்குழுவின் ஒப்புதலுடன் மேற்கொள்ளவும் இத்தொகை பயன்படுத்தப்படும்.

பூச்சிகள் அருங்காட்சியகத்தை மேம்படுத்துதல் 

பூச்சிகளே உலகில் அதிகமாக இருக்கும் உயிரினங்கள். இன்னும் சொல்லப்போனால் பூச்சிகள் உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கு, நாம் அணிந்துகொள்ள பட்டாடை தருவதும் பூச்சிகள்; மெழுகைத் தருவதும் பூச்சிகள்; முத்திரையிட அரக்கைத் தருவதும் பூச்சிகள்; மலர்களில் மகரந்த சேர்க்கை செய்து வீரிய இரகங்களை விளைவிக்க உதவுவதும் பூச்சிகள்; உண்ண தேன் தருவதும் பூச்சிகள். பூச்சிகள் இல்லாத உலகத்தை கற்பனை செய்து பார்க்க இயலாது. பட்டாம்பூச்சிகளின் சிறகசைத்தலும், தேனீக்களின் ரீங்காரமும், வண்டுகளின் ஓசையும் இல்லாத உலகம் வெறுமையாகக் காட்சியளிக்கும். அது அலை இல்லாத கடல்; குலையில்லாத தென்னை; தலையில்லாத உடல்; இலை இல்லாத மரம்; கலை இல்லாத இடம்; சுளையில்லாத கனி, தளை இல்லாத செய்யுள். 

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கோயம்புத்தூர் வளாகத்தில் பல்வேறு விதமான பூச்சிகள் சேகரிக்கப்பட்டு, அருங்காட்சியகம் ஒன்று அருமையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. பூச்சிகளைப் பற்றிய புரிதல் இருந்தால்தான் அவற்றின்மூலம் ஏற்படுகிற நோய்களையும் கட்டுப்படுத்த முடியும். உழவர் பெருமக்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் பூச்சிகளைப் பிரித்து அடையாளம் காணும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தைக் கணினிமயமாக்கும் பணி கட்டாயம் அவசியம். இந்த மையத்தை மெருகேற்றவும், மேம்படுத்தவும், மேலும் கட்டமைப்புகளை உருவாக்கவும் மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

தாவரவியல் பூங்காவினைச் சீரமைத்தல் 

கோவை மாநகரத்தில் புகழ்பெற்றுத் திகழ்வது பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்கா. முகலாய தோட்டம், ஜப்பானிய தோட்டம், கருங்கல் தோட்டம், தாவர வடிவமைப்பு, கிளைவிட்ட பனைமரம் என்று பலவிதமான அம்சங்களைக் கொண்ட இத்தாவரவியல் பூங்கா, பலருக்கும் இளைப்பாறுதல் தரும் இயற்கையின் அழைப்பு; இனிமையின் தொகுப்பு; பொழுதுபோகாதவர்களும் மனதைப் பழுதுபார்க்க உதவும் பூங்காற்று தாலாட்டும் பூங்கா. மாணவர்கள் மலர்களைப் பற்றியும், அலங்கார செடிகளைப் பற்றியும் அறிந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். இங்கு பகல் நேரத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் பூச்சிகளைப் பிடிக்கவும், தாவரங்களைப் பற்றி அறியவும் தவம் இருப்பதைப் பார்க்கலாம். அரிய வகைத் தாவரங்களைப் பாதுகாப்பதும், அறிவியல் பூர்வமான மலரியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதும், பூங்காவின் முக்கிய நோக்கம். இந்தத் தாவரவியல் பூங்கா மிகவும் பழமையானது. இதில் அரிதான, அழிவின் விளிம்பில் உள்ள தாவர பல்லுயிர் செல்வத்தை மேம்படுத்தவும், பல்வகை சிறப்பு வாய்ந்த பூங்காக்களை நிறுவவும், தொழில் முனைவோர் பயிற்சிகளை அளிக்கவும் உதவியாக இருக்கும்பொருட்டு, இதைச் சீரமைக்க, வரும் ஆண்டில் ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

வேளாண்மையில் நானோ தொழில்நுட்பம்

வேளாண்மையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தவல்லதாக நானோ தொழில்நுட்பம் அறியப்பட்டுள்ளது. உரம், நுண்ணூட்டம், பூச்சிக்கொல்லி, விளைபொருளின் தரமறிதல், சேமிப்பு காலத்தை அதிகரித்தல் ஆகியவற்றில் நானோ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. நானோ யூரியா ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, ட்ரோன் தொழில்நுட்பத்துடன் சேர்த்துப் பரவலாக்கப்பட்டு வருகிறது.  

நானோ தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான செயல்பாடுகள், பொருட்கள் மூலம் வேளாண்மையிலுள்ள தீர்க்கப்படாத சவால்களுக்குத் தீர்வு காணும் வண்ணம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நானோ தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு வேர்வளர்ச்சி, வறட்சியைத் தாங்குதல், நுண்ணூட்டமளித்தல், விளைபொருட்களின் வாழ்நாளை அதிகரித்தல் ஆகியவற்றுக்கான பல நானோ தயாரிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு நானோ தொழில்நுட்பம் குறித்து விவசாயிகள் அறியும் வண்ணம் வேளாண் அறிவியல் நிலையம் (KVK), அட்மா திட்டம் (ATMA) ஆளில்லா வானூர்திக் கழகம் (Unmanned Arial Vehicle Corporation) மூலம் செயல்விளக்கங்கள் செய்து காண்பிக்கப்படும்.

வாழை ஆராய்ச்சி நிலையம் அமைத்தல் 

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, இராமநாதபுரம், தூத்துக்குடி விருதுநகர் உள்ளிட்ட ஆறு தென் மாவட்டங்களில் வாழை 22,000 எக்டரில் பயிரிடப்படுகிறது. வாழையின் பரப்பு தமிழ்நாட்டில் அதிகரித்து வந்தாலும் அதன் உற்பத்தித்திறன் குறைந்து வருகிறது. தென் மாவட்ட விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வாழை இரகங்களை சேகரித்து, உரிய இரகங்களைத் தேர்வு செய்து, பகுதிகேற்ற வாழை இரகங்களை உருவாக்கி அவற்றை விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்வதை உறுதி செய்யும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் வாழைக்கென ஒரு தனி ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும். இதற்கென 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

வட்டாரத்திற்கு ஒரு வேளாண் விஞ்ஞானி பொறுப்பு அலுவலராக நியமனம்

வேளாண், தோட்டக்கலைப் பயிர்களில், புதிதாக வெளியிடப்பட்ட உயர் மகசூல் இரகங்கள், சாகுபடித் தொழில்நுட்பங்கள், பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான பயிர்ப்பாதுகாப்பு முறைகள், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, நவீன இயந்திரங்கள், மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கான உத்திகள் போன்ற அனைத்து தகவல்களையும் விஞ்ஞான ரீதியிலான ஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்குவதற்காக, வேளாண் கல்லூரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள் அல்லது வேளாண் அறிவியல் நிலையங்களிலிருந்து ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு வேளாண் விஞ்ஞானி பொறுப்பு அலுவலராக நியமிக்கப்படுவார். 

உழவர் உற்பத்தியாளர் நிறுவன வளர்ச்சிக்கு பல்கலைக்கழக உதவி

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை வணிக ரீதியாக ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் மூலம் இணைப்புத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில், பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறைகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் நிலையங்கள் ஒவ்வொன்றும், தலா ஒரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து அக்குழுவுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் அடிப்படைத் தகவல்களைத் திரட்டி, ஒவ்வொரு நிலையமும் ஒரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, இந்நிறுவனங்களுக்குத் தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக திட்டம் ஒன்று வகுத்து, மதிப்பு கூட்டுதல் பற்றி பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன், இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை வணிகர்கள், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்களுடன், ஒருங்கிணைத்து உற்பத்தியாளர்-கொள்முதலாளர் இணைப்புக் கூட்டங்கள் நடத்தி, சந்தை வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரப்படும்

 கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்பு

அ) கூட்டுறவு பயிர்க் கடன் 

2022-23 ஆம் ஆண்டில் இது வரை 16 இலட்சத்து
43 ஆயிரம் விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம்
12,648 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டு சராசரியைவிட 89 சதவீதம் அதிகமாகும். வரும் ஆண்டில் 14,000 கோடி ரூபாய் அளவிற்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும். அதேபோல் ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கூட்டுறவு கடனாக 1,500 கோடி ரூபாய் அளவில் வழங்கப்படும்.

ஆ) நேரடி நெல் கொள்முதல்

2022-23 குறுவை, சம்பா கொள்முதல் பருவத்தில் (KMS) இதுவரை 3 இலட்சத்து 73 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து
27 இலட்சத்து 23 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 5,778 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், வரும் ஆண்டு நெல் கொள்முதல் செய்ய சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்குக் கூடுதலாக 100 ரூபாயும், பொதுரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்குக் கூடுதலாக
75 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இ) தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண் இயந்திரங்கள்

கிராமங்கள் தோறும் வேளாண் இயந்திரங்கள் தடையின்றிக் கிடைக்க ஏதுவாக, தமிழ்நாட்டில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் பகுதிகேற்ற வேளாண் இயந்திரங்கள் வாங்கப்பட்டு விவசாயிகள் தேவைக்கேற்ப இ-வாடகை செயலியுடன் இணைத்து வாடகைக்கு விடப்படும். இதற்கென 500 கோடி ரூபாய் நபார்டு வங்கி உதவியுடன் ஒதுக்கீடு செய்யப்படும்.

நீர்வளத் துறை 

பைந்தமிழ் இலக்கியத்திலேயே நீர்நிலை அமைப்பது குறித்த குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. வானம் விருப்பப்படும் போதெல்லாம் பொழிவது இல்லை. பருவமழை வருகிறபோது நீரைத் தேக்கவும், சிறிது சிறிதாகப் பயன்படுத்தவும் கற்றவர்கள், நம் தமிழர்கள். அவர்கள் ஆறுகளின் குறுக்கே அணைகளை அமைத்தார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லணை இன்றும் நீர்வள மேலாண்மையில் அதிசயமாகவே அமைந்திருக்கிறது. மழை பொழிகிறபோது ஏரிகளையும், குளங்களையும் வலிமை பெற்ற இளைஞர்கள் கரையில் நின்று காவல் காத்ததாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. நீர்வளத் துறை, வயல்களில் நீர் வார்த்து, உழவர்களின் நெஞ்சில் பால் வார்த்து, இளைப்பாற வைக்கின்ற இனிய துறை. 

அத்துறையின்மூலம் கால்வாய்கள் சீரமைப்பு, ஏரிகள் புனரமைப்பு, அணைக்கட்டுகள் புதுப்பித்தல், மழைநீர் சேகரிப்பு போன்ற எண்ணற்ற திட்டங்கள் உழவர்களையும் உள்ளடக்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டில் காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்களில் தூர்வாரும் பணிகள் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

கால்நடை பராமரிப்பு 

வான் பொய்க்கும்போது, தான் பொய்க்காத தன்மை கொண்டவை கால்நடைகள்.  பயிர் பாழாகும்போதெல்லாம் உழவர்களின் வயிற்றில் பால் வார்க்கின்றன அவை. உழவர்களின் பண்ணைக்குச் சென்றால், அங்கு மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளும், கட்டப்பட்டிருக்கும் பசுக்களும், உழவு செய்யும் எருதுகளும், மேய்ந்து கொண்டிருக்கும் கோழிகளும் அந்தக் காற்று மண்டலத்தையே நறுமணம் ஆக்கிவிடுகின்றன. அவற்றின் சாணம்கூட எருவாக மண்ணைப் பதப்படுத்தி கொண்டிருக்கிறது.  செம்மறி ஆடுகள், பணம் தரும் மேழிச் செல்வங்களாக இருக்கின்றன.

மேய்ச்சல் நிலங்கள் குறைந்து வருகிற காரணத்தாலும், மேய்க்கால் புறம்போக்குகள் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாலும், கலப்பினப் பசுக்களின் தீவனத் தேவை அதிகரித்து இருப்பதாலும், ஊட்டச்சத்து மிகுந்த தீவனங்களை அவற்றிற்கு தரவேண்டும் என்கிற நிலை உருவாகியிருப்பதாலும், பெருமளவுக்கு சத்து மிகுந்த தீவனப் பயிர்களை உற்பத்தி செய்வது தற்போது முக்கியமாக கருதப்படுகிறது. தீவன உற்பத்தி, பாதுகாப்பு முறைகள், மேய்ச்சல், பண்ணை இயந்திரமயமாக்கல் போன்றவற்றில் சமீபத்திய தொழில்நுட்பம் குறித்து 60 வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் செலவில் பயிற்சி வழங்கப்படும். 

மேலும், பசுந்தீவன உற்பத்தியினை அதிகரிக்க தோட்டங்களில் பசுந்தீவனப்பயிரை ஊடுபயிராகப் பயிரிட ஊக்குவிக்கும் வகையில் 60 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.

மீன் வளம்:

நாட்டின மீன் வகைகளை அழியாமல் பாதுகாத்திடும் நோக்கில், சேல்கெண்டை, கல்பாசு, இந்திய பெருங்கெண்டை மீன் போன்ற நாட்டின மீன் குஞ்சுகளை தமிழ்நாட்டின் காவிரியாறு, பவானியாறு, தாமிரபரணி மற்றும் அதன் கிளை ஆறுகளில் நன்கு வளர்ந்த 40 இலட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்படும். இவ்வாறு ஆறுகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்படுவதன் மூலம் நாட்டின மீன் வகைகளின் உற்பத்தி அதிகரிக்கும். ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தபடுவதன் மூலம் ஆறுகளில் மீன் உற்பத்தி அதிகரிப்பதுடன் ஆறுகளைத் தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள உள்நாட்டு மீனவர்களின் வருமானம் அதிகரிக்கும். 

ஊரக வளர்ச்சி:

வேளாண் வளர்ச்சியும், சிற்றூர்களின் வளர்ச்சியும் முன்னேற்ற வண்டியின் இரட்டை மாடுகள். ஒன்றை ஒன்று சார்ந்தவை. வயலைச் செதுக்கி வீட்டைச் செதுக்கும் நிகழ்வினை சிற்றூர்களில் காணலாம். வேலை வாய்ப்பு, இயற்கை வள மேம்பாடு, மகளிர் வாழ்வாதார முன்னேற்றத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் பங்கு மிக முக்கியமானது.  

அ) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் (MGNREGS)

வரும் ஆண்டில், 6,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இயற்கை வள மேலாண்மைப் (NRM) பணிகளான தடுப்பணை, பண்ணைக் குட்டைகள், கசிவு நீர்க்குட்டைகள், புதிய குளங்கள், கால்வாய்களைத் தூர்வாருதல் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பணிகள், கல் வரப்பு, மண் வரப்பு, தனிநபர் கிணறு, சமுதாயக் கிணறு, பால் சேகரிப்பு மையம், உணவு தானியக் கிடங்கு, தோட்டக்கலைப் பயிர்கள் பயிரிட 19,400 பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

விவசாய விளைபொருட்களை விவசாயிகளின் வயல்களில் இருந்து அருகிலுள்ள சந்தைக்குக் கொண்டு செல்வதை மேம்படுத்துவதற்காகவும், வேளாண்மைக்கு இயந்திரங்களைக் கொண்டு செல்வதற்காகவும் வரும் ஆண்டில் 710 கோடி ரூபாய் செலவில் கிராமப் பஞ்சாயத்துகளில்
2,750 கிலோமீட்டர் நீளத்திற்கு ஊரகச் சாலைகள்  அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் ஆண்டில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-II-ல் 368 கோடிரூபாய் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம், சேமிப்புக் கிடங்கு, பால் சேகரிப்பு மையம்,
சிறு பாசனத் தொட்டிகள், குளங்கள், ஊருணிகளின் புத்தாக்கம், புனரமைப்பு ஆகியவற்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

ஆ) தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் 

வரும் ஆண்டில், சிறுதானியப் பயிர்கள் சாகுபடி, மதிப்புக்கூட்டுதல், பயன்பாட்டினை அதிகரிக்கும் வகையில், சுய உதவி குழு உறுப்பினர்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம்
40 சிறுதானிய தொகுப்புகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் நிதி உதவி தந்து ஊக்குவிப்பதற்காக, அரசு 40 இலட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கும். மேலும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ’மதி-பூமாலை’ வளாகத்திலும் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்காக, சிறுதானிய சிற்றுண்டி உணவகம் (Millet Cafe) உருவாக்கப்படும்.

குடும்ப வருமானத்தை உயர்த்தும் வகையில், அந்தந்த பகுதியில் கிடைக்கும் இயற்கை வள ஆதாரங்களை உரிய முறையில் பாதுகாத்து, ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.   வரும் ஆண்டில் தலா 40 இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் வகையில்
44 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். 

அங்ககத் தேன் உற்பத்தி, மூலிகைத் தோட்டம் அமைத்தல் ஆகியவை கிராமப்புரங்களில் முக்கியமான வாழ்வாதாரப் பணிகளாக விளங்கி வருகின்றன. சுய உதவிக் குழுக்கள் இடையே தேன் உற்பத்தி, மதிப்புக்கூட்டுதல் போன்ற பல்வேறு பணிகளை ஒருங்கிணைத்து ”மதி” என்னும் வணிகக் குறியீட்டில் விற்பனை செய்வதற்காக தமிழ்நாடு மாநில கிராமப்புர வாழ்வாதார இயக்கம், தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறையுடன் இணைந்து பணியாற்றும். 

எரிசக்தி

வேளாண்மைக்கான பாசன நீரினை அளித்து பயிரைக் காப்பதில் இத்துறையின் பங்கு இன்றியமையாதது. உழவர் பெருமக்களுடைய நீர்ப் பாசன வசதியை மேம்படுத்துவதற்காக 23 இலட்சம் இலவச மின் இணைப்புகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்குத் தேவையான கட்டணத் தொகையாக, சுமார் 6,536 கோடி ரூபாய் நிதியினை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு அரசு வழங்கும். 

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை  வளர்ச்சித்  திட்டத்தின் தரிசுநிலத் தொகுப்புகளில் அமைக்கப்படவுள்ள ஆழ்துளை/ திறந்தவெளிக் கிணறுகளுக்கும், ஆதிதிராவிட/ பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆழ்துளைக் கிணறுகளுக்கும் மொத்தம் 600 மின் இணைப்புகள் நடப்பாண்டைப் போலவே வரும் ஆண்டிலும் வழங்கப்படும்.

வருவாய், பேரிடர் மேலாண்மை 

விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பலன்களை விவசாயிகள் எளிதில் பெறும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளின் புள்ளிவிவரங்கள், சாகுபடி நில விபரம் மின்னணு முறையில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், சர்வே எண் வாரியாக விவசாயிகள் தங்கள் மண் வளத்தை அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து விவரங்களும் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றன. பயிர் சாகுபடி விவரங்களை மின்னணு முறையில் எவ்வித விடுதலும் இன்றி பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை இவ்வரசு எடுக்கும். 

வனத்துறை

அ) வனவிலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதம் குறித்து ஆராய்ந்து தீர்வு காண தனிக்குழு 

தற்போது, மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில், யானை, காட்டுப் பன்றி, மான், போன்ற வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைக் காப்பது என்பது விவசாயிகளுக்குப் பெரும் சவாலாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, இத்தகைய வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பது, சட்டவிதிகளுக்கு உட்பட்டு, வனத்துறை மூலம் அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் ஆராய்வதற்கு கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் (வனவிலங்குகள்) தலைமையில் தனிக்குழு ஒன்று அமைக்கப்படும். இக்குழுவில், வனத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை அலுவலர்களும், விவசாயிகளும் இடம்பெறுவார்கள். இக்குழு, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, விவசாயிகளைச் சந்தித்து, சட்ட நிபுணர்களையும் கலந்தாலோசித்து, இதற்கான தீர்வு குறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.

ஆ) தமிழ்நாடு அரசு, பசுமைத்தமிழக இயக்கத்தின் கீழ், வேளாண் காடு வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் மதிப்புமிக்க மரக்கன்றுகளான சந்தனம், செம்மரம், தேக்கு, ஈட்டி போன்றவைகளை இலவசமாக வழங்கி வருகிறது. இம்மரங்கள் நன்கு வளர்ந்து பயன் தரும் வேளையில் மரங்களை வெட்டுவதில் சில நடைமுறைச் சிக்கல்களை விவசாயிகள் எதிர்கொள்கிறார்கள்.  எனவே, வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் சாகுபடி நிலங்களில் மரக்கன்றுகளை நட்டு, மரம் வெட்டும் வழிமுறைகள் எளிதாக்கப்பட்டு விவசாயிகள் வேளாண் காடுகளின் மூலம் கிடைக்கும் வருமானத்தை பெறுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்

பட்டு வளர்ச்சி

பட்டு வளர்ப்பு மூலம் கிடைக்கும் அதிக வருவாய் அதிக அளவில் விவசாயிகளை பட்டு வளர்ப்பின்பால் திருப்பியுள்ளது. இதனை ஊக்குவிக்கும் விதமாக, வரும் ஆண்டில் மானாவாரி மேம்பாட்டுத்திட்டத்தில் 50 இலட்சம் மதிப்பீட்டில் 250 ஏக்கரில் மர மல்பரியும், 100 எண்ணிக்கையில் மண்புழு உரக்கூடங்களும் அமைக்கப்படும். நுண்ணீர்ப் பாசனத்திட்டத்தில், மல்பரித் தோட்டங்களில் சொட்டுநீர்ப்பாசன அமைப்புகள் நிறுவப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்

அ) உணவு பதப்படுத்துதல், வேளாண் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான தலைமை அமைப்பாக செயல்படும் பொருட்டு தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல், வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (TN-ApEx) இலாப நோக்கமற்ற நிறுவனமாக உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமந்திரியின் உணவு பதப்படுத்துதலுக்கான குறு நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டத்தில், வரும் ஆண்டில் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் அமைக்கும் தனிநபர்களுக்கும் குழுக்களுக்கும் மானிய உதவி, சுயஉதவிக்குழுக்களுக்கு ஆதார மூலதனம், பொதுவான கட்டமைப்புகள் ஆகியவற்றுக்காக 160 கோடி ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கப்படும்.

ஆ) காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் 

சென்ற வேளாண் நிதிநிலை அறிக்கையில் திருச்சி-நாகப்பட்டினத்திற்கு இடைப்பட்ட பகுதி வேளாண் தொழில் பெருந்தடமாக அறிவிக்கப்பட்டு, காவிரி டெல்டா மாவட்டங்களில், உழவர்களுக்கு அதிக வருமானம் ஈட்டவும், இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், வேளாண் தொழில் பெருந்தடத்தினை அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வேளாண் சார்ந்த உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளைத் தொடங்க முன் வரும் தொழில் முனைவோருக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகுப்பும், சந்தை இணைப்புகள், வல்லுனரின் வழிகாட்டுதல்கள், ஒற்றைச் சாளர முறை வசதிகள் உருவாக்கித் தரப்படும். சேமிப்பு, பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதலை திறம்பட மேற்கொள்ளும் வகையில். பொது வசதிகளுடன் புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் தொழில்நுட்ப புத்தொழில்களை வளர்ப்பதற்காக தஞ்சாவூரில் புதிய வட்டார புத்தொழில் மையம் ஒன்று தமிழ்நாடு புத்தொழில்-புத்தாக்க இயக்கம் மூலம் உருவாக்கப்படும். இந்த வேளாண் தொழில் பெருவழி தடத்தின் மூலம் வேளாண்மை சார்ந்த பல்வேறு துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்துத் திறம்பட செயல்படுத்தும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில்
1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் தொழில் பெருந்தட திட்டம் செயல்படுத்தப்படும். 

இ) தமிழ் நாடு உணவுப் பதப்படுத்தும் கொள்கையின் கீழ் (TNFPP-2018) தனியார் தொழில்முனைவோருக்கு பல்வேறு சலுகைகள், ஊக்கத்தொகை மற்றும் மானியங்கள் வழங்கப்படுகின்றன. இக்கொள்கை வரும் ஆண்டில் மறுசீரமைக்கப்படும்.

2023-24 ஆம் ஆண்டில் வேளாண்மை, அதன் தொடர்புடைய துறைகளான கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, நீர்வள ஆதாரத்துறை, எரிசக்தி, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவு, உணவுத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் மானிய கோரிக்கைகளின் கீழ் 38 ஆயிரத்து 904 கோடியே 46 இலட்சத்து ஆறு ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Also Read: ”பள்ளிக்கூடத்துக்கு வாங்க பிள்ளைகளா”.. ’அசுரன்’ பட வசனத்தை பிரதிபலிக்கும் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்!