Tamilnadu
ரூ. 4 கோடியில் 200 இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில்கள்.. வேளாண் நிதிநிலை அறிக்கையில் தகவல்!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 9ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. பின்னர் ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெற்றது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரைநிகழ்த்தினார். பின்னர் அந்தக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் 2023-2024ம் நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மின்னணு வடிவிலான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இதையடுத்து இன்று வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வாசித்து வருகிறார். அதன் விவரம் வருமாறு:-
வேளாண்மை மற்றும் தோட்டக்கலையில் பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்காக ரூ.2 லட்சம் வீதம் நிதியுதவி வழங்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்திற்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விதை உரிமம், உர உரிமம், பூச்சி மருந்து உரிமம் ஆகியவை வழங்கப்படும்.
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வரும் ஆண்டில் ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 60 ஆயிரம் வேளாண் கருவிகள் தொகுப்பு விநியோகம் செய்யப்படும்.
அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க, பாரம்பரிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் 32 மாவட்டங்களில் 14,500 எக்டர் பரப்பில், 725 தொகுப்புகள் உருவாக்கப்படும். இத்திட்டத்திற்கு ரூ. 26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இயற்கை இடுபொருள் தயாரித்தல் மையம் அமைக்க ஒரு லட்சம் ரூபாய் வீதம் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
செம்மரம், சந்தனம், தேக்கு, ஈட்டி போன்ற உயர் மதிப்புள்ள மரக்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இதற்கு ஒன்றிய மாநில அரசு நிதியிலிருந்து ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்படும்.
உயர் மதிப்பு வேளாண் இயந்திரங்கள் உள்ளிட்ட விவசாய கருவிகளுக்கு 20% கூடுதல் மானியம். ஆதிதிராவிட சிறு குறு விவசாயிகளுக்கு 10 கோடி ரூபாயும், பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு 1 கோடி ரூபாயும் ஒதுக்கீடு.
37 மாவட்டங்கள், 385 வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பெறும். வேளாண் இடுபொருள்களுக்கு பணமில்லா பரிவர்த்தனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!