Tamilnadu

ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த வங்கி துணை மேலாளர்.. வாடிக்கையாளர்களின் 34 லட்சத்தை சுருட்டி மோசடி !

அண்மைக்காலமாக சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி போய் இருக்கின்றனர். அதில் முதன்மை வாய்ந்ததாக PUBG விளையாட்டு இருந்ததால், அதனை இந்திய அரசு தடை விதித்திருந்தது. அதற்கு அடுத்தபடியாக பார்த்தோமானால், அது ஆன்லைன் ரம்மில் சூதாட்டம் விளையாட்டு தான்.

சூதாட்டம் என்பது நமக்கு மட்டுமின்றி நம்மை சேர்ந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதற்கு அரசு தடை விதித்திருந்தது. ஆனால் அண்மைக்காலமாக இந்த சூதாட்டம் ஆன்லைன் வழியாக பல மக்களின் வாழ்க்கைக்கும் நுழைந்துவிட்டது. இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் பல மக்கள் கொலை, கொள்ளை, தற்கொலை என்று தனது நேர்கோட்டான வாழ்க்கையில் இருந்து திசைதிருப்பி போகின்றனர்.

இதனால் இதை தமிழ்நாடு அரசு தடை விதிக்க பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கோரிக்கை எழுந்த நிலையில், இதற்கு தடை விதிப்பதற்காக ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு மும்முரமாக செய்து வரும் நிலையில், இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார்.

இந்த சூழலில் இது போன்ற சூதாட்டத்தில் சிறுவர்கள் முதல் அனைவரும் பணத்தை இழந்து தற்கொலை செய்து வருகின்றனர். இது தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், தற்போது வங்கி மேலாளர் ஒருவர், வாடிக்கையாளர்கள் செலுத்தும் கல்வி கடன் தொகையை வங்கியில் செலுத்தாமல் தனது கணக்குக்கு செலுத்தி ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருக்கும் காந்தி நகரில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பகுதி மக்கள் பலரும் இந்த வங்கியில் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இங்கு கல்விக்கடன் பிரிவில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருபவர் யோகேஸ்வர பாண்டியன். 38 வயதுடைய இவர், விருதுநகரைச் சேர்ந்தவர் ஆவர்.

இந்த நிலையில், வங்கி கல்வி கடன் காப்பீட்டுத் தொகையில் மோசடி நடந்துள்ளது வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து விசாரிக்கையில், அதனை யோகேஸ்வர பாண்டியன் செய்துள்ளது தெரியவந்தது. மேலும் அவர் வாடிக்கையாளர்கள் செலுத்தும் கல்வி கடன் காப்பீட்டுத் தொகையை முறையாக வங்கி கணக்கில் செலுத்தாமல், அவரது கணக்கில் செலுத்தி பெரிய மோசடி செய்துள்ளார்.

அதாவது வங்கியில் 137 நபர்கள் செலுத்திய கல்வி கடன் காப்பீட்டு தொகை ரூ.34,10,622 தொகையை வங்கி கணக்கில் செலுத்தாமல், தன்னுடைய இரு வங்கி கணக்குகளில் செலுத்தி வந்துள்ளார். இதையடுத்து இதுகுறித்து வங்கியின் முதன்மை மேலாளர் சிவகுமார் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது யோகேஸ்வர பாண்டியன் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகியுள்ளார். இதனால் பெரிதாக அதில் பணம் சம்பாதிக்க எண்ணிய அவர், வங்கியிலுள்ள வாடிக்கையாளர்கள் செலுத்தும் கல்வி கடன் தொகையை தனது வங்கி கணக்குக்கு மாற்றியுள்ளார்.

பின்னர் அந்த பணத்தை வைத்து சூதாட்டம் ஆடி வந்துள்ளார். இருப்பினும் அதில் போட்ட பணத்தை முழுதுவமாக இழந்துள்ளார். தற்போது உயர் அதிகாரிகள் சோதனை செய்தபோது, உதவி மேலாளராக பணிபுரிந்து வரும் யோகேஸ்வர பாண்டியன் இவ்வளவு பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து யோகேஸ்வர பாண்டியன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் ரம்மி மோகத்தால் வாடிக்கையாளர்கள் செலுத்திய கல்வி கடன் தொகையை வைத்து சூதாடி இழந்துள்ள வங்கியின் உதவி மேலாளரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பகலில் வியாபாரி.. இரவில் திருடன்.. திருடிய பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்.. போலிசில் சிக்கிய முதியவர் !