Tamilnadu

வீடியோ வெளியிட்டு மருத்துவ உதவி கேட்ட சிறுவன்: 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்த அமைச்சர் மா.சு!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த பெருநாழி சண்முகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சிதம். இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதிக்கு கஜன் என்ற நான்கு வயது மகன் உள்ளான். இச்சிறுவனுக்கு இதயத்தில் துளை மற்றும் ரத்தக் குழாயில் பிரச்சனை உள்ளது. இதனால் சிறுவனுக்கு ஐந்து வயதிற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.7 லட்சம் வரை செலவாகும் என கூறியுள்ளனர்.

தங்கள் கையில் இருக்கும் பணம் மருந்து மாத்திரைகள் வாங்கவே போதாத நிலையில் அறுவைச் சிகிச்சைக்கான பணத்திற்கு என்ன செய்வது என சிறுவனின் பெற்றோர் வேதனையுடன் இருந்து வந்தனர்.

இந்நிலையில் சிறுவன் கஜன் மருத்துவ உதவி கேட்டுப் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அதில், "எனது பெயர் கஜன். இருதய நோயால் பாதித்துள்ள எனக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐயா உதவி செய்ய வேண்டும். எனது அப்பா, அம்மாவிடம் மருத்துவச் செலவிற்குக் காசு இல்லை" என கூறியுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியான 24 மணி நேரத்திற்குள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனே ராமநாதபுரம் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குச் சிறுவனின் வீட்டிற்குச் செல்லும்படி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரதாப் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிறுவன் கஜன் வீட்டிற்குச் சென்று பரிசோதனை செய்துள்ளனர். பிறகு சிறுவனை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

அங்கிருந்து சிறுவன் மேல்சிகிச்சைக்காக தனது பெற்றோருடன் சென்னை வர உள்ளார். சென்னையில் சிறுவனுக்கு நவீன அறுவை சிக்சை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்ற வருகிறது. இதனால் சிறுவனின் பெற்றோர் தற்போது நிம்மதியடைந்துள்ளது.

தமிழ்நாட்டில் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு சுகாதாரத்துறை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியா போன்று பலருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அரசு செலவில் இலவசமாக அவர்களுக்கு நவீன மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு முறையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போதும் "இது எல்லோருக்குமான திராவிடமாடல் அரசு" என கூறிவருகிறார். இதை வெறும் வார்த்தையாக மட்டுமல்லாமல் செயலிலும் காட்டிவருகிறார் என்பதைதான் இச்சம்பவங்கள் எடுத்துகாட்டுகிறது.

Also Read: “50,000 மாணவர்கள் +2 தேர்வு எழுதாதன் பின்னணி இதுதான்” : Data சொல்லும் ராஜீவ் காந்தி !