Tamilnadu
“நஞ்சற்ற வேளாண்மை - மண் வளத்தை பாதுகாக்க Organic Farming Policy வெளியீடு” : முக்கிய அம்சங்கள் என்னென்ன ?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (14.03.2023) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திடவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் “தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023” (Tamil Nadu Organic Farming Policy 2023) வெளியிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேளாண்மைத் துறையில் தனியே ஒரு பிரிவு உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2021-2022ஆம் ஆண்டிற்கான வேளாண்மை - உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில், “அதிக அளவு பயன்படுத்தப்பட்ட இரசாயன உரங்களாலும், பூச்சிக் கொல்லி மருந்துகளாலும் மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள், மண்புழுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து மண்வளம் பாதிக்கப்பட்டதோடு சுற்றுப்புறச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கக்கூடிய, இயற்கை வேளாண் விளைபொருட்களின் தேவையும் விழிப்புணர்வும் மிக அதிகமாக ஏற்பட்டுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, இயற்கை வேளாண்மை தொடர்பான பணிகளை சிறப்புக் கவனத்துடன் செயல்படுத்துவதற்கு, "வேளாண்மைத் துறையில் இயற்கை வேளாண்மைக்கென்று தனிப்பிரிவு" ஒன்று உருவாக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டு உரிய ஆணைகள் வெளியிடப்பட்டன.
அதன் முதற்கட்டமாக, அங்கக வேளாண்மை வரைவுக் கொள்கையை உருவாக்குதற்காக வேளாண்மை – உழவர் நலத் துறையின் அரசு சிறப்புச் செயலாளர் அவர்களது தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, அங்கக வேளாண்மைக் கொள்கையினை வரையறுப்பதற்காக குழுக்கூட்டங்கள் அவ்வப்போது நடைபெற்றன.
அக்கூட்டங்களில், அங்கக வேளாண்மைக் கொள்கையினை வகுப்பதற்கான பல்வேறு திட்டப் பணிகள் குறித்து, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர், துறைத் தலைவர்கள், முன்னணி அங்கக விவசாயப் பிரிதிநிதிகள் மற்றும் அங்கக வேளாண்மை சார்ந்த அரசு சாரா நிறுவனத்தினர் ஆகியோர்களின் ஆலோசனைகள், பிற மாநிலங்களில் அங்கக வேளாண்மையில் கையாளப்பட்டுவரும் நடைமுறைகள், அதன் சாதக பாதகங்கள் போன்றவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டு, அதனடிப்படையில் வரைவு அங்கக வேளாண்மை கொள்கை, செயல்திட்டம் மற்றும் விதிமுறைகள் ஆகியன உருவாக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம், அங்கக வேளாண்மையின் முக்கியத்துவத்தை தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அதிகரித்தல், நிலங்களில் இராசயன இடுபொருட்களின் பயன்பாட்டினை படிப்படியாக குறைத்து, இயற்கை இடுபொருட்களை அதிகளவில் பயன்படுத்துதல், மண் வளத்தை மேம்படுத்துதல் போன்றவற்றிற்கு தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை வழிவகுக்கும்.
கொள்கையின் முக்கிய அம்சங்கள்
ரசாயன இடுப்பொருள்களை பயன்பாட்டினை, குறைத்து மண்ணையும், நீரையும் பாதுகாத்து, மண்வளத்தை மேம்படுத்தி இயற்கை முறையில் உற்பத்தி வேளாண்மை செய்ய இக்கொள்கை வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 31,629 எக்டர் அங்கக வேளாண் பரப்பினைக் கொண்டு தமிழ்நாடு தேசிய அளவில் 14வது இடத்தில் உள்ளது. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் முதல் 2 இடங்களை பிடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மண் கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம், மண் வளத்தை உயர்த்தி பாதுகாக்க முடியும், பயிர் உற்பத்திக்கும் கால்நடை வளர்ப்பிற்கும் இடையே இணக்கமான சமநிலையான சூழலை உருவாக்குகிறது.
நுகர்வோருக்கு பாதுகாப்பான உணவு கிடைக்க செய்கிறது. வேளாண்மையில் பல்வேறு சவால்கள் இருக்கும் நிலையில், ரசாயனங்களை தொடர்ந்து பயன்படுத்தி சாகுபடி செய்வதால் மண் வளம் குறைகிறது, நீர்நிலை, சுற்றுச்சூழல் மாசடைகிறது.
புதிய பூச்சிகள் உருவாகுதல், பயிர் இழப்பிற்கு வழிவகுக்குகிறது. பயிர் சாகுபடி செலவு அதிகரிப்பதால், வருமானம் குறைந்து விவசாயிகள் கடனால் சிக்கும் நிலை ஏற்படுகிறது. பாதுகாப்பாக ஆரோகியமான சுற்றுசூழலுக்கு உகந்த உணவை வழங்குவது, பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் அல்லது பண்ணைக்கு அருகே உற்பத்தி செய்யக்கூடிய தொழு உரம், மண்புழு உரம் போன்ற இடுபொருள்களை ஊக்குவிப்பதற்கு இக்கொள்ளை வழி வகை செய்கிறது.
பாரம்பரிய விதைகள், அங்கக உத்திகள் ஆகியவற்றின் மூலம், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அங்கக விவசாயிகளை ஊக்குவிக்க ஊக்கத்தொகை வழங்கப்படும். உயிர் உரங்கள் உயிர் இடுபொருளாகவே மானிய விலையில் வழங்கப்படுவதோடு, பயிர் கடன் வழங்குவதோடு, இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் போது பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்கப்படும்.
அனைத்து முக்கிய பயிர்களின் பாரம்பரிய ரகங்களை பாதுகாப்பதன் மூலம் மாநிலத்தின் பல்லுயிர் பெருக்கம் பாதுகாக்கப்படும். அங்கக வேளாண் குழுக்களை ஒருங்கிணைத்து, அங்கக வேளாண் மண்டலங்கள் உருவாக்கப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
கிராமப்புற இளைஞர்கள், பண்ணை மகளிர்களுக்கு அங்கக வேளாண்மைக்குறித்து பயிற்சி அளிப்பதோடு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தவும், அங்கக வேளாண்மைப்பற்றிய ஆராய்ச்சி மேம்பாட்டு கல்விகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. அங்கக வேளாண்மை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் அடிப்படை கணக்கெடுப்புகள் நடத்தப்படுவதோடு, அங்கக உணவுத்திருவிழாக்கள் மாவட்டம் தோறும் நடத்தப்படவுள்ளது.
அங்கக வழியிலான மாடித்தோட்டம், ஊட்டச்சத்து தோட்டம் ஆகியவை ஊக்குவிக்கப்பட்டு பொதுமக்களிடையே எடுத்துச் செல்லப்படவுள்ளது. அனைத்து வகையான பாரம்பரிய நாட்டு விதைகளை பாதுகாக்க மாநில அளவில் மரபணு வங்கி உருவாக்கவும் அங்க்க கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வாய்ப்புள்ள பயிர்கள் அதிக வாய்ப்புள்ள மாவட்டங்களில் கவனம் செலுத்தப்படும். குறிப்பாக, பாரம்பரிய நெல் வகைகள் - திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சையிலும், கரும்பு - ஈரோடு, கடலூர், காய்கறி - தேனி, கோயம்புத்தூர், பருத்தி - ராமநாதபுரம், மதுரை நருமண பொருட்கள் - கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கவனம் செலுத்தப்படும் என கொள்கையின் நிலை குறித்து சீராய்வு செய்ய பல்வேறு குழுக்கள் அமைப்பதோடு, 5 ஆண்டுகளுக்கு பிறகு இக்கொள்கை சீராய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?