Tamilnadu
போலிஸாருக்கு எதிராக சைகை செய்து REELS வெளியிட்ட இளைஞர்கள்.. போக்குவரத்து போலிஸார் அதிரடி நடவடிக்கை!
நெல்லை மாநகர பகுதிகளில் சாலை விதிகளை மீறி இயக்கப்படும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர, கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் மாநகரப் பகுதி முழுவதும் கடந்த சில வாரங்களாக போக்குவரத்து பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு போலிஸாரால் கடுமையான வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த சோதனையின் போது விதிகளை மீறி நம்பர் பிளேட் வைத்திருப்பவர்கள், லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள், ஹெல்மெட் இல்லாமல் வாகனம் இயக்குபவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் போலிஸர் அதிக அளவு அபராதம் விதித்து வருகின்றனர்.
அதேபோல் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்பவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது மட்டுமல்லாமல் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்கின்றனர். மேலும் ஆர்.டி.ஓ.வுக்கு அவர்களது லைசென்சை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து சென்ற வாலிபர் ஒருவர் தனது ஹெல்மெட்டில் கேமிராவை பொருத்திக் கொண்டு சென்றுள்ளார். தொடர்ந்து குலவணிகர்புரம் ரெயில்வே கேட் பகுதியில் சென்ற அந்த வாலிபர் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலிஸாருக்கு சைகை காட்டி விட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகி வந்தது.
அதனை வைத்து போலிஸார் விசாரணை நடத்தியதில் மேலப்பாளையத்தை சேர்ந்த ஒரு சிறுவன் உட்பட 6 பேர் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டதும், மோட்டார் வாகன சட்டத்தை மீறி ஹெல்மெட்டில் கேமரா பொருத்தி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த வாலிபர்களை போலிஸார் இன்று பிடித்து மேலப்பாளையம் போலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு மாநகர போலிஸ் கமிஷனர் ராஜேந்திரன், துணை போலிஸ் கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார் ஆகியோரும் விரைந்து வந்தனர். அப்போது போலிஸ் கமிஷனர் ராஜேந்திரன் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மோட்டார் வாகன சட்டத்தை மீறி ஹெல்மெட்டில் கேமிரா பொருத்தி சாகசத்தில் ஈடுபட்ட ஒரு சிறுவன் மற்றும் 5 வாலிபர்கள் சிக்கி உள்ளனர். இதில் 5 பேருக்கு லைசென்ஸ் உள்ளது. அவர்களது மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளேன்.
மாநகரப் பகுதிகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களில் சென்று விபத்தை ஏற்படுத்தி அந்த நபர் இறந்து விட்டால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் மீது கொலைக்கு நிகரான குற்ற வழக்கு பதிவு செய்யப்படும். விபத்தில் சிக்கிய நபர் காயம் அடைந்து இருந்தால் இந்திய தண்டனைச் சட்டம் 308 கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்.
தொடர்ந்து மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று சாகசத்தில் ஈடுபடுவது கூடாது என்று போலிஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இது தவிர இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் போலிஸார் கண்காணித்து வருகின்றனர்.
அதில் புகார்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிப்போம். இது தவிர புதிய வாகனங்கள் வாங்கி அதில் கூடுதல் வேகத்திற்காக சில பாகங்களை பொருத்திக் கொடுக்கும் கடைகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?