Tamilnadu
“கட்சி தொடங்கிய அடுத்த நாளே ‘அடுத்த முதல்வர்’ என்று சொன்னவர்கள் நிலை என்ன ஆனது?” : முதலமைச்சர் முழு உரை!
இன்று (11.3.2023) கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கோயம்புத்தூர் மாவட்டம், சின்னியம்பாளையத்தில், ஒருங்கிணைந்த கோயம்புத்தூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கழகத்தில் இணைந்தனர். நிகழ்ச்சில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம்: -
“வரவேற்புரை ஆற்றிய கோவை செல்வராஜ், ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னால் நம்முடைய இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, அதைத் தொடர்ந்து, இந்த மாவட்டத்தில் இருக்கும் மாற்றுக் கட்சிகளைச் சார்ந்தவர்கள் நம்முடைய தாய்க் கழகத்தில் இணைவதற்கு தயாராக இருக்கிறார்கள், காத்துக் கொண்டிருக்கிறார்கள், அதற்குரிய தேதியை நீங்கள் வழங்கிட வேண்டும் என்று தொடர்ந்து கேட்டார்.
அதே போல் இந்த மாவட்டத்தினுடைய பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களும் என்னிடத்தில் கேட்டுக் கொண்டிருந்தார். இடையில் ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தல் வந்த காரணத்தால், அதில் முழுக் கவனத்தை நாம் செலுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்ட காரணத்தால், அவருடைய வேண்டுகோளை உடனடியாக நிறைவேற்ற முடியாமல் இன்றைக்கு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் உங்களையெல்லாம் சந்திக்கக்கூடிய ஒரு நல்வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன்.
நம்முடைய செல்வராஜ் ஏற்கனவே நம்முடைய இயக்கத்தில் சேர்ந்திருந்தாலும், இன்றைக்கு அவருடைய சீரிய முயற்சியோடு நம்முடைய மாவட்டக் கழக முன்னோடிகளின் ஒத்துழைப்போடு ஆயிரக்கணக்கில் இன்று அ.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி, திராவிட முன்னேற்றக் கழகத்தில் வந்து சேர்ந்திருக்கக்கூடிய உங்களையெல்லாம் முதலில் நான் தலைமைக்கழகத்தின் சார்பில் வருக, வருக, வருக என வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நம்முடைய செல்வராஜ் அவர்கள் எப்படிப்பட்ட செயல்வீரர், எப்படிப்பட்ட பேச்சாளர், தொலைக்காட்சிகளில் விவாத மேடைகளில் எப்படி ஆற்றலோடு பங்கேற்பார் என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். அவர் அதிமுக-வில் இருந்தபோது, தொலைக்காட்சிகளில் விவாத மேடைகளில் பங்கேற்கிற காட்சிகளையெல்லாம் நான் அடிக்கடி பார்த்தவன்.
அப்படி பார்த்துக் கொண்டிருக்கும்போது பல்வேறு அதிமுக-வைச் சார்ந்தவர்கள் விவாத மேடையில் பங்கேற்கிறபோது சில நேரங்களில் எனக்கு கோபம் வரும், ஆத்திரம் வரும். ஆனால் செல்வராஜ் விவாத மேடைகளில் பங்கேற்கும்போது எனக்கு ஆத்திரமோ, கோபமோ வருவது கிடையாது.
ஏனென்றால் உள்ளொன்று வைத்துக்கொண்டு அவர் வெளியில் ஒன்று பேசுவது என்று இல்லாமல் வெளிப்படையாக எதையும் பேசக்கூடியவர். அவர் சொல்லக்கூடிய வாதத்தை அழுத்தமாகப் பேசக்கூடியவர். சில நேரங்களில் நம்மைத் திட்டிப் பேசியிருக்கிறார். வைரத்தை தீட்டத் தீட்டத்தான் வைரம் ஜொலிக்கும் என்பதைப்போல நம்மைத் திட்டத் திட்டத்தான் இன்று நாம் வைரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறோம்.
பேசுகிறபோது அவரே சொன்னார், கிலுகிலுப்புக்காரன் ஏமாற்றி தாய்க்கழகத்திடமிருந்து எங்களைப் பிரித்து அதற்குப் பிறகு உண்மை என்ன என்பதையறிந்து புரிந்து இன்றைக்குத் தாய்க்கழகத்திற்கு தாயைத் தேடி வந்திருக்கிறோம் என்று சொன்னார், அதுதான் உண்மை.
இன்றைக்குத் தாயைத் தேடி வந்திருக்கும் அவரை மட்டுமல்ல, அவரோடு சேர்ந்து வந்திருக்கும் அவரை நம்பி வந்திருக்கும், அவர்மீது நம்பிக்கை வைத்து வந்திருக்கக்கூடிய உங்களைத் தாயுள்ளத்தோடு மீண்டும் ஒரு முறை நான் வருக, வருக, வருக என்று வரவேற்க விரும்புகிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, நாம் தாய்க்கழகம், தாய்க்கழகம் என்று சொல்கிறோம். இதற்கு என்ன காரணம் என்று கேட்டால், இந்தக் கழகத்திற்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. ஏதோ இந்தக் கட்சியை தொடங்கிய நேரத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தே தீரவேண்டும், ஆட்சிப் பொறுப்புக்காக இந்த இயக்கம் துவக்கப்படுகிறது என்று இந்தக் கட்சியைத் தொடங்கவில்லை.
1949-ஆம் ஆண்டு வட சென்னை பகுதியில் ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த இயக்கத்தைத் தொடங்கினார். தொடங்கி வைத்த நேரத்தில் மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள், இந்தக் கழகம் ஆட்சிக்காக மட்டுமல்ல, இந்த நாட்டில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு, விவசாயப் பெருங்குடி மக்களுக்கு, நெசவாளத் தோழர்களுக்கு, தொழிலாளர் நண்பர்களுக்கு, பிற்படுத்தப்பட்ட அடித்தளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு, ஒட்டுமொத்தமாக இந்தத் தமிழ் இனத்திற்காக, தமிழ்ச் சமுதாயத்திற்காக இந்தக் கழகம் தொடங்கப்படுகிறது, உருவாக்கப்படுகிறது என்றுதான் அறிஞர் அண்ணா அவர்கள் இந்த இயக்கத்தை உருவாக்கித் தந்தார்கள்.
நீங்கள் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும். நாட்டில் இன்றைக்கு எத்தனையோ கட்சிகள் இருக்கிறது. வரலாற்றில் இடம்பெற்றிருக்கக்கூடிய கட்சிகளும் உண்டு, அப்படி அந்த உணர்வோடு தோன்றிய கட்சிகளின் செயல்பாடுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதே நேரத்தில், திடீர் திடீரென தோன்றும் கட்சிகளையும் பார்க்கிறோம்.
அப்படி தோன்றும் கட்சிகளெல்லாம் தோன்றிய அடுத்தநாளே, தோன்றிய அன்றைக்கே, தோன்றுவதற்கு முன்பே, நான்தான் அடுத்த முதலமைச்சர், நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லி அந்த உணர்வோடு தொடங்கப்படும் கட்சிகளெல்லாம் இன்றைக்கு எந்த நிலைமைக்கு போய் இருக்கிறது, அநாதைகளாக இன்றைக்கு அலைந்து கொண்டிருக்கும் அந்தக் காட்சிகளையும், நிலைமைகளையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் அப்படியல்ல. அதைத்தான் அண்ணா தொடங்குகிறபோதே சொன்னார், ஆட்சிக்காக மட்டுமல்ல. நீங்கள் ஒன்றை மறந்துவிடக் கூடாது. 1949-இல் தொடங்கி நாம் எப்போது முதல்முறையில் தேர்தல் களத்தில் ஈடுபட்டோம், 1949-இல் தொடங்கி அதற்குப் பிறகு நடைபெற்றிருக்கக்கூடிய தேர்தலில் 1952-இல் நடந்த தேர்தலில் நாம் ஈடுபடவில்லை, 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில்தான் முதன்முதலில் திராவிட முன்னேற்றக் கழகம் களத்தில் இறங்கியது.
அதுவும் 1957-ஆம் ஆண்டு தேர்தலில் ஈடுபடலாமா, களத்தில் இறங்கலாமா என்று அறிஞர் அண்ணா அவர்கள் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில், அந்த மாநாட்டில் திரண்டிருக்கும் மக்களிடத்தில் ஒரு பெட்டியை வைத்து 1957-ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் ஈடுபடலாமா? வேண்டாமா? என்பதை வந்திருக்கும் கழகத் தோழர்கள், கட்சி நிர்வாகிகள், செயல் வீரர்கள் நீங்கள் சொல்லுங்கள், வாக்களியுங்கள், நீங்கள் முடிவு செய்யுங்கள் என்று ஒரு சீட்டு தரப்பட்டது.
அந்தச் சீட்டில் அத்தனை பேரும் தேர்தலில் ஈடுபடலாமா? வேண்டாமா? என்பதை எழுதி அந்தப் பெட்டியில் போட்டார்கள். அதற்குப் பிறகு பெட்டியைத் திறந்து, அந்தச் சீட்டை எண்ணிப்பார்த்த போது, தேர்தலில் ஈடுபடலாம் என்று அதிகமான பேர் ஆதரவு தந்தார்கள், வாக்களித்திருந்தார்கள். அதற்குப் பிறகுதான் 1957-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில், நாடாளுமன்றத் தேர்தலில் நாம் ஈடுபட்டோம்.
அப்படி 1957-ஆம் ஆண்டு நாம் ஈடுபட்ட நேரத்தில், எத்தனை பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக தி.மு.கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டோம் என்றால் 15 பேர். அந்த 15 பேரில் ஒருவராக நம்முடைய தலைவர் கலைஞர் குளித்தலை தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். சட்டமன்றத்தில் 15 பேர் ஆக உட்கார்கிறோம்.
அதற்குப் பின்னால் 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் 50 பேர் வெற்றி பெறுகிறோம். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்கிறோம். அதைத் தொடர்ந்து 1967-ஆம் ஆண்டு அண்ணா தலைமையில் பெரும்பான்மையாக வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பேற்கிறோம். எதற்காக நான் இதை வரிசைப்படுத்திச் சொல்கிறேனென்றால், 1949-இல் தொடங்கியிருந்தாலும் நாம் தேர்தல் களத்திற்கு வந்தது 1957-ஆம் ஆண்டு. அதற்குப் பிறகு 1962, அதற்குப் பிறகு 1967-இல் ஆட்சிக்கு வருகிறோம்.
ஆட்சிக்கு வந்த அண்ணா தமிழ்நாட்டு மக்களுக்குப் பல்வேறு திட்டங்களை தமிழன் தன்மானத்தோடு வாழவேண்டும் என்கிற உணர்வோடு சட்டமாக்கி நிறைவேற்றித் தந்தார். எத்தனையோ அறிவுப்புகள் உண்டு, எத்தனையோ திட்டங்கள் உண்டு. ஆனால் அண்ணா நம்மிடத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்று அவர் உயிரோடு இருந்தது ஓராண்டு காலம்தான். அந்த ஓராண்டு காலத்தில் சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய அளவிற்கு சட்டமன்றத்தில் பல தீர்மானங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றிக் கொடுத்தார்.
அதில் முக்கியமான மூன்று தீர்மானங்கள் என்ன என்று கேட்டால், முதல் தீர்மானம் சீர்திருத்தத் திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற தீர்மானம். இரண்டாவது தீர்மானமாக இருமொழிக் கொள்கை. அதற்கடுத்து மூன்றாவது தீர்மானமாக தமிழ்நாட்டிற்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கூடிய ஒரு மிகப்பெரிய, வரலாற்றில் இன்றைக்கும் பதிவாகியிருக்கக்கூடிய தீர்மானம். இன்றைக்கு நாமெல்லாம் தன்மானத்தோடு இந்த தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னால், அதற்குக் காரணம் இந்த மூன்று தீர்மானங்கள்தான்.
அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, கலைஞர் முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார். முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு 1971-இல் மீண்டும் சட்டமன்றத் தேர்தல். அந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று தலைவர் கலைஞர் தலைமையில் 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருகிறோம். நான் பெருமையோடு சொல்கிறேன், இதுவரையில் தமிழ்நாட்டு வரலாற்றில் இவ்வளவு இடங்களை, 184 என்ற ஒரு பெரிய இலக்கைப் பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற கட்சி எந்தக் கட்சியும் கிடையாது, நம்முடைய திமுகதான் கலைஞருடைய தலைமையில் ஆட்சிக்கு வந்தோம். இது வரலாறு.
அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்து தலைவர் கலைஞர் அவர்கள் எத்தனையோ திட்டங்களை, சாதனைகளை, ஐந்து முறை அதற்குப் பிறகு தொடர்ந்து அல்ல, இடையிடையில் நம்முடைய ஆட்சி பறிக்கப்பட்டு அல்லது ஆட்சி கவிழ்க்கப்பட்டு அதற்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்து 1971-ல் ஆட்சிக்கு வந்தோமென்றால், 1975-இல் இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. அந்த நெருக்கடி நிலை எதற்கு வந்தது என்றால், அம்மையார் இந்திராகாந்தி அவர்கள் தனக்கு ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்திய நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தினார்.
அந்த நெருக்கடி நிலை நேரத்தில் பலர் கைது செய்யப்பட்டார்கள். வடமாநிலத்தில் இருக்கக்கூடிய தலைவர்களெல்லம் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அப்போது நாம் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கிறோம். ஆட்சியில் இருக்கும் நேரத்தில் தலைவர் கலைஞருக்கு தூது வருகிறது, எங்கிருந்து? டெல்லியிலிருந்து. அம்மையார் இந்திராகாந்தி அவர்களால் அனுப்பிவைக்கப்பட்ட தூதுவர்கள் வருகிறார்கள்.
என்ன தூது தெரியுமா? "நெருக்கடி நிலையை நீங்கள் எதிர்க்கக்கூடாது, எதிர்த்தால் அடுத்த விநாடி உங்கள் ஆட்சி கவிழும், கவிழ்த்துவிடுவோம்" என்று தூது வருகிறது. வந்த தூதுவர்களிடத்தில் கலைஞர் என்ன சொன்னார் தெரியுமா? ஆட்சி அல்ல, என் உயிரே போனாலும் நான் கவலைப்பட மாட்டேன், எனக்கு ஜனநாயகம்தான் முக்கியம் என்று சொல்லி வந்த தூதுவரை அனுப்பிவைத்து விட்டு, கடற்கரையில் இலட்சக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி, அந்தக் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கலைஞர் தீர்மானம் கொண்டுவருகிறார்.
என்ன தீர்மானம் தெரியுமா? நெருக்கடி நிலையை உடனடியாக இரத்து செய்திட வேண்டும், இதைப் பயன்படுத்தி கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருக்கக்கூடிய தலைவர்களையெல்லாம் உடனடியாக விடுதலை செய்திட வேண்டும், திராவிட முன்னேற்றக் கழகம் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வருகிறது என்று முன்மொழிந்து அந்த கடற்கரையில் திரண்டிருந்த இலட்சக்கணக்கான தமிழ் பெருங்குடி மக்களை எழுந்து நிற்கவைத்து அத்தனை பேரையும் வழிமொழிய வைத்தார் கலைஞர் அவர்கள். தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட அடுத்த விநாடி தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய நம்முடைய கழக ஆட்சி கலைஞர் தலைமையில் நடைபெறக்கூடிய ஆட்சி கவிழ்க்கப்படுகிறது. கவிழ்க்கப்பட்ட அடுத்த விநாடி நாங்களெல்லாம் கைது செய்யப்படுகிறோம். மிசா கைதிகளாக சிறையில் அடைக்கப்படுகிறோம். 500க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் வாடுகிறோம்.
அதில் நடந்த கொடுமைகளை நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை, உங்களுக்குத் தெரியும். எதற்காக சொல்கிறோம் என்றால், அப்போதும் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியைப் பற்றி கவலைப்படவில்லை, மக்களை பற்றிதான், நாட்டைப் பற்றிதான். அதற்குப் பிறகு நடைபெற்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்தோம், வெற்றியை சந்தித்தோம்.
எமர்ஜென்சிக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெறவில்லை. நம் ஆட்சி கலைக்கப்பட்டு 13 வருடம் நாம் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதற்குப் பிறகு 1989-இல், 13 வருடத்திற்குப் பிறகு நாம் ஆட்சிக்கு வருகிறோம். 1991-இல் மீண்டும் நம்முடைய ஆட்சி கவிழ்க்கப்படுகிறது. நம்மீது அபாண்டமான பழிபோட்டு நம் ஆட்சியைக் கவிழ்த்தார்கள். அதற்குப் பிறகு 1996-இல் மீண்டும் ஆட்சிக்கு வருகிறோம். 2001-இல் மீண்டும் ஆட்சி இல்லை.
அதற்குப் பிறகு 2006-இல் மீண்டும் ஐந்தாவது முறையாக நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார். அதற்குப் பிறகு ஒரு 10 வருடம் ஆட்சியில் இல்லை. இப்போது 2021-இல் ஆறாவது முறையாக என்னுடைய தலைமையில் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது.
எதற்காக சொல்கிறேன் என்றால், இந்த நாட்டில் நம்மைப்போல் வெற்றி பெற்றிருக்கக்கூடிய கட்சி ஒன்று கிடையாது. நம்மைப்போல் தோற்றிருக்கக்கூடிய கட்சி ஒன்று கிடையாது. இரண்டிலும் நமக்குதான் பெருமை. வெற்றியிலும் சரி, தோல்வியிலும் சரி, இரண்டிலும் நமக்குதான் பெருமை. வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் பாடுபடக்கூடிய கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
அந்த திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு ஆறாவது முறையாக மக்களுடைய அன்பை, ஆதரவைப் பெற்று இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறது என்று சொன்னால், இன்றைக்கு எங்கள் மீது, இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு தந்திருக்கும் மக்களுக்கு நாம் தேர்தல் நேரத்தில் அளித்திருக்கும் உறுதிமொழிகள் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறதா? இல்லையா? தேர்தல் நேரத்தில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் செய்வோம் என்று சொன்னோம். கலைஞர் எப்படி தேர்தல் நேரத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறபோது திருக்குறள் போன்று இரண்டு வரிகளை சொல்வார், சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்று.
இன்றைக்கு ஆறாவது முறையாக நடைபெறக்கூடிய கலைஞருடைய வழியில் நடைபெறக்கூடிய திராவிட மாடல் ஆட்சி, சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து கொண்டிருக்கக்கூடிய ஆட்சியாக இன்றைக்கு நம்முடைய ஆட்சி பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
பேருந்தில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம், இது சொன்னது. கொரோனா காலத்தில் பாதிப்பட்டிருக்கக்கூடிய மக்களுக்காக வந்தவுடன் நாங்கள் 4000 ரூபாய் தருவோம் என்றோம், இது சொன்னது. அரசுப் பள்ளிகளில் படித்து முடித்து கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவியர்களுக்கு உதவித் தொகையாக மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும், அதற்காக புதுமைப்பெண் என்று ஒரு திட்டம். இது சொல்லாதது.
இப்படி, சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து கொண்டிருக்கக்கூடிய ஆட்சி இன்றைக்கு நடக்கிறதா? இல்லையா? அதனால்தான் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில், பக்கத்தில் இருக்கக் கூடிய இதே கொங்கு மண்டலத்தைச் சார்ந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 10,000-க்கு குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறோம்.
அந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞன் திருமகன் ஈவெரா அகால மரணம் அடைந்துவிட்ட காரணத்தால், அங்கு ஒரு இடைத்தேர்தல் வரவேண்டிய ஒரு சூழ்நிலை வந்தது, அதைச் சந்தித்தோம். அந்தத் தேர்தலில் அதே காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருமகன் ஈவெரா-வினுடைய தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களை நிற்கவைத்து நம் கூட்டணி சார்பில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நிற்கவைத்து கிட்டத்தட்ட 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்திருக்கிறோமா? இல்லையா? கணக்கு போட்டு பாருங்கள்.
ஏற்கனவே நடந்த தேர்தலில் 10,000-க்குக் கீழே. இப்போது இந்த இடைத்தேர்தலில் இவ்வளவு பெரிய வெற்றி. என்ன காரணம்? இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய நம்பிக்கை. அந்தளவிற்கு ஒரு நம்பிக்கையை பெற்றிருக்கக்கூடிய காரணத்தினால்தானே இவ்வளவு பெரிய வித்தியாசம். ஆகவே, இதையெல்லாம் வரவிருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலிலே இதேபோன்ற வெற்றியை நாம் பெற்றாக வேண்டும். அதற்கு உறுதி எடுக்கக்கூடிய நிகழ்ச்சியாகத்தான் இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.
நம்முடைய செல்வராஜ் அவர்கள் இந்த இயக்கத்தில் வந்து சேர்ந்ததற்குப் பின்னால், தொடர்ந்து முரசொலியில் அவர் எழுதிக் கொண்டிருக்கக்கூடிய கட்டுரைகளை நானும் படித்துக் கொண்டிருக்கிறேன். அவர் வந்து சேர்ந்தபோதே சொன்னார். நான் ஏற்கனவே இந்தக் கட்சியில் செயல்பட்டவன். இப்படியெல்லாம் பாடுபட்டவன்தான். ஏதோ இடையில் போய்விட்டேன். இப்போது அதைவிடச் சிறப்பாகப் பணியாற்ற வந்திருக்கிறேன் என்று அந்த உறுதியோடு வந்திருக்கிறேன் என்று சொல்லி அதற்கு எடுத்துக்காட்டாக இன்றைக்கு
4000-க்கும் மேற்பட்டவர்களை ஒருங்கிணைத்து உங்களையும் அழைத்துவந்து இந்த இயக்கத்தில் சேர்த்திருக்கிறாரே, அதற்காக நான் மீண்டும் மீண்டும் தலைமைக் கழகத்தின் சார்பில் மட்டுமல்ல, என்னுடைய சார்பில் மட்டுமல்ல, நம்மை ஆளாக்கி உருவாக்கி நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களின் சார்பில் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை, வணக்கத்தை நான் மீண்டும், மீண்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஆகவே, திட்டங்கள் தொடர, சாதனைகள் மலர, இந்த ஆட்சி தொடர்ந்து பீடுநடை போட நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்கு நீங்களெல்லாம் இன்றைக்கே களமிறங்க வேண்டும், அதற்குரிய வியூகத்தை அமைத்திட வேண்டும். ஏனென்றால், இன்றைக்கு மதத்தைப் பயன்படுத்தி, சாதியைப் பயன்படுத்தி கலவரத்தை ஏற்படுத்தலாம், குழப்பத்தை ஏற்படுத்தலாம், அதன்மூலமாக இந்த ஆட்சியை வீழ்த்திவிடலாம் என்றெல்லாம் கனவு கண்டு இன்றைக்கு அந்த முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே, அதற்கெல்லாம் செவி சாய்க்காமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல் நம்முடைய இலக்கு என்பது நாடாளுமன்றத் தேர்தல்தான். கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தை இழந்தோம். வரவிருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் அந்த இடத்தையும் இழக்கக்கூடாது. புதுவையையும் சேர்த்து 40-க்கு 40. நாடும் நமதே, நாளையும் நமதே.
ஏதோ தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றி மட்டுமல்ல, இந்தியா முழுமையும் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதற்கான அந்த முயற்சியில் முழுமையாக ஈடுபடப்போகிறோம், அதற்கு நீங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும், துணைநிற்க வேண்டும் என்று உங்களையெல்லாம் மீண்டும் ஒருமுறை கேட்டு, தாய்க் கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் வந்து சேர்ந்திருக்கக்கூடிய நம்முடைய அன்பிற்கினிய உடன்பிறப்புகள், சகோதரிகள், சகோதரர்கள், நண்பர்கள், தோழர்கள் அத்தனை பேரையும் நான் மீண்டும் ஒருமுறை தலைமைக் கழகத்தின் சார்பில், மாவட்டக் கழகத்தின் சார்பில் வருக! வருக! வருக! என்று வரவேற்று நம்முடைய அருமை சகோதரர் செல்வராஜ் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்து, என் உரையை நிறைவு செய்கிறேன்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 46,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?