Tamilnadu

“பெரியார், அண்ணா, கலைஞர் இல்லை என்றால்.. டெல்லியில் பயந்துபோய் உள்ளனர்” : மேடையை அதிர வைத்த ஆ.ராசா MP !

“தனி மனிதனை வாழ்த்துவதற்கான அரங்கம் அல்ல இது. தத்துவத்தை வாழ்த்துவதற்கான அரங்கம். திராவிட தத்துவத்திற்கு ஒரு நல்ல தலைவன் கிடைத்துள்ளார் அவர் தான் மு.க.ஸ்டாலின் என முதலமைச்சர் பிறந்தநாள் மாணவரணி வாழ்த்தரங்க நிகழ்வில் கழக துணை பொது செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

கழக மாணவரணி சார்பில் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வாழ்த்தரங்கம் நிகழ்வு நடைபெற்றது.

கழக மாணவரணி செயலாளர் எழிலரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி, துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ. அராசா, திரைப்பட இயக்குனர் கரு. பழனியப்பன், பெரியாரிய சிந்தனையாளர் வே. மதிமாறன், எழுத்தாளர் சுகிர்தராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கழக துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி, “100 ஆண்டு கால ஆளுமையில் சாதி தெரியாமல் படிக்கிற நிலையை கொண்டுவந்தது திமுக தான். தத்துவங்கள் தான் கையில் உள்ளது. தலைவர்கள் இல்லை.

பெரியார், அண்ணா, கலைஞர் இல்லை என்றால் அண்ணாமலை ஆட்டுகுட்டி மேய்த்து கொண்டு இருந்திருப்பார். டெல்லியில் உள்ள அனைவரும் பயந்து போய் உள்ளனர். அரசியல் சட்டத்திற்கு ஒரு சக்தி உள்ளது. ஆளுநரை ஓட விட்டது பெரிது அல்ல. அவரே எழுந்து போனது தான் பெரியது.

வேளாண் சட்டம், குடியுரிமை சட்டம், நீட் போன்ற சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றுகிறது, ஆனால் நம் தமிழ்நாடு சட்டமன்றம் அதை எதிர்த்து தூக்கி எரிகிறது. அத்தகைய வலிமை உள்ளவர் நம் முதல்வர். நல்ல தத்துவத்திற்கு நல்ல தலைவன் வேண்டும். திராவிட தத்துவத்திற்கு ஒரு நல்ல தலைவன் கிடைத்துள்ளார். அவர் தான் ஸ்டாலின்.

தனி மனிதனை வாழ்த்துவதற்கான அரங்கம் அல்ல இது. தத்துவத்தை வாழ்த்துவதற்கான அரங்கம். ஒரு தலைவன் சரியாக இருந்தால் தான் எவ்வளவு பெரிய தத்துவமாக இருந்தாலும் வாழும். திராவிட தத்துவம் நல்ல தத்துவம். அது வாழவேண்டுமென்றால் இந்த மாமனிதன் வாழ வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “எத்தனையோ பூச்சாண்டிகளை பார்த்துக்கிறேன்.. சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்” : முதலமைச்சர் ஆவேச பேச்சு !