Tamilnadu
“அரசியலமைப்புக்கு உட்பட்டே ஆன்லைன் ரம்மி தடை மசோதா அமைந்துள்ளது”: ஆளுநர் கேள்விக்கு தமிழ்நாடு அரசு பதில்!
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் மூலம் நாடுமுழுவதும் பலர் தற்கொலை செய்துகொண்ட அவல நிலை நீடித்து வருகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அப்போதிருந்த் அதிமுக அரசு அவசரக் கோலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றியது.
பின்னர் உச்சநீதிமன்றம் அதன் சட்ட ஓட்டைகளைச் சுட்டி அச்சட்டத்தை செல்லாது என்று தீர்ப்புக் கொடுத்து விட்டது. இதனையடுத்து சரியான சட்ட விதிகளுடன் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி வந்ததும், ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை மீண்டும் வலுவான முறையில் இயற்றிட, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் சந்துரு அவர்களைக் கொண்டு ஓர் ஆய்வுக் குழுவை நியமித்து, அவரது கருத்துரை - பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு, அவசரச் சட்டம் (ordinance) இயற்றப்பட்டது.
இதைடுத்து, கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், அவசர சட்டத்துக்கு மாற்றாக, சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதற்கான மசோதாவை சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தார். அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா தொடர்பாக, பல்வேறு விளக்கங்களை ஆளுநர் கோரியிருந்தார். அதற்கு, ஒரே நாளில் தமிழக அரசும் விளக்கங்களை அளித்தது. பின்னர் சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு 5 மாதங்கள் ஆனநிலையில், அதன் மீது ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தார். இந்நிலையில், தற்போது ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பியனுப்பியுள்ளார்.
ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகள் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வருவதால், அவற்றைத் தடை செய்து சட்டமியற்றுவதற்கான அதிகாரம் பேரவைக்கு இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக ஆளுநர் எழுப்பட்ட கேள்விக்கு தமிழ்நாடு அரசு அளித்து பதில்கள் பின்வருமாறு :-
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்டம் மசோதா மீது ஆளுநர் எழுப்பிய கேள்வியும் அரசு பதிலும்..
ஆளுநர் கேள்வி:- ஏற்கனவே இதற்காக பிறப்பிக்கப்பட்ட சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்துகளுக்கு உட்பட்டதாக இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் உள்ள விஷயங்கள் இந்த சட்ட மசோதாவில் சரியாக பதிலளிக்கப்படவில்லை.
குறிப்பாக, அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு என்பதிலும் (கேம் ஆப் சான்ஸ்), திறமைக்கான விளையாட்டு (கேம் ஆப் ஸ்கில்) என்பதிலும் வித்தியாசம் காட்டாமல், முழுமையான தடை விதிப்பது, அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானதாக இருக்கிறதே.
அரசு அளித்த பதில் :- இந்த சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் கூறுகளுக்கு உட்பட்டுதான் இருக்கிறதா? என்றால், அரசியலமைச் சாசனத்தின் 7-வது அட்டவணையில் உள்ள பட்டியலில் கூறப்பட்டுள்ள உள்ளீடுகளை கருத்தில் கொண்டுதான் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.
அதாவது, பந்தயம் மற்றும் சூதாட்டம், பொது அமைதி, பொது சுகாதாரம் போன்ற அம்சங்கள் அனைத்தும் மாநிலப் பட்டியலில் உள்ளது. அதனடிப்படையில்தான் இந்த சட்ட மசோதா உருவாக்கப்பட்டது. எனவே இந்த சட்டம் எந்த வகையிலும் அரசியலமைப்பின் கூறுகளுக்கு எதிராக இல்லை. அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே இந்த ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா அமைந்துள்ளது.
ஆன்லைன் மற்றும் ஆப்லைன் (நேரடியாக) விளையாட்டுகளை வித்தியாசப்படுத்தவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டதை கருத்தில் கொண்டுதான் ஆன்லைன் சூதாட்டங்களை மட்டும் தடைசெய்வதற்கான சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்லைன் என்ற நேருக்கு நேராக இருந்து விளையாடும் போது தவறுகள் நடக்காது. எனவே ஆன்லைன் விளையாட்டுகளை மட்டும் தடை செய்துள்ளோம்.
முகப்புரையில் இது குறித்தும், இப்பொருள் குறித்த வல்லுநர் குழு அளித்த அறிக்கை மற்றும் பல்வேறு ஆராய்ச்சியின் அடிப்படையிலான தரவுகளையும் தெளிவாக குறிப்பிட்டுதான் இந்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.
கேள்வி :- திறமையின் அடிப்படையிலான விளையாட்டுகளை தடை செய்யும் முடிவு என்பது, அரசியலமைச் சட்டத்தின் 7-வது அட்டவணை பட்டியலில் கூறப்பட்ட 34-ம் பிரிவில் அமைவதாக கூறிவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருப்பதை கருத்தில் கொள்ளவில்லையே.
அரசு பதில் :- ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விளையாட்டுகளை வித்தியாசப்படுத்தவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டதை கருத்தில் கொண்டுதான் தற்போதைய அவசர சட்டத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை மட்டும் தடைசெய்வதற்கான சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
நேரில் (ஆப்லைனில்) விளையாடும்போது யாருடன் மற்றும் எவ்வாறு விளையாடுகிறோம் என்பது தெரிந்து விளையாட வாய்ப்புள்ளது. ஆனால், ஆன்லைனில் (இணைய வழியில்) விளையாடும்போது, அந்த விளையாட்டை உருவாக்கியவர் பதிவு செய்யும் செயல்திட்டத்தின் (புரோகிராம்) அடிப்படையில் விளையாடப்படுவதால், ஏமாற்றும் மற்றும் பணத்தை சுரண்டும் வாய்ப்புகள் உள்ளது என்பதன் அடிப்படையிலேயே ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய அவசர சட்டம் இயற்றப்பட்டது.
எனவே, சூதாட்டம் என்கிற அடிப்படையில் இது அரசியலமைப்பு சாசனத்தின் 34-ம் பிரிவுக்கு உட்பட்டுதான் இந்த சட்ட முன்வடிவு அமைந்துள்ளது.
கேள்வி :- குறிப்பிடத்தக்க தேவையான அளவுக்கு மட்டும்தான் தடை செய்ய அனுமதிக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டதை மீறி இந்த தடை அமைந்துள்ளதே.
அரசு பதில்:- விளையாட்டுகள் முழுமையாக தடை செய்யப்படவில்லை. அதிர்ஷ்ட விளையாட்டு, திறனை வெளிப்படுத்தும் விளையாட்டு என்று வித்தியாசப்படுத்தி, ஆன்லைன் சூதாட்டங்கள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன. எனவே இது தேவையான அளவில் மட்டுமேயான தடையாகும்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?