Tamilnadu

“யாதும் ஊரே யாவரும் கேளிர்..”- வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து வீடியோ வெளியிட்ட காவல்துறை !

தமிழ்நாட்டில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சில நாட்களாக வதந்தி பரவிவருகிறது. அதிலும் குறிப்பாக திருப்பூரில் பணியாற்றும் தொழிலாளர்களை சிலர் திட்டமிட்டு தாக்குவதாகவும், சிலரை கொலைசெய்ததாகவும் வீடியோ ஒன்று வைரலானது.

இந்த வீடியோ பரவி சில நேரத்திலேயே பாஜகவினர் இந்த வீடியோகளை திட்டமிட்டு சமூக வலைதளத்தில் பரப்பினர். அதிலும் அவர்கள் ஹிந்தி பேசிய காரணத்தால்தான் தாக்கப்பட்டதாக வடமாநில பாஜகவினர் கலவரத்தை உருவாக்கும் நோக்கில் வீடியோவை பரப்பி வந்தனர்.

தொடர்ந்து இதுபோன்று வீடியோ வெளியிட்டு தமிழ்நாடு மீது மற்ற மாநிலங்களுக்கு வெறுப்பு வரும் வகையில் திட்டம் தீட்டி பாஜகவினர் வதந்தி பரப்பி வந்தனர். அதிலும் உ.பி பாஜகவின் செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தி பேசிய காரணத்தினால் 12 பேர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதாக பச்சை பொய்யை பரப்பினார்.

இதைத்தொடர்ந்து ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்தும், இந்த செய்திகளை ஆய்வு செய்யாமல் உண்மை என நம்பி செய்திகள் வெளியிட்டன. அவர்கள் பகிர்ந்த அந்த வீடியோகளை ஆராய்ந்து பார்த்தபோது, அதில் சில பாஜக ஆளும் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. மற்றொரு வீடியோ ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தாக்கியவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக பொய் செய்தி பரவி வருவதால் தமிழ்நாட்டில் உள்ள வட மாநிலத்தவர் மத்தியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரு மாநில பிரச்னையாக உருவாக்க பாஜகவினர் திட்டமிட்டு பொய் செய்தியை பரப்பி வருகிறது. இதனால் இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து இந்த செய்திகளை பரப்பிய பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த், சில வட மாநிலத்தவர், சில ஊடகங்கள் உள்ளிட்டோர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இந்த பொய் செய்தி பரப்பிய ஒரு சில வட மாநில youtube சேனல்களை முடக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே பீகார் அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு வந்து பாதுகாப்பு நன்றாக இருப்பதாக உறுதி செய்தனர். டிஜிபி சைலேந்திர பாபுவும், பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து பொய் செய்தி பரப்பியவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்தார். மேலும் நேற்று வட மாநில தொழிலாளர்களை நேரில் சென்று பார்த்து பேசினார்.

இவ்வாறு வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பாதுக்காப்பாக இருப்பதாக அரசு ஒவ்வொரு விஷயங்களையும் செய்து நிரூபித்து வருகிறது. அந்த வகையில் வட மாநில தொழிலாளிகள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களுக்கு எந்த வித தொந்தரவும் இல்லை எனவும் தமிழ்நாடு போலீஸ் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், பீகார், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் இருந்தனர். அவர்கள் தாங்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாகவும், தாங்கள் இங்கே சகோதரர்கள் போல் பழகி வருவதாகவும், இங்கே பல வருடங்களாக இருக்கும் தங்களுக்கு எந்த வித பிரச்னையும் இருந்ததில்லை எனவும் கூறியுள்ளனர்.

இந்த வீடியோவை வெளியிட்டு தமிழ்நாடு காவல்துறை ஹோலி தின வாழ்த்தை தெரிவித்ததோடு “யாதும் ஊரே யாவரும் கேளிர்..” என்ற வாக்கியத்தையும் பதிவிட்டுள்ளனர். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read: “சமூக நீதி, சுயமரியாதை, திராவிடத்துக்கு இடமில்லையா?” -‘தமிழா தமிழா’ ஷோவை விட்டு விலகிய கரு பழனியப்பன்