Tamilnadu

தனியார் பேருந்து விவகாரம்: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் சிவசங்கர் விளக்கம் என்ன?

அரசுப் பேருந்துகளை தனியார் மயமாக்கும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அரசுப் பேருந்துகள் நீக்கப்படும் என்றோ, பணியாளர்கள் குறைக்கப்படுவார்கள் என்பது முற்றிலும் வதந்தி என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், "சென்னை மாநகரில் தனியார் பேருந்துகளை இயக்கப்போவதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் சென்னை மாநகருக்குள் அரசு வழிதடங்களில் தனியார் பேருந்துகளை இயக்குவதில் உள்ள சாதக - பாதகங்கள் குறித்து ஆராய, ஆய்வு நிறுவனத்தை தேர்வு செய்யும் பொருட்டு டெண்டர் மட்டுமே கோரப்பட்டுள்ளது.

தனியார் பேருந்துகளுக்கான அரசாணை அ.தி.மு.க ஆட்சியில் போடப்பட்டது. உலக வங்கியின் கருத்து அடிப்படையிலேயே டெண்டர் கோரப்பட்டுள்ளது டெண்டர் மூலம் தேர்வு செய்யப்படும் ஆய்வு நிறுவனம் தனது அறிக்கையை மூன்று மாத காலத்திற்குள் வழங்கும். அந்த அறிக்கையை பரிசீலித்து அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

அதேபோல், அரசுப் பேருந்து தனியார் மயமாகிறது என்கிற பேச்சுக்கே இடமில்லை. ஏற்கனவே ஓடும் வழித்தடத்தில் பேருந்துகள் நிறுத்தப்படாது. அதேபோல, அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்பது தேவையற்ற வதந்தி.

நகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அரசு பேருந்துகள் அரசு பேருந்துகளாகவே இருக்கும். அரசு வழித்தடத்தில் தனியார் பேருந்துகள் இயங்கும் நடைமுறைகள் டெல்லி, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது" என தெரிவித்துள்ளார்.

Also Read: தமிழர்களின் பெருமை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ள கீழடி அருங்காட்சியகத்தின் 10 சிறப்புகள்!