Tamilnadu

தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் கொலை.. வதந்தி பரப்பிய பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு !

தமிழ்நாட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சில நாட்களாக வதந்தி பரவிவருகிறது. அதிலும் குறிப்பாக திருப்பூரில் பணியாற்றும் தொழிலாளர்களை சிலர் திட்டமிட்டு தாக்குவதாகவும், சிலரை கொலைசெய்ததாகவும் வீடியோ ஒன்று வைரலானது.

இந்த வீடியோ பரவி சில நேரத்திலேயே பாஜகவினர் இந்த வீடியோகளை திட்டமிட்டு சமூகவலைத்தளத்தில் பரப்பினர். அதிலும் அவர்கள் ஹிந்தி பேசிய காரணத்தால்தான் தாக்கப்பட்டதாக வடமாநில பாஜகவினர் கலவரத்தை உருவாக்கும் நோக்கில் வீடியோவை பரப்பி வந்தனர்.

இந்த வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சில ஹிந்தி ஊடகங்கள் இதனை உண்மை என நம்பி அப்படியே இந்த பொய் தகவலை செய்தியாக வெளியிட்டனர். மேலும், சில பத்திரிகையாளர்களும் இது உண்மை என நம்பி தங்கள் சமூகவலைத்தளங்களில் இதுதொடர்பாக கருத்துக்களை பதிவிட்டனர்.

அந்த வீடியோகளை ஆராய்ந்து பார்த்தபோது, அதில் சில பாஜக ஆளும் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. மற்றொரு வீடியோ ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தாக்கியவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

மேலும், இதுபோன்ற வீடியோக்கள் பரவும் தகவல் அறிந்ததும் தமிழக காவல்துறை சார்பில் உண்மை நிலை குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பீகார் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். இது போன்ற வதந்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பீகார் மாநில சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் இந்த வதந்தி வீடியோவை முன்வைத்து பிரச்சனையில் ஈடுபட்டனர். ஆனால் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் "தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, இது போலியானது என்று அறிக்கை அளித்துள்ளார். இரண்டு வீடியோக்களுமே போலியானவை.

பிகாரில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக இல்லை என்று காட்டவே இது செய்யப்பட்டுள்ளது. போலியான வதந்திகளை பரப்புவதே பாஜகவின் வேலை. இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் பிகார் அரசும் தமிழ் நாடு அரசும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்" என பதிலடி கொடுத்தார். மேலும், தமிழ்நாடு அமைச்சர் சி.வி.கணேசனும் இதுதொடர்பாக விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வடமாநிலத்தவர்கள் அச்சம் அடைந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவதாகவும் செய்திகள் பரவின. ஆனால் ஹோலி பண்டிகையை முன்னிட்டு அவர்கள் சொந்த ஊர் திரும்புவது பின்னர் தெரியவந்தது. மேலும், இது தொடர்பாக பேசிய வடமாநிலத்தவரும் தமிழ்நாட்டில் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், செய்திகளில் வெளியானது போல ஏதும் நடக்கவில்லை என்றும், பண்டிகை முடிந்து நாங்கள் வீடு திரும்புவோம் என்றும் தெரிவித்தனர்.

தமிழ்நாடு காவல்துறை சார்பிலும் இந்த பதற்றநிலையை குறைக்க திருப்பூரில் இருக்கும் வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் இந்தியில் பேசியதால் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரப்பிய உ.பி-ஐ சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ் மீது தமிழ்நாடு போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

அவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற போலி செய்திகளை நம்பவேண்டாம் என காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.

Also Read: ரயில் மோதி உயிரிழந்த பீகார் தொழிலாளி.. கொலைசெய்யப்பட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த போலிஸார்