Tamilnadu
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பரவிய வதந்தி.. அதிரடி நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு காவல்துறை !
தமிழ்நாட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சில நாட்களாக வதந்தி பரவிவருகிறது. அதிலும் குறிப்பாக திருப்பூரில் பணியாற்றும் தொழிலாளர்களை சிலர் திட்டமிட்டு தாக்குவதாகவும், சிலரை கொலைசெய்ததாகவும் வீடியோ ஒன்று வைரலானது.
இந்த வீடியோ பரவி சில நேரத்திலேயே பாஜகவினர் இந்த வீடியோகளை திட்டமிட்டு சமூகவலைத்தளத்தில் பரப்பினர். அதிலும் அவர்கள் ஹிந்தி பேசிய காரணத்தால்தான் தாக்கப்பட்டதாக வடமாநில பாஜகவினர் கலவரத்தை உருவாக்கும் நோக்கில் வீடியோவை பரப்பி வந்தனர்.
இந்த வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சில இந்தி ஊடகங்கள் இதனை உண்மை என நம்பி அப்படியே இந்த பொய் தகவலை செய்தியாக வெளியிட்டனர். மேலும், சில பத்திரிகையாளர்களும் இது உண்மை என நம்பி தங்கள் சமூக வலைதளங்களில் இதுதொடர்பாக கருத்துக்களை பதிவிட்டனர்.
அந்த வீடியோகளை ஆராய்ந்து பார்த்தபோது, அதில் சில பாஜக ஆளும் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. மற்றொரு வீடியோ ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தாக்கியவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
மேலும், இதுபோன்ற வீடியோக்கள் பரவும் தகவல் அறிந்ததும் தமிழக காவல்துறை சார்பில் உண்மை நிலை குறித்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு பீகார் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். இது போன்ற வதந்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பீகார் மாநில சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் இந்த வதந்தி வீடியோவை முன்வைத்து பிரச்னையில் ஈடுபட்டனர்.
ஆனால் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் "தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, இது போலியானது என்று அறிக்கை அளித்துள்ளார். இரண்டு வீடியோக்களுமே போலியானவை.
இந்த செய்திகள் பெரிதாக தற்போது சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது காவல்துறை தரப்பில் பொய் செய்தி பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து பத்திரிகை செய்தி ஒன்றையும் காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த செய்தி குறிப்பில், "புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல் இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் விஷமிகள் சிலரால் பரப்பப்பட்டுள்ளது. அப்படி பொய் செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153(A), 505(i)(b) கீழ் தெய்னிக் பாஸ்கர் பத்திரிக்கையின் ஆசிரியர் மீது ஒரு வழக்கும், திருப்பூர் மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 153(B), 505(ii)(b) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டபிரிவு 56(D) கீழ் தன்வீர் போஸ்ட் என்ற பத்திரிகையின் உரிமையாளர் முகமது தன்வீர் என்பவர் மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153, 153(A), 504, 505(1)(b), 505(1)(c), 505(2) கீழ் பிரசாந்த் உமராவ் என்பவர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இவர்களை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் உத்தரின் பெயரில் தனி படை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் இன்றி முழு பாதுகாப்புடன் அமைதியாக வசித்து வருகிறார்கள். அமைதியை சீர்குலைத்து பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பொய் செய்திகளை பரப்புவோர் பற்றிய விவரங்கள் காவல்துறையினரால் சேகரிக்கப்பட்டு வருகிறது அவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும் என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பொய் செய்தி பரப்பிய உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ் மீது தமிழ்நாடு போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?